Published : 10 Dec 2024 04:41 AM
Last Updated : 10 Dec 2024 04:41 AM
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், 66 சதவீத வணிக நிறுவனங்கள் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கொடுத்துள்ள தகவல் கிடைத்துள்ளது. அரசுக்கு பொருட்களை விநியோகம் செய்ய, ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, ஒப்பந்தங்களுக்கு தகுதி பெற, நிறைவேற்றிய பணிகளுக்கு பணம் பெற என பல விஷயங்களுக்காக அவர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
18 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தியைப் பார்த்து பொதுமக்கள் யாரும் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். ஏனென்றால், அரசின் சேவைகளைப் பெற பல நேரங்களில் ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுத்த அனுபவம் அவர்களது நினைவுக்கு வரும். அதேநேரம், 16 சதவீதம் பேர் லஞ்சம் எதுவும் கொடுக்காமல் அரசின் சேவைகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பொதுமக்களை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. லஞ்சம் கொடுக்காமல் அரசு சேவைகளை பெற்றவர்களை ஆராய்ந்தால் அவர்கள் தங்களுக்கு இருக்கும் ஏதாவது ஒரு செல்வாக்கைப் பயன்படுத்தி இருப்பார்கள். இந்த வாய்ப்பு அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்காது.
லஞ்சம் அதிகம் புழங்கும் துறைகளாக பொதுப்பணித்துறை, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், பதிவுத்துறை, வணிகவரி, கனிமவளம், மாநகராட்சி ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. லஞ்சத்தை ஒழிப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், எந்த துறையிலும் லஞ்சம் குறைந்தபாடில்லை. பொதுவாக பொதுமக்கள் நேரடியாக தொடர்புகொள் ளும் துறைகளில்தான் அதிக லஞ்சம் புழங்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால், பொதுமக்களையும், அரசு அதிகாரிகளையும் சந்திக்க விடாமல், இணைய வழியாக சேவைகளுக்கு விண்ணப்பித்து சான்றிதழ்கள், உரிமம், உத்தரவுகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்ற வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி உள்ளன. அதற்காக இ-சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தப்படுகின்றனர். ஆனால், பெரும்பான்மையான பணிகளுக்கு இ-சேவை மையங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் இடங்களாக மட்டுமே செயல்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகல் எடுத்துக் கொண்டு மீண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்திக்கும்படி பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அரசு அதிகாரிகளை சந்திக்காமல் சேவையைப் பெற முடியாது என்ற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நடைமுறை, இ-சேவை மையங்கள் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது. தொழில்நுட்ப வசதிகளை இன்னும் மேம்படுத்தி அரசு அதிகாரிகளை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய தேவையே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். ஒரு சேவையைப் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தால், அதன் முன்னேற்றம், தற்போதைய நிலை, குறைகள் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். குறைகள் இருந்தால், குறுஞ்செய்திகள் வாயிலாக தகவல் தெரிவித்து சரிசெய்யப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் விண்ணப்பித்த விவரங்களை எடுத்துக் கொண்டு சென்று அதிகாரிகளை சந்திக்கும் நிலையை உருவாக்கக் கூடாது. அந்த தொடர்பை துண்டித்தால் நிச்சயம் லஞ்சம் ஒழியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT