Published : 19 Dec 2024 03:05 AM
Last Updated : 19 Dec 2024 03:05 AM
மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற பொதுவான விதிப்படி, நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கடந்த 2021 ஏப்ரலில் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தபோது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில், மாரடைப்பால் காலமானார்.
அப்போது ஏற்பட்ட காலியிடத்தில் போட்டியிட மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கியபோது, அந்த இடத்தில் ஈவிகேஎஸ். இளங்கோவனை போட்டியிட வலியுறுத்தினர். அவர் தேர்தலில் நிற்க விரும்பவில்லை என்று தெரிவித்து, வேறு யாருக்காவது சீட் கொடுக்கலாம் என்று கூறியபோது, அவர்தான் போட்டியிட வேண்டும் என்று பிரதான கூட்டணி கட்சியான திமுக தரப்பில் கட்டாயப்படுத்தியதன் பேரில், விருப்பமின்றி அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இது அரசியல் வட்டாரம் அறிந்த உண்மை.
இந்த தேர்தலில் போட்டியிடும்போது இளங்கோவனுக்கு வயது 72. இரண்டு ஆண்டுகள்கூட பதவியில் இல்லாத நிலையில் சமீபத்தில் அவர் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளரும் இன்னும் 17 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். ஒரே தொகுதிக்கு 5 ஆண்டுகளுக்குள் 3 முறை தேர்தல் நடைபெறுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, எந்த வேட்பாளரை நிறுத்தினாலும், அவரை வெற்றிபெறச் செய்ய முடியும் என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், அந்த வேட்பாளரின் பணியாற்றும் திறன், வயது, மக்களுக்கு சேவையாற்றக் கூடிய உடல் திடகாத்திரம் ஆகியவற்றையும் அடிப்படை தகுதியாக பார்த்து வேட்பாளரை நிறுத்துவதே மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக இருக்க முடியும். இத்தகைய தகுதி, திறமையுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும்போது, அவர்களை புறந்தள்ளி, வேட்பாளர்களை தேர்வு செய்வது நல்ல அரசியல் ஆகாது.
திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியிலும் இளைஞர்களுக்கு பஞ்சமில்லை. தமிழகத்தில் உள்ள 6.27 கோடி வாக்காளர்களில், 20-29 வயதில் 1.06 கோடி பேர், 30-39 வயதில் 1.29 கோடி பேர் என மொத்தம் 2.35 கோடி இளைஞர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 37 சதவீதம் உள்ள இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பளித்து தேர்தலில் போட்டியிடச் செய்வதே மக்களுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கடமையாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT