Published : 21 Dec 2024 06:26 AM
Last Updated : 21 Dec 2024 06:26 AM
சென்னை: போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை, ரவுடிகள் மோதல், என்கவுன்ட்டர் சர்ச்சை, சைபர் குற்ற மோசடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் காவல் துறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்:
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
போதை மற்றும் புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க 2022 ஆக. 10-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில், புதிய உக்திகள் வகுக்கப்பட்டன. 2023-ல் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14,770 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 23,364 கிலோ கஞ்சா, 0.953 கிலோ ஹெராயின், 39,910 போதை மாத்திரைகள் மற்றும் 1,239 கிலோ மற்ற போதைப் பொருட்கள் (கஞ்சா சாக்லேட், மெத்தம்பெட்டமைன், ஆம்பிடாமைன் மற்றும் மெத்தாகுலான்) ஆகியவை கைப்பற்றப்பட்டன.
நடப்பாண்டு ஆகஸ்ட் வரை 6,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9,731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும், போதைப் பழக்கத்துக்கு எதிராக இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தொடர் நடவடிக்கையால் தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் சங்கிலியை தடுத்துள்ளோம்.
முன் விரோதம், அரசியல் கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
ரவுடிகள் தொல்லை, அரசியல் கொலைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டனர். மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் ஆதாயத்துக்காக பொய்யான தகவல்களைப் பரப்பினர். கடந்த ஆண்டுகளைவிட கொலைகள் குறைந்துள்ளன. அரசியல் கொலைகள் என்று குறிப்பிடப்பட்ட சம்பவங்களில், தனிநபர் முன்விரோதமே அடிப்படைக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக கையாளப்படுகிறது. 2019-ல் 1,678 கொலை வழக்குகள் என்ற உச்சத்தை எட்டிய நிலையில், நடப்பாண்டு செப்டம்பர் வரை 1,183 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதற்கு போலீஸாரின் தொலைநோக்குப் பார்வையும், தொடர் நடவடிக்கைகளுமே காரணம்.
என்கவுன்ட்டருக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
என்கவுன்ட்டர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை அல்ல. சூழ்நிலை, குற்றவாளியின் செயல்பாடுகள் மற்றும் வழக்கின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்தும், காவல் துறையினரின் தற்காப்புக்காகவும் என்கவுன்ட்டர் நடத்தப்படுகிறது. அதேநேரத்தில், ரவுடிகளைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொலை வழக்குகளில் போலி குற்றவாளிகள் சரணடைவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உளவுத் துறை கண்காணிப்பு மூலமும் ரவுடிகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன.
காவல் துறையில் சைபர் செக்யூரிட்டி, ஏஐ (AI) தொழில்நுட்பம் போன்ற புதிய பிரிவுகள் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதா?
ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த புதிய பிரிவு தொடங்குவதற்கான முன்வரைவு தற்போது இல்லை. சைபர் குற்றங்களைக் கையாள நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சைபர் மோசடிகளை தடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதுடன், இழந்த பணத்தை மீட்டுத் தருகிறோம்.
மாவட்ட வாரியாக உள்ள வெவ்வேறு பிரச்சினைகளை காவல் துறை எவ்வாறு கையாள்கிறது?
அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப சமூக, பொருளாதார, மக்கள்தொகை அடிப்படையிலான பிரச்சினைகள், விவகாரங்கள் குறித்து தரவுகள் முன்கூட்டியே சேகரிக்கப்பட்டு, டிஜிபி அலுவலகத்தில் பாரமரிக்கப்படுகின்றன. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்று எதை அடிப்படையாக வைத்து சொல்கிறீர்கள்?
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், புலம்பெயர் தொழிலாளர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்பாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். கொலை, ஆதாயக் கொலைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களிலேயே தமிழ்நாடு குற்றச் சம்பவங்கள் குறைவாக உள்ள மாநிலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
நான் டிஜிபியாகப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில், புதிய முன்னெடுப்புகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, அவை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தரும் வகையில் `கூகுள் சீட்' உருவாக்கப்பட்டு, எஸ்.பி., ஏடிஎஸ்பி தகுதியிலான அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறையில் இருந்தவாறே சதித்திட்டம் தீட்டி, அடியாட்கள் மூலம் குற்றம் செய்யும் நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
ஆதரவற்றோர், முதியோரைப் பாதுகாக்க `காவல் கரங்கள்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார் மனுக்களுக்கு உடனடியாக ரசீது வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேலைக்காக கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று, சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள் மீட்கப்பட்டதுடன், உள்நாட்டு முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவலர் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதேபோல, பெரிய மாநிலங்களில் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில், குறைவான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழகம் என்று தேசிய குற்ற ஆவணப் காப்பக தரவுகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு, அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடன் வாழும் சூழல் உருவாக்கப்பட்டு, கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக அடிப்படையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உருவாகப் பங்காற்றி வருவது திருப்தி அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT