Last Updated : 05 Dec, 2024 05:18 AM

 

Published : 05 Dec 2024 05:18 AM
Last Updated : 05 Dec 2024 05:18 AM

போதைப் பொருளை தடுக்க கூட்டு முயற்சி தேவை!

கோப்புப்படம்

அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 டன் போதைப் பொருளை இந்திய கடலோர காவல் படையினர் சமீபத்தில் கைப்பற்றினர். அடுத்த சில நாட்களில், கடற்பகுதியில் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்புள்ள 5 டன் போதைப் பொருளை இந்திய கடற்படை பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தது.

இது நடந்து சில நாட்களிலேயே இலங்கை கடற்படையின் தகவலின்பேரில் அரபிக்கடல் பகுதியில் ஒரு மீன்பிடி படகில் 6,016 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்திய கடற்படை, கடலோர காவல் படை இணைந்து நடத்திய வேட்டையில் இந்த போதைப் பொருள் சிக்கியுள்ளது. அந்த மீன்பிடி படகு மியான்மரை சேர்ந்தது என்று தெரியவந்தது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் என்று கூறப்படுகிறது. இதுவரை 12,875 கிலோ அளவுக்கு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கூட போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுபோன்ற சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வேட்டைகள், அதுவும் நமது மாநிலத்தை ஒட்டிய கடல் பகுதியில் நடப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போதைப் பொருள் கடத்துபவர்களிடம் செயற்கைக்கோள் மூலம் இயங்கும் தொலைபேசி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளில் போதைப் பொருட்களை அவர்கள் பதுக்கி எடுத்துச் செல்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கை கடற்படை வான்வழி விமான கண்காணிப்பு மூலம் கடத்தல் படகுகளை கண்டுபிடித்து இந்திய கடற்படைக்கு தகவல் அளித்து, நமது கடற்படை துரிதமாக செயல்பட்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. போதைப் பொருட்கள் தெற்காசிய நாடுகளில் இருந்து வருவதாகவும், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒருசில இடங்களில் கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான நீர்மூழ்கி கப்பல் வைத்து போதைப் பொருட்களை கடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இதுபோன்று கடத்தலில் ஈடுபடுவோர் சர்வதேச அளவில் தொடர்பு உடையவர்களாகவும், அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் மாநில அளவிலான காவல் துறை அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிரமம். போதைப் பொருள் உள்ளே நுழைவது மற்றும் விநியோகத்தை தடுப்பது ஆகிய பணிகளை மட்டுமே உள்ளூர் காவல் துறையால் செய்ய முடியும். போதைப் பொருள் கடத்தல் தொழிலின் பரந்த தொடர்புகளை கவனத்தில் கொண்டு, இந்திய கடற்படை, கடலோர காவல் படை, தேசிய மற்றும் மாநில அளவிலான போதைப் பொருள் தடுப்பு காவல் துறை, உள்ளூர் காவல் துறையினர் என அனைவரும் ஒன்றிணைந்து தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் மேற்கொண்டு கூட்டாக பணியாற்றினால் மட்டுமே, எதிர்கால சந்ததியை பாதிக்கும் இத்தகைய போதைப் பொருள் அரக்கனுக்கு முடிவு கட்ட முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon