Published : 26 Nov 2024 02:56 AM
Last Updated : 26 Nov 2024 02:56 AM
அமரன்... நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய திரைப்படம். இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில சர்ச்சைகளும் ஏற்பட்டன. மேஜர் முகுந்த் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் எந்த ஒரு காட்சியிலும் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் திரைப்படத்தில் முகுந்த் மனைவியாக நடித்தவர் கிறிஸ்தவ பெண் என்ற தகவல் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தது. நடுநிலையான விமர்சகர்கள், பொதுமக்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால், ஜாதி, மதம் சார்ந்த அடையாளங்களை விடவும் நாடு முக்கியம். நம் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மகனுடைய வாழ்க்கை கதை வெளியானதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்துதல் கிடைத்தால், அதுவே போதும் என்று எண்ணியோ என்னவோ... முகுந்த் வரதராஜனின் பெற்றோர் சாதி சர்ச்சை குறித்து எதுவும் பேசாமல் பரந்த மனதுடன் கடந்து சென்றனர்.
முகுந்த் வரதராஜனின் அக்கா நித்யா ஹாங்காங்கில் வசிக்கிறார். அவரிடம் தம்பியைப் பற்றியும் ‘அமரன்’ திரைப்படம் குறித்தும் உரையாடிய போது அவர் ஏராளமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். குடும்பம், தம்பியைப் பற்றி நித்யா கூறியதாவது: தம்பியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படமாக ‘அமரன்’ வெளிவந்தது குறித்து அப்பா, அம்மா, அக்காதான் கூறினார்கள். ஆனால், அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. அதை பார்த்தால் நான் மனதளவில் நொறுங்கிவிடுவேன். அதனால் படத்தைப் பார்க்கும் தைரியம் வரவில்லை.
முகுந்த்தை பொறுத்த வரையில் சிறு வயது முதலே ராணுவம்தான் தனது வாழ்க்கை என்று முடிவெடுத்தவன். எனக்கும் அந்த ஆசை இருந்தது. விமானப் படையில் சேர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ராணுவத்தில் சேருவதற்கான முகுந்த்தின் உழைப்பு மிகப்பெரியது. நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றுவிட்டால், வேறு உயர் பதவி கொண்ட வேலைக்கு போக சொல்வார்கள் என்பதற்காகவே, 70 மதிப்பெண் வாங்கும் அளவுக்கு பார்த்து கொண்டான். ராணுவத்தில் சேருவதற்காக பல கிலோ மீட்டர் தூரம் தினமும் ஓடுவான். கடினமாக பயிற்சிகள் செய்வான். ராணுவத்தில் சேருவதற்காக தவம் இருந்தான்.
எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவன். மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நண்பனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த பிறகு கூட்டிவந்தான். அந்த சம்பவங்கள் எல்லாம் கண்முன் இருக்கின்றன. எப்போதும் நண்பர்கள் பலருடன் இருப்பான். அவர்கள் ஒன்றாக வருகிறார்கள் என்றால், யாருக்கோ உதவி செய்துவிட்டு வருகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
முகுந்த் நினைத்தபடி ராணுவத்தில் சேர்ந்த பிறகு, பயிற்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நிறைய பேசுவோம். பயிற்சியின் போது ஒரு முறை முகுந்த் உடலில் குண்டு பாய்ந்து விட்டது. அது ஒரு விபத்தாக அமைந்தது. இந்த தகவல் கூட திரைப்படத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால், அந்த சம்பவத்தால் இன்னொருவர் வேலை போய்விடும் என்று அதை முகுந்த் மறைத்துவிட்டான். அமரன் திரைப்படம் எடுப்பதற்கு முன் அப்பா அம்மாவிடம் பேசியிருக்கிறார்கள். முகுந்த்தின் முழு அனுபவத்தையும் வாழ்க்கையையும் கேட்டுள்ளார்கள். அதேவேளையில் முகுந்த் மனைவி இந்து தான் படம் எடுக்கும் திட்டத்தை எடுத்து செய்தார்.
எங்கள் அப்பா வெகுளி. முகுந்த்தை பற்றி யார் பாராட்டி பேசினாலும், அவர்களை ஆதரிப்பார். முக்கியமாக முகுந்த் பெயரில் எந்த பணம் வந்தாலும் நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. எந்த நிகழ்ச்சியில் மேஜர் முகுந்த் குடும்பத்துக்கு நிதியுதவி என்று சொன்னாலும் அந்த பணத்தை அங்கேயே நன்கொடையாக அப்பா கொடுத்து விடுவார். திரைப்படத்தில் சில காட்சிகள் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், திரைப்படம் என்பது கற்பனையும் கலந்ததுதான் என்பதை புரிந்து கொண்டோம். மும்பையில் நாங்கள் அடிக்கடி சந்திப்போம். ஒரு முறை மார்க்கெட் ஏரியாவுக்கு நாங்கள் சென்றோம். அப்போது “நீங்கள் இங்கு பார்க்கும் நிலை வேறு; நான் இந்த இடத்தைப் பார்க்கும் கோணம் வேறு” என்று முகுந்த் சொல்வான்.
ரஜினியின் தீவிர ரசிகன் முகுந்த். அதேநேரத்தில் அன்பே சிவம் பற்றி அடிக்கடி பேசுவான். நல்ல சினிமா ரசிகனான முகுந்த்தின் நிஜ வாழ்க்கையை பற்றிய திரைப்படம் வெளிவரும் என்று அவன் நினைத்து பார்த்திருக்க மாட்டான். முகுந்த் திருமணம் மிகப்பெரிய கதை. எங்கள் வீட்டில் எங்கள் விருப்பத்துக்கு எதிராக அப்பா, அம்மா இருந்ததில்லை. ஆனால், இந்து வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால், முகுந்த்தின் தியாகத்தை இன்று நாடே கொண்டாடும் போது அவர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் முகுந்த்தின் படத்தை மிகப்பெரிதாக வைத்து பெருமைப்படுகிறார்கள். எங்கள் வீட்டில் கூட அந்தளவுக்கு முகுந்த்தின் படம் இல்லை. நினைவு தாங்க முடியாத வலியை தரும் என்பதுதான் காரணம்.
முகுந்த் மீது இந்து உயிரையே வைத்திருக்கிறார். மறு கல்யாணத்துக்கு அவர்கள் வீட்டில் முயன்ற போது கூட திட்டவட்டமாக இந்து மறுத்து விட்டார். ராணுவத்தினரும் இந்துவை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். திரைப்படத்தில் சில விஷயங்களை மாற்றிக் காட்டியிருக்கிறார்கள், மறைத்திருக்கிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள். என்ன செய்வது. திரை மொழிக்காக சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கலாம். அது பற்றி சொல்லி என்ன பயன்? என் காது படவே முகுந்த் ராணுவத்துக்கு எதற்கு போகணும் தேவையில்லாத வேலை என்று பேசியவர்கள் கூட இன்று முகுந்த் எங்கள் சொந்தக்காரன் என்று பெருமையுடன் பேசுகிறார்கள். ஆனால் முகுந்த் இல்லை என்று நினைக்கும் போது வரும் சோகம் அழுத்துகிறது. இதிலிருந்து மீள முடியவில்லை.
ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும் போதும் அவன் தன் சாதனைகளை ஆர்வத்தோடு சொல்வான். ஆனால் அவனுக்கு சுவையான உணவு வகைகளை சமைத்து கொடுக்க வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். அக்கா, நான் முகுந்த் மூவரும் விடுமுறைகளை ஒன்றாகவே கழிப்போம். நானும் முகுந்தும் சேர்ந்து அக்காவை கலாய்ப்போம். திருமணத்துக்கு அப்புறம் கூட பேசி வைத்துக் கொண்டு பிராங்க் செய்வது எங்கள் பொழுது போக்கு. திருமணமாகி நாங்கள் பெற்றோர்களான போதும் ஒன்றாக கூடி குழந்தைத்தனமாக விளையாடுவது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அப்படி ஒரு தருணத்தில் பதிவு செய்தது தான் ஊஞ்சல் வீடியோ. ஒவ்வொரு விநாடியும் அவன் இல்லாததை உணர்ந்து மனது என்னவோ செய்கிறது.
அப்பாவின் சுசுகி பைக் ஓட்ட எனக்கு ஆசை. அப்படி ஒரு நாள் பைக் ஓட்டும் போது காரில் இடித்து விட்டேன். அப்போது இனி பைக் ஓட்ட மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு, “இந்த பயத்துக்கு நீ அடிபணிந்து போனால், இனி பயத்தை நீ வெல்லவே முடியாது. துணிந்து நில். துணிந்து செல்” என்று முகுந்த் ஊக்கப்படுத்தினான். சொல்ல முடியாத அசாத்திய துணிவு. அதுதான் முகுந்த்.
தம்பி உயிரிழந்த தகவல் இரவு வந்தது. அதற்கு முன்பாக தினமும் கோயிலுக்குப் போகும் என் அம்மாவுக்கும் எனக்கும் காலையில் இருந்தே எந்த காரணமும் இல்லாமல் ஒரு சண்டை. ஏதோ சச்சரவு. இரண்டு பேரும் கோபித்துக் கொண்டு அன்று முழுவதும் பேசிக் கொள்ளவேயில்லை. தம்பியை இழக்க போவதற்கு இன்டியூஷனாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது. அம்மா இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அன்னிக்கு கோயிலுக்கு போயிருந்தால் இந்த கெட்ட செய்தி நடந்திருக்காதோ. அந்த நாளை நினைத்தால் இன்றும் என் மனதில் ஆறாத வலி இருந்து கொண்டே இருக்கிறது. தூக்கம் வர விடாத நிகழ்வு. இவ்வாறு முகுந்த் வரதராஜனைப் பற்றி நித்யா கூறினார். முகுந்த்தின் அதே துணிச்சல், உறுதியை அவரிடமும் பார்க்க முடிந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான வீர வணக்கத்தை நித்யா முன் சமர்ப்பித்தோம்.
- ஹாங்காங்கில் இருந்து... ராம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT