Last Updated : 27 Nov, 2024 03:38 AM

 

Published : 27 Nov 2024 03:38 AM
Last Updated : 27 Nov 2024 03:38 AM

காலத்துக்கேற்ற மாற்றம் காவல்துறைக்கு அவசியம்

மாஞ்சா நூல் விற்றதாக வடசென்னையைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5000-க்கும் அதிகமான பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத, மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடும் பழக்கம் சென்னையில் குறிப்பாக வடசென்னையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. பட்டம் பறக்கவிடுவது ஒருவகையான உற்சாகம் தரும் விளையாட்டாக இருந்தாலும், அதற்கு பயன்படுத்தப்படும் நூலை இயற்கையாக தயாரிக்காமல், அதிக உறுதித் தன்மையை கொண்டு வருவதற்காக கண்ணாடித் துகள்கள் உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து மாஞ்சா நூல் என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

பட்டம் பறக்க விடுவதற்கு இத்தகைய நூல் பயனுள்ளதாக இருந்தாலும், பட்டம் அறுந்து விழும்போது எங்கோ ஒரு பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்து, வாகன ஓட்டிகளின் கண்களுக்கு புலப்படாமல் கழுத்தில் சிக்கி அறுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதன்மூலம் குழந்தைகள், பெண்கள் பலர் பாதிக்கப்பட்டதால், மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் வடசென்னையில் கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூலை தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய உற்பத்திக்கூடம் இயங்கி வருவதை காவல்துறையினர் கண்காணிக்காமல் இருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏதாவது உயிரிழப்பு ஏற்படும்போதுமட்டும் சோதனைகள் நடத்துவதும் மற்ற நேரங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் சமூக அக்கறையற்ற செயலாகவே கருத முடியும்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் தளங்கள் வந்துவிட்டதால், அதன்மூலம் பட்டங்களையும், மாஞ்சா நூலையும் விற்று தடை செய்யப்பட்ட தொழிலை அவர்கள் நடத்தி வந்துள்ளனர். இதுமட்டுமின்றி, தடை செய்யப்பட்ட விஷயங்களான லாட்டரி, மது விற்பனை, போதைப் பொருள் விற்பனை, பாலியல் தொழில் என அனைத்து சமூக விரோதிகளும் இணையதளங்கள் வழியாக தங்கள் குற்றத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி, வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள், அதற்கான பயிற்சி, துப்பாக்கி தயாரிப்பதற்கான பயிற்சி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்று சமூக வலைதளங்கள் மூலம் பயிற்சி அளிப்பவர்கள் என குற்றம் செய்பவர்

களின் தளம் காலமாற்றத்தில் விரிவடைந்துள்ளது. ஆனால், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை என்ற கட்டத்தை காவல் துறையினர் இன்னும் தாண்டவில்லை. சட்டத்துக்கு புறம்பான பொருட்களை விற்பனை செய்தால் அந்தக் கடையை பூட்டி எப்படி ‘சீல்’ வைக்கின்றனரோ, அதேபோன்று ஆன்லைன் மூலம் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை கண் காணிக்கவும், அவர்கள் மீது காவல்துறையினர் தாங்களே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும், தங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியம். அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள், இணையதளங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களை காவல்துறையில் நியமிப்பது போன்ற வசதிகளையும் அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். நாட்டுக்கே முன்னோடியாக திகழும் தமிழக காவல்துறை, நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டால் கூடுதல் மகுடம் வந்து சேரும். - எம்எஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x