Last Updated : 27 Dec, 2024 06:26 AM

 

Published : 27 Dec 2024 06:26 AM
Last Updated : 27 Dec 2024 06:26 AM

தேர்தல் முதல் ஃபெஞ்சல் வரை | தமிழகம் 2024

2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு சந்தித்த முக்கிய நிகழ்வு மக்களவைத் தேர்தல். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையில் புதிய கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனைப் போட்டி நிலவியது. 2018இலிருந்து தொடரும் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அதிமுக கூட்டணி 23.05% வாக்குகளையும், பாஜக கூட்டணி 18.28% வாக்குகளையும், நாம் தமிழர் 8.2% வாக்குகளையும் பெற்றன.

விடுதலைச் சிறுத்தைகளும் நாம் தமிழர் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உயர்ந்தன. பாஜக ஓரளவு வளர்ந்திருப்பதை அக்கட்சித் தலைமையிலான கூட்டணி வாங்கிய வாக்குவங்கி நிரூபித்தது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கி, முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடத்தினார்.

ஆளுநர் சர்ச்சை: தமிழ்நாடு சட்டப்​பேர​வையில் 2023இல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை சர்ச்​சையான நிலையில், 2024இல் உரையின் தொடக்​கத்தை மட்டுமே வாசித்து​விட்டு மற்றவற்றைத் தவிர்த்​தார். இதையடுத்து, அரசு தயாரித்த உரை மட்டும் பேரவைக் குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்​ட​தால், பேரவையி​லிருந்து ஆளுநர் வெளியேறி​னார். ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்​பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார்.

அவருடைய தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்​தி​வைத்த நிலையில், அவரை மீண்டும் அமைச்​ச​ராக்க ஆளுநர் மறுத்​தார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்த நிலையில், பொன்முடிக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து​வைத்​தார். துணைவேந்தர் நியமனங்​களில் தேடுதல் குழுவை அமைப்​பதில் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே நிலவிய பனிப்​போர், பட்டமளிப்பு விழாவை அமைச்​சர்கள் புறக்​கணித்தது என ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் நீடித்தது.

துணை முதல்வரான உதயநிதி: விளையாட்டு - இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்​வ​ராக்க வேண்டும் என்று திமுக​வினர் பேசிவந்த நிலையில், ‘கோரிக்கை வலுத்​திருக்​கிறது; பழுக்க​வில்லை’ என்று கருணாநிதி பாணியில் முதலமைச்சர் மு.க.ஸ்​டாலின் தெரிவித்​திருந்​தார். எனினும், செப்.28இல் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.

திமுக ஆட்சியில் எப்போதும் முக்கி​யத்துவம் வாய்ந்த துறையைக் கவனிக்கும் பொன்முடி​யிட​மிருந்து உயர்கல்வித் துறை பறிக்​கப்​பட்டது; வனத் துறைக்கு அவர் மாற்றப்​பட்​டார். உயர்கல்வித் துறை முதல் முறையாகப் பட்டியல் சாதியைச் சேர்ந்த கோவி.செழியனுக்கு வழங்கப்​பட்டது.

கல்வித் துறையில் மைல்கல்: இந்தியாவின் முன்னோடித் திட்டமாக முதலமைச்​சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக 2022-2023இல் 36 அரசுப் பள்ளி​களில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டிருந்தது. பிறகு, 2023-2024இல் 1,50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1,649 பள்ளி​களுக்கு விரிவாக்கம் செய்யப்​பட்டது. இந்தக் கல்வி​யாண்டில் இத்திட்டம் கிராமப்பு​றங்​களில் உள்ள 30,992 அரசு உதவிபெறும் பள்ளி​களுக்கும் விரிவுபடுத்​தப்​பட்டது. தமிழ்​நாட்டுக்​கெனப் புதிய கல்விக் கொள்கையை வகுக்க அமைக்​கப்பட்ட நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு, தனது பரிந்​துரைகளை முதலமைச்சர்

மு.க.ஸ்​டா​லினிடம் சமர்ப்​பித்தது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும், பள்ளி-கல்​லூரி​களில் சேர எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பன உள்ளிட்ட அம்சங்கள் பரிந்​துரையில் இடம்பெற்றன. ஒருங்​கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான் - எஸ்.எஸ்​.ஏ.), தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு விடுவிக்க​வில்லை என வெளியான தகவல் சர்ச்​சை​யானது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்​கத்தை வெளிப்​படுத்தும் வகையில் 2022இல் தொடங்​கப்பட்ட ‘பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்’ என்கிற திட்டத்தில் இணைந்​தால்​தான், எஸ்.எஸ்.ஏ. திட்டத்​துக்கு நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு நிபந்தனை விதிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்​சாட்​டிவரு​கிறது.

