Published : 25 Nov 2024 04:33 AM
Last Updated : 25 Nov 2024 04:33 AM
கூட்டுறவுத் துறை பொருளாதார ரீதியாக தனிநபர்களை வளப்படுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. மூலதனம் இல்லாத அல்லது சிறியளவில் சேமிப்பை மட்டுமே கொண்டுள்ள மக்களை மேம்படுத்துவதற்கான சிறந்த கருவியாக கூட்டுறவு இயக்கம் உள்ளது.
2021-ம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், தேசிய அளவில் கூட்டுறவுக்கென பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கூட்டுறவுத் துறையிலும் உலகுக்கு வழிகாட்டும் நண்பராக, இந்தியா உருவெடுக்க வழிவகுத்துள்ளன.
2024 நவம்பர் 25 முதல் 30 வரை டெல்லியில், சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ - ICA) பொதுச் சபைக் கூட்டத்தையும் உலகளாவிய கூட்டுறவு மாநாட்டையும் இந்தியா நடத்த உள்ளது. ஐசிஏ-வின் 130 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, இந்தியா அதன் அமைப்பாளராக செயல்பட உள்ளது. இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ம் ஆண்டை ஐ.நா. அறிவித்துள்ள நிலையில் இது நடைபெறுகிறது. ஐசிஏ பொதுச் சபைக் கூட்டத்தையும் உலகளாவிய மாநாட்டையும் இந்தியா நடத்துவது கூட்டுறவு இயக்கத்தில் நமது தேசத்தின் தலைமைக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் ஆகும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்தியா தனது கூட்டுறவுத் துறையை புத்துயிர் பெறச் செய்வதில் ஆர்வமாக உள்ளதை காட்டுகிறது. நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், கூட்டுறவு சங்கங்களிடையே வெளிப்படைத்தன்மை போட்டித் தன்மையை வளர்க்கவும் விரிவான நிர்வாக, கொள்கை, சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமான ‘சககார் சே சம்ரிதி’ எனப்படும் கூட்டுறவின் மூலம் வளம் என்பது, நாட்டின் கூட்டுறவு நிறுவனங்களை தற்சார்புடையதாகவும் வலுவானதாகவும் மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
கூட்டுறவுக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், ஒரு புதிய பொருளாதார மாதிரி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த முன்மாதிரி, இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் கட்டமைப்பாகவும் செயல்படும்.
இந்தியாவின் கூட்டுறவுப் பாரம்பரியம் தொன்று தொட்டதாகும். இந்தப் பாரம்பரியத்தின் வேர்கள் நமது கலாச்சார, பொருளாதார நடைமுறைகளில் பதிந்துள்ளன. கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள், கிராமங்களில் பொது நலனுக்காக கோயில்களையும் அணைகளையும் கட்டுவது போன்ற கூட்டு முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன. மேற்கத்திய சிந்தனை முறைகளில் பயிற்சி பெற்ற பல பொருளாதார வல்லுநர்கள் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன யுகத்தில் கூட்டுறவு என்ற கருத்து வழக்கொழிந்து வருகிறது என்ற கருத்தை முன்வைக்கத் தொடங்கினர். இருப்பினும், 3 கோடி, 5 கோடி அல்லது 10 கோடி மக்கள்தொகை கொண்ட நாடுகள் உருவாக்கிய பொருளாதார மாதிரிகள் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பொருத்தமானதாக இருக்காது என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஒரு வளமான தேசத்தை உருவாக்க, பொருளாதார வளர்ச்சியின் அனைத்து குறியீடுகளிலும் உயர்வது அவசியம். அது மட்டுமல்லாமல், 140 கோடி மக்களின் செழிப்பை உறுதி செய்வதும், அனைத்து தனிநபர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதும் அவசியம். இது கூட்டுறவால் மட்டுமே சாத்தியமாகும். இந்தக் கருத்தை நிரூபிக்க நமது வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.
உதாரணமாக, அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி கடந்த நூற்றாண்டில் ரூ.100 கோடி லாபத்தை அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், ரூ.6,500 கோடிக்கு மேல் வைப்புத்தொகையையும் இது கொண்டுள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிகரமான உதாரணமாக அமுல் திகழ்கிறது. தற்போது, இதன் மூலம் 35 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பையும், கவுரவமான வாழ்க்கையையும் பெற்று வருகின்றன. இந்தக் குடும்பங்களில் உள்ள பெண்கள் இதில் முக்கியப் பங்காற்றி, முன்னணியில் இருந்து வழி நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக இன்று அமுல் நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் ரூ.80,000 கோடியை எட்டியுள்ளது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்தப் பெண்கள் யாரும் தொடக்கத்தில் 100 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கவும், வலுப்படுத்தவும் 60-க்கும் மேற்பட்ட முயற்சிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக புறக்கணிப்பையும் நிர்வாக முறைகேடுகளையும் எதிர்கொண்ட பெரும்பாலான தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்), நிதி ரீதியாக பலவீனமாகவும் செயலற்றதாகவும் மாறியுள்ளன. இதைச் சரி செய்ய அரசு, தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அவற்றை பொருளாதார ரீதியாக வளமாக்கியுள்ளது. புதிய துணை விதிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், இப்போது பால், மீன்வளம், தானிய சேமிப்பு, மக்கள் மருந்தக மையங்களை நடத்துதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். மூன்று புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டதன் மூலம் கூட்டுறவுச் சூழல் அமைப்பு மேலும் மேம்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் விவசாயிகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் நிறுவனம், இயற்கை வேளாண் பொருட்களுக்கு சான்றளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது.
பாரதிய பீஜ் சககாரி சமிதி நிறுவனம், விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. நிதி உதவி, வரி விலக்குச் சலுகைகள், எத்தனால் கலப்புத் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிர் அளித்துள்ளன. கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த, கூட்டுறவு நிறுவனங்களின் நிதியை கூட்டுறவு வங்கிகளுக்கு திருப்பி விடுவதற்கு கொள்கை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும், ஐசிஏ பொதுச் சபைக் கூட்டமும், உலகளாவிய கூட்டுறவு மாநாடும், ஐநா-வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை கூட்டுறவு இயக்கத்தின் மூலம் அடைவதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும். வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் கூட்டுறவுகளுக்கு உதவும் ஒரு சிறந்த சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்து அனைவருக்கும் சிறந்த, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்க வேண்டியது அவசியம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நடத்த நாம் தயாராகி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றவர்களுக்கு நான் ஒரு வெளிப்படையான அழைப்பை விடுக்கிறேன். உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த கற்றல், பகிர்தல், இணைந்து செயல்படுதல் என்ற உணர்வுகளுடன் நாம் செயலாற்றுவோம். ‘கூட்டுறவின் மூலம் வளம்’ என்ற இந்தியாவின் கொள்கை, ஒரு தொலைநோக்குப் பார்வை
மட்டுமல்ல. கூட்டுச் செழிப்பு, நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சிறந்த உறுதிமொழியாகும்.
கட்டுரையாளர்: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT