Published : 29 Jan 2025 09:53 AM
Last Updated : 29 Jan 2025 09:53 AM

வேங்கைவயல்: விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நீதி கிடைக்குமா?

வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகை அண்மையில் சிபிசிஐடியால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் நீடித்துவரும் நிலையில், இடைக்கால விவரங்கள் சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சில குழந்தைகளுக்கு 2022 டிசம்பர் 24இல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் கூறியதன்பேரில், அப்பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து பார்க்கப்பட்டபோது குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தையான கனகராஜ் டிசம்பர் 26, 2022இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையில் புகார் அளித்தார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி போன்றோர் வந்தபோது, இப்பகுதியில் பட்டியல் சாதியினர் மீது பாகுபாடு காட்டும்விதத்தில் இரட்டைக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும் அங்குள்ள  அய்யனார் கோயிலில் பட்டியல் சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கண்டறியப்பட்டது. சாதிக் கொடுமைகளில் ஒன்றாக - குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருக்கலாம் என்கிற பேச்சுகள் எழுந்தன.

வழக்கு தேசிய அளவில் கவன ஈர்ப்புக்கு உள்ளான நிலையில், அதுவரை விசாரித்துவந்த வெள்ளனூர் காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. 197 கைபேசி எண்களும் 87 கைபேசி கோபுரங்கள் சார்ந்த தரவுகளும் ஆராயப்பட்டன; 397 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்; பலரது டிஎன்ஏ மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டன. காவல் துறை, இந்தப் பிரச்சினையில் மிக மந்தமாகச் செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பட்டியல் சாதியினரையே குற்றவாளிகளாக்க முயல்வதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில்தான் வேங்கைவயலைச் சேர்ந்த முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவர் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. வேங்கைவயலை உள்ளடக்கிய முத்துக்காடு ஊராட்சியின் தலைவருடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக அவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடிநீரில் மனிதக் கழிவைக் கலப்பதைக் காட்டும் ஒரு காணொளியும் உறவினர்களுடன் பேசிய உரையாடல்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

காவல் துறையின் இந்தச் செயல்பாட்டைத் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளே விமர்சித்திருக்கின்றன. வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றவும் வலியுறுத்துகின்றன. வழக்கில் நேரடி சாட்சி இல்லாத நிலையில், முக்கிய ஆதாரமான குடிநீர்த் தொட்டி இடிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, புகார் அளித்தவருக்கு விசாரணை குறித்து எந்த ஒரு தகவலும் கூறப்படாமல் நேரடியாக நீதிமன்றத்தில் விவரங்கள் கூறப்பட்டதும் விசாரணை முற்றுப்பெறாதபோதே காணொளி ஊடகங்களில் ஒளிபரப்பானதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

இந்த வழக்கின் அதிர்ச்சியூட்டும் தன்மையைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, காவல் துறையின் நடவடிக்கையில் உள்ள போதாமைகளைப் புறந்தள்ள முடியாது. பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல் துறை கூறும் நிலையில், முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் மீது அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயமும் உள்ளது.

குற்றவாளிகள் யாராக இருப்பினும், இத்தகைய ஒரு குற்றத்தைச் செய்ததன் மூலம் இழிவிலும் இழிவான ஒரு காரியத்தை அவர்கள் செய்யத் துணிந்தவர்கள்தான் என்பதில் எந்தக் கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. இத்தகைய சூழலில், வழக்கு விசாரணை நேர்மையாக, வெளிப்படையாக நடைபெறுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x