Published : 18 Feb 2025 06:42 AM
Last Updated : 18 Feb 2025 06:42 AM

அமெரிக்காவின் மேலாதிக்கம்: அடுத்தடுத்த நகர்வுகளில் கவனம் அவசியம்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிலையில், அந்நாட்டுக்குப் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் பல முக்கிய நகர்வுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. எரிசக்தி, அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு எனப் பல்வேறு விவகாரங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான உரையாடல் நிகழ்ந்தது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டது இந்தப் பயணத்தின் மைல்கல். எனினும், வரி விதிப்பு முதல் சட்டவிரோதக் குடியேறிகள் வரை பல்வேறு விவகாரங்களில் டிரம்ப் காட்டிய கெடுபிடியை முன்னிறுத்தி, அதை மோடிக்கு எதிரான விமர்சனமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

தனது முந்தைய ஆட்சிக் காலத்தின்போது சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டிருந்த டிரம்ப், இந்த முறை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முதல் இந்தியா வரை பல நாடுகளுக்குமானதாக அதை விஸ்தரித்திருக்கிறார். இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் சமநிலையை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகிறார்.

‘வரிவிதிப்பு மன்னன்’ என்கிற அளவுக்கு இந்தியாவைப் பகிரங்கமாக விமர்சிக்கும் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு என்னும் பெயரில் பதிலடி வரி விதிப்பை முன்னெடுக்கிறார். அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வதைவிடவும், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதுதான் அதிகம். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த டிரம்ப் முனைகிறார்.

முன்னதாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் கூட்டறிக்கையில், பிரான்ஸ், இந்தியா, சீனா உள்ளிட்ட 61 நாடுகள் கையெழுத்திட்டிருந்த நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் அதில் கையெழுத்திடாமல் தவிர்த்துவிட்டன. ஏ.ஐ. தொழில்நுட்பச் சந்தையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதும் வெளிப்படை. இப்படியான சூழலில், நடைமுறை சார்ந்த அணுகுமுறை அவசியம் என்பதைப் பிரதமர் மோடி உணர்ந்துகொண்டிருக்கிறார்.

இந்தப் பயணத்தின்போது கையெழுத்தான அமெரிக்கா - இந்தியா இடையிலான 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், எஃப் - 35 ரக ஜெட் விமானங்களை - இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அமெரிக்கா வழங்குவது குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த விமானங்கள் குறைபாடு கொண்டவை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இது ஒரு முன்மொழிவு மட்டுமே; ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் இந்தியாவுக்கு என்று வழிமுறைகள் இருக்கின்றன என வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்திருக்கிறார்.

ரஷ்யாவிடம் இருந்து சகாய விலையில் எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்துவரும் இந்தியா, இனி அமெரிக்காவிடம் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அதிகத் தொலைவிலிருந்து கொண்டுவர வேண்டியிருப்பதால், அவற்றின் விலை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

அதேபோல், முறையான ஆவணம் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் 7.25 லட்சம் இந்தியர்கள் எதிர்கொண்டிருக்கும் நாடு கடத்தல் நடவடிக்கை இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதையும் இந்தியா உரிய ராஜதந்திர ரீதியில் கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

டிரம்ப்பின் புதிய அணுகுமுறைகள் பல்வேறு நாடுகளின் வணிகத்தில் மட்டுமல்லாமல், உள்விவகாரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. உண்மையில், அவசர கதியில் டிரம்ப் முன்னெடுக்கும் இந்த வரிவிதிப்பு காலப்போக்கில் அமெரிக்காவுக்கே பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் பேசப்படுகிறது.

கூடவே, இவ்விஷயத்தில் கனடா போன்ற நாடுகள் தங்கள் இசைவின்மையை அமெரிக்காவுக்கு உணர்த்தியிருக்கின்றன. ஆனால், இந்தியா இதை மிகக் கவனமாகவே அணுகுகிறது. டிரம்ப்புடனான சந்திப்புக்குப் பின்னர், இந்தியாவில் நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் அரசின் பங்கை மேலும் குறைப்பது, வணிகம் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்குவது என அடுத்தடுத்த நகர்வுகள் பிரதமர் மோடியால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மிகுந்த கவனத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x