Published : 15 Nov 2024 10:22 AM
Last Updated : 15 Nov 2024 10:22 AM

ராஜ் கௌதமன்: நவீனத்துக்குப் புதிய வரையறை | அஞ்சலி 

ராஜ் கெளதமன் (1950 - 2024) தலித் விமர்சகராக அறியப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவர் எழுதிய எல்லாவற்றையும் தலித் பற்றியதாகக் கருதும் நிலை இருக்கிறது. அது முழு உண்மையல்ல. அவர் தமிழிலக்கியத்தின் பெரும்பான்மையான பகுதிகளை விமர்சனக் கண்ணோட்டத்துடனும், மறுபொருள் கோடல் நோக்கிலிருந்தும் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆனால், அவற்றை தலித்திய நோக்கிலிருந்து வாசித்துப் பார்த்திருக்கிறார்.

அவர் தலித் விமர்சகர் அல்லது விளிம்புநிலை நோக்கிலான திறனாய்வாளர் என்று கூறுவது இந்தப் பொருளிலேயேயாகும். நவீன மனிதனே தலித் என்றார் அவர். அந்த வகையில் தலித்​தியம் என்பதை ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் கருத்​தியல் மற்றும் அறிவுக் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்​சியான சொல்லாக்கம் என்று வரையறுத்துக் கொண்டிருந்​தார். அவர் எழுதி​ய​வற்றுள் தலித் பண்பாடு பற்றிய நூல்கள், சங்க இலக்கிய ஆய்வுகள் தவிர்த்து நவீன இலக்கியம் சார்ந்து எழுதிய ஆய்வுகள் தனிவகை​யின​தாகும்.

நவீனத் தமிழ் முகங்கள்: அ.மாதவை​யாவின் தமிழ் நாவல்கள் - ஓர் ஆழ்நிலைப் பார்வை, கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்​போக-சி.இராமலிங்கம் (1823 - 1874), புதுமைப்​பித்தன் எனும் பிரம்​மராக் ஷஸ், க.அயோத்​தி​தாசர் ஆய்வுகள், சுந்தர ராமசாமி -கருத்தும் கலையும் முதலான நூல்களே அவை. பாரதி பற்றித் தனி நூலாக எழுதவில்​லை​யெனினும் தலித்திய பார்வையில் பாரதி என்னும் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி​யுள்​ளார். அக்கட்டுரையையும் உள்ளடக்கிப் பார்த்தால் தமிழ் நவீனத்தின் முகங்களான அறுவரைப் பற்றி அவர் எழுதி​யிருப்பதை பார்க்க முடியும். தமிழ் நவீனத்தின் முன்னோடிகள் இவர்கள். இவர்களைத் தவிர்த்து​விட்டு தமிழ்ச் சமூகமும், இலக்கியமும்

நவீனமடைந்த வரலாற்றைப் புரிந்​து​கொள்ள முடியாது. கிட்டத்தட்ட தமிழ் நவீனமானதன் வரலாற்றை இவர்களின் வழியாகப் புரிந்​து​கொள்ள முடியும். தலித்​தியம் பற்றி எழுதவந்த ராஜ் கௌதமன், இவர்களைப் பற்றி ஏன் எழுத வேண்டும்? அவர்களிடத்தில் எதனைக் கண்டார்? அவற்றின் மூலம் எவற்றைச் சொல்ல முற்பட்​டார்? விளிம்​புநிலை வாசிப்பு​களில் பல வகைகள் உண்டு. ஏற்கெனவே இருப்பதை மறுப்பது, புதிதாக அல்லது மறைக்​கப்​பட்​ட​வற்றைக் கண்டடைவது, ஏற்கெனவே இருப்​ப​திலிருந்து சில கூறுகளைத் திரட்டி மறுசொல்லாடலைக் கட்டமைப்பது என்று அவற்றைக் கூறலாம்.

ராஜ் கௌதமனிடம் இந்த எல்லா வகை அம்சங்​களும் உண்டு என்றாலும், மறுப்பதும், ஏற்கெனவே இருப்​ப​திலிருந்து மறுசொல்லாடலைக் கட்டமைப்​பதும் அவரிடம் மிகுதியாக நடைபெற்றிருக்​கின்றன. இந்த வகையில் முற்றிலும் மறுப்பது, முற்றிலும் எதிர்ப்பது என்கிற இரட்டை எதிர்​மறைக்கு வெளியே செயற்​பட்​டார்.

புதிய வரையறை: ராஜ் கௌதமன் தமிழ் நவீன ஆளுமை​களைப் பற்றி இவ்வாறு எழுதினார் என்று கூறும்​போது, தனக்கானவற்றை அவர்களிட​மிருந்து எடுத்​துக்​கொண்டு அப்படியே விட்டு​விட்டார் என்று பொருள் ஆகாது. ராஜ் கெளதமன் நிகழ்த்திய வாசிப்பு, சமூகம் அவர்கள் மீது ஏற்றி​வைத்​திருக்கும் அடையாளங்​களி​லிருந்தும் அவர்களை விடுவிப்பதாக இருந்தது. இதனை ராஜ் கௌதமனின் தனித்​தன்மை என்று கூறலாம்.

பாரதி, புதுமைப்​பித்தன், வள்ளலார் ஆகியோர் பற்றி அவர் எழுதி​யிருப்பவை இவற்றை நன்கு புலப்​படுத்​தும். புதுமைப்​பித்​தனின் படைப்புக் குணங்​களையும் உலக நோக்கையும் வைத்துக்​கொண்டு ஓரிடத்தில் அவரை ஒரு தலித் என்று குறிப்​பிடு​கிறார். இவ்விடத்​தில்தான் அவர் தலித் என்பதை எவ்வாறு வரையறுத்தார் என்பதையும் புரிந்​து​கொள்ள வேண்டும். அதாவது தலித் என்பதைப் பிறப்பாகப் பார்க்​காமல் எல்லாவகை அதிகாரத்​திற்கும் எதிரான கலகக் குணாம்சமாகப் பார்த்​தார்.

அதிகாரத்துக்கு எதிரான கலகப் பண்பாட்டை இவ்வாறு வரையறுத்​துக்​கொண்ட ராஜ் கௌதமன், அக்கூறுகளைக் கொண்ட படைப்​பாளிகளைத் தன்வய​மாக்கும் வேலைகளைச் செய்தார். அப்படைப்​பாளிகள் பற்றி அதுவரையிலான ஆய்வுகளில் இல்லாத அளவுக்குக் கலகக்​கூறுகளை இனங்காட்டி முதன்​முறையாக மிக விரிவான அளவில் முன்வைத்​தார்.

ஒடுக்​கு​முறையி​லிருந்து விடுபட முனையும் எவருக்கும் பாரதியின் சில கூற்றுகள் உற்சாகமும் வலிமையும் ஊட்டவல்லவை என்று குறிப்​பிட்ட ராஜ் கௌதமன், ஒடுக்​கு​முறையை உணர்ந்து சகலவிதமான ஒடுக்​கு​முறைக்கும் எதிராகத் தன்னை நிலைநிறுத்து​வதால் பாரதி ஒடுக்​கப்பட்ட மனிதராக, விடுதலையை வேட்கையோடு எதிர்​நோக்கிய மனிதராகக் காட்சி​யளிக்​கிறார் என்கிறார்.

வள்ளலாரின் பாடல்களை வைத்து அவரைச் சாதி சமய விகற்​பங்​களைச் சித்தர் மரபின் சாராம்​சத்தைக் கொண்டு கடந்துசெல்ல மார்க்கம் கண்ட முன்னோடி என்று மதிப்​பிட்டு நூல் எழுதினார். இந்த படைப்​பாளி​களின் காலத்தைச் சமூக அரசியல் வரலாற்றின் பின்புலத்தில் வைத்து விளக்கும் அவர், பிரதி​களுக்குள் செல்லும்போது அவற்றின் உள்ளடக்​கத்​திலிருப்பதை வைத்து அவர்கள் மீது வாசிப்பை நிகழ்த்​தினார்.

மனித இயல்புக்கு உட்பட்டு: ராஜ் கெளதமன் ஆளுமைகள் பற்றி இவ்வாறு எழுதினார் என்பதன் பொருள், அவர்களின் போதாமைகளை, பிரச்​சினைப்​பாடுகளை அவர் மறைத்தார் அல்லது விட்டு​விட்டார் என்பதல்ல. மாறாக அவர்களின் சிக்கல்களை மிகத்​தீ​விரமாக விமர்​சித்தார். அவர் பார்வையில் விமர்சனம் என்பது புறக்​கணிப்பு அல்ல. இன்னும் சொல்லப்​போனால் அவருடைய ஆய்வுநோக்கு மார்க்சிய ஆய்வுநெறியின் செல்வாக்​குக்கு உட்பட்​ட​தாகும்.

அதேவேளையில் அவற்றி​லிருந்து அவர் முன்னகர்ந்தார் என்பதையும் சொல்ல வேண்டும். தலித் அனுபவத்தை முக்கிய​மாகக் கருதினார். படைப்புகளைச் சீர்தூக்கி மதிப்​பிட்ட அவர், படைப்​பாளி​களின் உணர்வுத் ததும்​பல்கள், மீறல்கள், ஏக்கங்கள் போன்ற​வற்​றையும் வாசிப்​புக்குள் கொணர்ந்​தார். இங்கிருக்கும் செயற்​பாடுகள் எல்லா​வற்​றையும் அரசியலாக மட்டும் சுருக்​காமல் மனித இயல்பு​களுக்கு உட்பட்டும் அணுகினார்.

புதுமைப்​பித்தன் எந்தக் கட்சிக்​குள்ளும் மாட்டிக்கொள்ளாதவர், எவற்றிலும் ஆற அமரத் தங்கி கோஷம் போடாதவர், ஒன்றை ஒரு முறை போற்றுவது மாதிரி தெரியும்; மற்றொரு வேளையில் அதையே பலத்த பகடியும் செய்வார். அன்றாட மனிதர்​களின் வாழ்க்கை, கருத்து​களின் தர்க்​கப்படி நடப்ப​தில்லை என்பதைப் புதுமைப்​பித்தன் உணர்ந்துகொண்டார் என்று புதுமைப்​பித்​தனின் ஆதாரமான படைப்பு அம்சங்களை மதிப்​பிட்​டார்.

இவ்வாறு கருத்து​களின் தர்க்​கத்​துக்கு வெளியே இருக்கும் பகடிகளுக்கு அதிகாரத்துக்கு எதிரான குணாம்சம் இருப்பதாக அவர் புரிந்​து​கொண்​டிருந்​தார். பகடி போன்ற​வற்றுக்குக் கோட்பாட்டு நூல்களின் வாசிப்பு முக்கியத் தூண்டுதலாக இருந்​திருப்​பினும், அதற்கான அடிப்படை அவர் வாழ்விலிருந்தும் தம் மொழி சார்ந்த படைப்பு​களி​லிருந்தும் அவரால் ஏற்கெனவே கண்டடையப்​பட்​டிருந்தன. ராஜ் கௌதமன் தம்முடைய ஆய்வைத் தகவல்கள், அதன் வரிசைக்​கிரமம் சார்ந்து சீரமைத்து எழுதி​ய​வரில்லை.

சில வேளைகளில் பிழைகளும் மாறுபாடு​களும்கூட நேர்ந்​திருக்​கின்றன. குறிப்​பிட்ட படைப்புகளை வாசித்து மொத்த​மாகத் தொகுத்​துக்​கொண்டு அவற்றி​லிருந்து தனக்கு உகந்த வாசிப்பை முன்வைப்​பவராக அவர் இருந்​திருக்​கிறார். அத்தருணத்தில் புற உலகம் அகன்று படைப்​புக்குள் மூழ்கிக் குறிப்​பிட்ட படைப்பாளி பற்றி அவரொரு உலகைக் கட்டமைக்​கிறார்.

அவ்விடத்தில் தான் அப்படைப்பாளி பற்றி அதுவரையில் இருந்​துவந்த வாசிப்பு​களி​லிருந்து நகர்வதோடு சாதி, சமயம், மொழி, இனம் சார்ந்து புற உலகில் கோரப்​பட்டு வரும் அடையாளங்​களி​லிருந்து அவர்களை விலக்கித் தானொரு தோற்றத்தைத் தருகிறார். அந்த வாசிப்பு என்பது தனக்கு உகந்தவரை அவர் தேடினார் என்பது மட்டுமல்ல, பிறர் உரிமை கோரலிலிருந்தும் அப்படைப்​பாளிகளை விடுவித்தார் எனலாம்.

இங்கு யதார்த்​தத்தைப் புனைவின் வழியே தலைகீழாக்கி எதிர்​கொள்ள முற்பட்​டவராக அவர் மாறினார். இவ்விடத்தில் நாம் அவரின் வாசிப்பை ஏற்கலாம், மறுக்​கலாம். அது வேறு. ஆனால் அவர் இவ்வாறுதான் வாசித்தார், புரிந்​து​கொண்டார் என்பதை நாம் உணர்ந்​து​கொள்ள வேண்டும். திறனாய்வுத் தளத்தில் இதுவும் அவருடைய முக்கியமான பங்களிப்பு எனலாம். சாதிவுணர்வு முக்கியமான பிரச்சினை என்று அவர் நினைத்​தார். ஆனால் அதிலிருந்து மனிதன் நெகிழும், விலகும் இடங்கள் இருக்​கின்றன. அவற்றை அவர் இனங்காட்​டி​னார், கணக்கில் எடுத்​துக்​கொண்டார் என்பதுதான் அவரை வரையறுக்​கிறது.

- தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x