Published : 19 Dec 2024 06:59 AM
Last Updated : 19 Dec 2024 06:59 AM

ஏற்றம் கண்டதா இந்தியப் பொருளாதாரம்? | கற்றதும் பெற்றதும் 2024

இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த ஆண்டு எளிதான ஆண்டாக அமையவில்லை என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். 2024 முதல் 2025 வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் (அதாவது ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான காலாண்டில்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.7% வளர்ச்சி கண்டது.

இது கடந்த ஐந்து காலாண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி என்றாலும், உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகள், பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் அடிப்படையில் வலுவாக இருக்கிறது என்றே கருதப்பட்டது. ​முதல் காலாண்​டில் செலவு சார்ந்த, உற்பத்தி சார்ந்த காரணிகள் இரண்​டும் சிறப்​பாகச் செயல்​பட்டன. நுகர்​வுச் செலவு (7.4% அதிகரித்தது), மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (7.5%), ஏற்றுமதி (8.7%) ஆகியவை வலுவாக இருந்தன.

உற்பத்​தித் துறை​யில் எதிர்​பார்த்​ததைவிட வலுவான வளர்ச்சி இருந்​தது. நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் உற்பத்​தித் துறை 7% வளர்ச்​சி​யடைந்​தது. கட்டு​மானத் துறை​யும் 10.5% வளர்ச்​சி​யுடன் வலுவாகச் செயல்​பட்​டது. ஆனால், இரண்​டாவது காலாண்​டின் முடி​வில் செப்​டம்​பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீத​மாகச் சரிந்​தது.

பின்னணி என்ன? - வளர்ச்சி குறைவதற்​குப் பல காரணிகள் உள்ளன. முதலா​வ​தாக, பலவீனமான வெளி​நாட்டுத் தேவை காரண​மாகப் பொருள்​களின் ஏற்றுமதி பாதிக்​கப்​பட்​டது. அதிக இறக்​கும​தி​யால், வர்த்​தகப் பற்றாக்​குறை அதிகரித்​தது.

அதிகரித்த புவி​சார் நிச்​சயமற்ற தன்மை​கள், எரிசக்தி விலை வர்த்​தகப் பற்றாக்​குறையை மேலும் அதிகப்​படுத்​தி​யது. இந்திய பங்கு​களில் இருந்து வெளி​நாட்டு முதலீட்​டாளர்கள் குறிப்​பிடத்​தக்க அளவு வெளி​யேறினர். அதே நேரத்​தில், அந்நிய நேரடி முதலீட்டு வரத்து சீராக வளர்ந்தது ஒரு நேர்​மறையான அம்சம்; இந்தியா​வின் அந்நியச் செலாவணி கையிருப்பும் 2024இல் 64.8 பில்​லியன் டாலர் அதிகரித்​தது.

இரண்​டாவ​தாக, நுகர்​வோர் செலவின சக்தி​யைக் (Consumer spending) குறைப்​ப​தில் பணவீக்கம் குறிப்​பிடத்​தக்க காரணியாக இருந்​தது. அக்டோபரில், சில்லறை உணவுப் (Retail food) பணவீக்கம் 10.87% ஆகவும், ஒட்டுமொத்தப் பணவீக்கம் 6.21% ஆகவும் இருந்தன. இது இந்திய ரிசர்வ் வங்கி நிர்​ண​யித்த இலக்கான 2-6% வரம்​பைவிட அதிகம்.

கோவிட்-19 தொற்று​நோய்க்​குப் பிறகு முதல் முறையாக முந்தைய காலாண்​டில் ஊதியங்கள் சுருங்​கின. ஊதிய வளர்ச்சி, பணவீக்​கத்​தின் காரணமாக ஊதியத்​தின் மதிப்​பில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணிகள் நுகர்​வோர் செலவின சக்தி​யைக் குறைத்​த​தால் நாட்​டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்​கப்​பட்​டது. குறைந்த நுகர்​வோர் செலவின சக்தி​யின் தாக்கம் கடந்த காலாண்​டில் நிறுவன லாபங்​களில் பிரதிபலித்​தது.

சுதா​ரித்​துக்​கொண்ட எம்.பி.சி. பணவீக்க அபாயங்களை உணர்ந்து, ரிசர்வ் வங்கி தனது சொந்த வளர்ச்​சிக் கணிப்பு​களைக் கீழ்​நோக்​கித் திருத்​தி​யுள்​ளது. 2025 நிதி​யாண்​டுக்கான இந்தியா​வின் ஜிடிபி வளர்ச்​சிக் கண்ணோட்டம் 7.2% இலிருந்து 6.6% ஆகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது. நிதிக் கொள்​கைக் குழு (MPC) டிசம்பர் கூட்​டத்​தில் அதன் நிலைப்​பாட்டை ‘நடுநிலைக்கு’ மாற்றியது. இலக்​குக்​குள் பணவீக்​கத்​தைக் கட்டுப்​படுத்து​வதற்கான அதன் பொறுப்பை இந்தக் கண்ணோட்டம் காட்டு​கிறது.

இதன் விளை​வாக, டிசம்பர் நிதிக் கொள்​கைக் குழுக் கூட்​டத்​தில், கொள்கை வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) ரிசர்வ் வங்கி குறைக்​கும் என்கிற எதிர்​பார்ப்பு பொய்த்​தது. மாறாக முந்தைய காலாண்​டில் இருந்த ரெபோ விகிதம் மாற்​றப்​ப​டா​மல், 6.5% ஆக இருக்​கும் என அறிவிக்​கப்​பட்​டது. அடுத்த காலாண்​டில் மொத்த நுகர்​வோர் செலவினங்​களில் இந்த நிலைப்​பாட்​டின் தாக்​கத்தை நாம் உணர்​வோம்.

மூன்​றாவ​தாக, தொழிலாளர் சந்தை சில அடிப்படை முரண்​பாடுகளை வெளிப்​படுத்​தி​யது. தொழிலாளர் சந்தை​யில் சில சுவாரசி​யமான போக்​கு​களைக் காலமுறை அடிப்​படையிலான தொழிலாளர் படை கணக்​கெடுப்பு (PLFS) எடுத்​துக்​காட்டு​கிறது. சமீபத்திய 2024 அறிக்கை​யின்​படி, பெருந்​தொற்றுக் காலத்​தில் சரிந்த மொத்த வேலை​வாய்ப்​பில் சம்பளம் பெறும் தொழிலா​ளர்​களின் பங்கு ஒரு சாதாரண வளர்ச்​சி​யைப் பதிவுசெய்திருக்​கிறது.

எடுத்​துக்​காட்​டாக, 2019 முதல் 2020 வரை, உற்பத்தி - சேவைத் துறை​களில் சம்பளம் பெறும் வேலைகளின் பங்கு மொத்த வேலைகளில் கிட்​டத்​தட்ட 23% ஆக இருந்​தது. கோவிட் பெருந்​தொற்றுப் பரவலுக்​குப் பிறகு, இந்தப் பங்கு 21% ஆகக் குறைந்​தது. சமீபத்திய 2023-2024 காலமுறைத் தொழிலாளர் படை கணக்​கெடுப்​பின் தரவு​களின்படி மொத்த வேலைகளில் சம்பளம் பெறும் வேலைகளின் பங்கில் 21.7% என்கிற மிதமான அதிகரிப்பு பதிவானது.

துறை​களுக்​கிடையேயான சிதைவைப் பார்க்​கும்​போது, ஒருபுறம் உற்பத்​தித் துறை​யில் வேலை​வாய்ப்​பின் பங்கு 2019-20இல் 11.2% ஆக இருந்து 2023-24இல் 11.4% ஆக அதிகரித்​துள்ளது. இதேபோல், சேவைத் துறை​யில், ‘பிற சேவை​கள்’ (Business and Professional services) சார்ந்த துணைத் துறை​யில் மொத்த வேலை​வாய்ப்​பில் இதன் வேலை​வாய்ப்புப் பங்கு 2019-20 மற்றும் 2023-24ஆம் ஆண்டு​களில் அதன் நிலையான வளர்ச்​சி​யைத் (11.9%) தொடர்​கிறது.