உயர் கல்வி: அரசு - அரசு உதவி பெறும் பள்ளி​களில் படித்து, உயர் கல்வி கற்கும் மாணவர்​களுக்கு, மாதந்​தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிடும் தேசிய உயர் கல்வி நிறுவனங்​களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 18 கல்வி நிறுவனங்கள் தமிழ்​நாட்​டிலிருந்து இடம்பிடித்தன. ‘ரூட்டு தல’ பிரச்சினை கல்லூரி மாணவர்​களிடையே இன்னும் ஓயாத நிலையில், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்​களால் தாக்கப்​பட்டு மரணமடைந்தது அதிர்ச்​சி​யளித்தது.

கள்ளச்​சாராய மரணங்கள்: கள்ளக்​குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்ற இடத்தில் கள்ளச்​சா​ரா​யத்தைக் குடித்​ததில் 5 பெண்கள் உள்பட 69 பேர் உயிரிழந்​தனர். சாராயத்தில் கலந்திருந்த மெத்தனால் வேதிப்​பொருளே காரணம் என்பது தெரிய​வந்தது. உயிரிழந்​தவர்கள் குடும்பத்​துக்கு அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்​பட்டது விமர்​சனத்​துக்கு உள்ளானது. இந்த விவகாரம் மது விலக்கு பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கிவைத்தது.

தொழில்: ‘உலக முதலீட்​டாளர்கள் மாநாடு’, ஜன. 7, 8இல் சென்னையில் நடைபெற்றது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்​களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்​திருப்பது, ஸ்டார்ட் அப் நிறுவனங்​களுக்குக் கிடைக்கும் முக்கி​யத்து​வத்தை உணர்த்து​கின்றது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்கா​வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்​டாலின் மேற்கொண்ட 17 நாள் அரசு முறைப் பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கும் அதிகமான முதலீடு​களுக்கான ஒப்பந்​தங்கள் கையெழுத்​தாகின.

மின்னணுப் பொருள் உற்பத்​தியில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்​துவந்த தொழிலா​ளர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்​டிருப்பது ஒரு கசப்பான நிகழ்வு.

ஆணவக் கொலை: பட்டியல் சாதி இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, தஞ்சாவூர் அருகே நெய்வ​விடு​தியைச் சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரே கொலைசெய்தது ஆணவக் கொலையின் கோர முகத்தைக் காட்டியது. பள்ளிக்​கரணையில் நிகழ்ந்த சாதி ஆணவப் படுகொலையும் பேசுபொருளானது. 2012இல் இந்தியச் சட்ட ஆணையம் ஆணவக் கொலைக் குற்றங்​களுக்குத் தனிச் சட்டம் இயற்றப் பரிந்​துரைத்தது. ஆனால், அப்படியொரு சட்டத்தை இயற்ற அதிமுக, திமுக அரசுகள் முன்வருவதில்லை என்பது கவலைக்​குரியது.

பிணையில் வந்த செந்தில் பாலாஜி: அதிமுக ஆட்சியில் போக்கு​வரத்துத் துறை அமைச்சராக இருந்த​போது, அரசு வேலை வாங்கித் தருவதாகச் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் 2023இல் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்​ச​ராகத் தொடர்ந்​தார்.

பிணை பெறுவதில் அமைச்சர் பதவி தடையாக இருப்​ப​தாகக் கருதிய அவர், பிப். 12இல் ராஜினாமா செய்தார். செப். 27இல் நிபந்​தனைப் பிணை கிடைத்தது. அடுத்த சில நாள்களிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்​ச​ராக்​கப்​பட்டது விமர்​சனத்​துக்கும் வழிவகுத்தது. பொன்முடியும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்​துக்குள் வந்தார்.

ஃபெஞ்சல் புயல்: வடகிழக்குப் பருவ மழைக்​காலம் அக்டோபரில் தொடங்​கியதுமே வட மாவட்​டங்களான சென்னை, செங்கல்​பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்​டங்கள் பாதிப்பை எதிர்​கொண்டன. சென்னையில் முன்பைப் போல அல்லாமல் வெள்ளப் பாதிப்புகள் குறைந்​திருந்தன. நவம்பரில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்​சேரிக்கும் மரக்காணத்​துக்கும் இடையே கரையைக் கடந்தது.

இதன் விளைவாக விழுப்புரம், கடலூர், கள்ளக்​குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்​டங்​களும் புதுச்​சேரியும் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டன. திருவண்ணா​மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சிறார் உள்பட 7 பேர் உயிரிழந்தது வேதனை​யானது. இப்படியாக, தமிழ்​நாட்டுக்குக் கலவையான ஓர் ஆண்டாக 2024 நிறைவடைந்​துள்​ளது.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x