மறுபுறம், அதிக வேலை உருவாக்​கும் துறைகள் கட்டு​மானம் (2023-24இல் 12.2%), வர்த்தகம், ஹோட்டல்கள், உணவகங்கள் துறை (2023-24 இல் 12.2%) ஆகும். ஆனால் இந்தத் துறைகள் முறை​சாரா, நிச்​சயமற்ற, சுயதொழில் சார்ந்த வேலைகளின் அதிகச் செறிவைப் பதிவுசெய்​துள்ளன. இத்தகைய வேலைகள் ஊதிய வேலைகளுடன் தொடர்​புடைய நன்மை​களை​யும், எந்தச் சமூகப் பாது​காப்​பை​யும் வழங்​காது.

ஏற்றத்​தாழ்​வின் விளைவுகள்: மேற்​கண்ட இரண்டு தரவு​களும், தொழிலாளர் சந்தை​யில் உள்ள அடிப்​படைக் கட்டமைப்​பில் உருவாகி​யுள்ள ஏற்றத்​தாழ்​வைக் காட்டு​கின்றன. ஒருபுறம், உற்பத்தி - சேவைகள் (குறிப்பாக ‘பிற சேவை​கள்’ துணைத் துறை) போன்ற துறைகள் வேலைகளில் தேக்​கநிலை வளர்ச்​சி​யைப் பதிவுசெய்​துள்ளன. மறுபுறம் கட்டு​மானம், ஹோட்​டல்கள் - உணவகங்​கள், விவசாயம் போன்ற வேலை​வாய்ப்பை உருவாக்​கும் துறைகள் முறை​சாரா, சாதாரண, தரம் குறைந்த வேலைகளையே உருவாக்கு​கின்றன.

தொழிலாளர் சந்தை​யில் ஏற்பட்​டுள்ள இந்த அடிப்படை முரண்​பாடுகள் நீண்ட கால வளர்ச்​சிப் பாதை​யில் உள்ள சிக்​கல்களை எடுத்​துக்​காட்டு​கின்றன. தற்போதைய வளர்ச்​சிப் பாதை​யானது, பொருளாதார வளர்ச்​சி-வேலை​வாய்ப்பு உருவாக்​கம்​-வேலைகளின் தரம் ஆகிய​வற்றுக்கு இடையே உள்ள அடிப்படை முரண்​பாட்​டைத் தெளிவாக வெளிப்​படுத்​தி​யுள்​ளது. இந்தியா​வின் மொத்த உள்நாட்டு உற்பத்​தி​யில் தொழிலா​ளர்​களுடைய ஊதியப் பங்கில் ஏற்பட்​டுள்ள நீண்​ட​காலச் சரிவு இத்தகைய முரண்​பாட்​டைப் பிரதிபலிக்​கிறது.

2024ஆம் ஆண்டு வளர்ச்​சி​யில் ஏற்பட்​டுள்ள இந்தத் தடுமாற்​றம், இந்தியா​வின் பொருளாதார வளர்ச்​சி​யில் உள்ள அடிப்படை முரண்​பாடுகள் ஏற்படுத்​தி​யுள்ள தாக்​கத்​தின் எச்சரிக்கை சமிக்​ஞை​யாகப் பார்க்​கப்பட வேண்​டும். பொருளாதார வளர்ச்​சி​யின் அளவின் மீது மட்டுமே கவனம் செலுத்து​வதற்​குப் பதிலாக, ஏற்றத்​தாழ்வு​களால் வளர்ச்​சி​யில் ஏற்படும் அபாயங்​களைக் குறைப்​ப​தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்​டும்.

அனைத்து அரசியல் சித்தாந்​தங்​களி​லும் பொருளா​தார, சமூகச் சமத்து​வ​மின்​மை​யால் பொருளாதார வளர்ச்​சிக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்த ஒருமித்த கருத்து உள்ளது. சமத்து​வ​மற்ற வளர்ச்சி என்பது பொருளா​தா​ரம், அரசி​யல் ஆகிய இரண்டு துறை​களுக்​கும் நிச்​சயமாக எ​திர்மறை ஆபத்​தையே ஏற்​படுத்​தும். எனவே, இந்தியா​வின் வளர்ச்சி உத்​தி​யானது வளர்ச்​சி-வேலை​வாய்ப்பு ​முரண்​பாட்டை மீண்​டும் உரு​வாக்கு​வதைத் தவிர்க்​கும்​ வகை​யில்​ வகுக்​கப்​பட வேண்​டும்​!

- தொடர்புக்கு: raghav.srinivasan@apu.edu.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x