Published : 23 Aug 2024 05:43 AM
Last Updated : 23 Aug 2024 05:43 AM
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கலாம். ஆனால், இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. தொழில் புரட்சியை உருவாக்க தவறியதே இதற்குக் காரணம்.
நம் ஆட்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் மனதில் உள்ள போலி கட்டுக்கதைகளை உடைக்கும் ஒரு உண்மையான வெற்றிக் கதை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இது பல படிப்பினைகளை நமக்குத் தருவதோடு. செயல்பட வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு ஏன் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிடவும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது என்பதையும் அது காட்டுகிறது
இந்தியா 1991-முதல் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. 45 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து வெளிவந்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா சேவைத் துறையில் மிகச் சிறப்பாக தன்னை நிறுவியுள்ளது. ஆனால், உற்பத்தித் துறையில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 11 சதவீத மக்கள் அதில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் உற்பத்தித் துறையின் ஏற்றுமதி 2 சதவீதமாகவே உள்ளது. உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கமால், எந்த நாட்டினாலும் ஏழ்மையிலிருந்து முழுமையாக விடுபட முடியாது.
ஜப்பான், கொரியா, தைவான் ஆகிய நாடுகள் அதிக தொழிலாளர்களை உள்ளடக்கிய உற்பத்தித் துறையின் மூலமே பெரும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. சமீபத்திய உதாரணம் சீனா.
இந்தியாவின் பிரச்சினை வேலையின்மை இல்லை. குறைந்த ஊதிய வேலைதான் உண்மையான பிரச்சினை. பல இளைஞர்கள், மிக மிக குறைந்த ஊதியத்தில் முறைசார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தரமான, மேம்பட்ட வேலைகளைச் செய்ய விரும்புகின்றனர். சமீபத்திய மக்களவைத் தேர்தல் கணிப்புகள்கூட, தரமற்ற வேலைவாய்ப்பு குறித்து கவலையை சுட்டிக்காட்டின.
இவற்றுக்கு மத்தியிலும் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. 2021 வரையில் சீனாவில்தான் ஆப்பிள் ஐபோன் முழுமையாக தயாரிக்கப்பட்டது. தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்புக்கு தமிழ்நாட்டில் புதிய ஆலையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 1.5 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவற்றில் 70 சதவீதம் பெண்கள். இதுதவிர 4.50 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 14 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இது உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் 14 சதவீதம்தான். ஆனால், 2026-ம்ஆண்டுக்குள் அது 30 சதவீதமாக உயரும் என்று ஜேபி மோர்கன் மதிப்பிட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிய வழங்கும் நோக்கில், ஐபோனை உற்பத்தி செய்யும் ஒப்பந்த நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் மிகப் பெரிய குடியிருப்பைக் கட்டியுள்ளது.
ஏற்றுமதி மையமாக மாற வேண்டுமென்றால், இந்தியா ஐபோன் உதிரிபாக தயாரிப்பாளர்களையும் ஈர்க்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் சீனாவிலேயே உள்ளனர். அவர்கள் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும். அதன் வழியே நம்முடைய சிறு, குறு நடுத்தரநிறுவனங்கள் உலககட்டமைப்போடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதன் கூடுதல் பலன் என்னவென்றால், சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் குறையும்.
தமிழ்நாட்டின் ஐபோன் உற்பத்தி கதையிலிருந்து கற்றுகொள்ள நமக்கு நிறைய பாடங்கள் உள்ளன.
1. இந்தியா மிகப் பெரிய சந்தை என்பது பொய்யான கட்டுக்கதை. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். ஆனால், மக்களின் வாங்கும் திறன் குறைவு. மேக் இன் இந்தியா திட்டத்தால் உலக பிராண்டுகள் இந்தியாவுக்கு வர காத்துக்கொண்டிருப்பதாக நிலவும் பிம்பம் பொய்யானது. ஆப்பிள் நிறுவனம்இந்தியாவில் ஆலை தொடங்க முடிவுசெய்தபோது இந்தியாவில் ஐபோன்விற்பனை வெறும் 0.5 சதவீதம்தான். அரசின் பேச்சுவார்த்தையாலேயே ஆப்பிளின்வருகை சாத்தியமானது. ஆப்பிளின்தேவையை தமிழ்நாட்டு அதிகாரிகள் பணிவுடன் கேட்டனர்.
2. உள்நாட்டு சந்தை மூலம் மட்டுமே தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கிவிட முடியாது. மிகப் பெரிய சந்தையைக் கொண்டிருந்த சீனா, வெற்றி அடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டி இருந்தது. உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. இந்தியா அதன் வரி விகிதத்தைக் குறைக்காத வரையில், அதனால் உலக ஓட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.
3. இந்தியாவில் வேலை உருவாக்கத்துக்கு எம்எஸ்எம்இ துறை இன்ஜினாக உள்ளது என்றுநம்பப்படுகிறது. உண்மை அப்படி இல்லை. நிறைய சிறு நிறுவனங்கள்தங்கள் தயாரிப்பை விநியோகம் செய்ய பெரிய நிறுவனம் தேவை. அந்த வகையில் பெரிய நிறுவனங்களே வேலை உருவாக்கத்துக்கான முதன்மைக் காரணியாக உள்ளன. வேலை உருவாக்கத்தில் சிறு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.அவற்றுக்கு கடன் வழங்கஅரசு எடுத்துவரும் முன்னெடுப்புகள் முக்கியமானவை. ஆனால், பெரிய நிறுவனங்கள் வழியாகவே சிறு நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே, சர்வதேச பிராண்டுகளை இந்தியாவுக்கு அழைத்து வர அரசு முயற்சி எடுக்கவேண்டும். குறிப்பாக, சீனாவை விட்டு வேறு நாட்டுக்கு நகர விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
4. நம் நாடு உலகளாவிய மதிப்பு சங்கிலிக்குள் இணைந்துவிட்டால், அதுஇந்திய நிறுவனங்களை சர்வதேச அளவுக்குஎடுத்துச் சென்று விடும். ஐபோன் தயாரிப்பில் டாடாவின் பங்களிப்பு ஒரு உதாரணம். அதேசமயம், உலகளாவியசந்தையில் வெற்றிபெற உயர்தர தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்.பிரச்சினை என்னவென்றால், இந்தியா ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டுக்கு செலவிடுவதில்லை. அதனால், இந்தியாவிலிருந்து சர்வதேச பிராண்டுகள் உருவாகவில்லை.
5. இந்தியா திறன்மிக்க இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு ஆலையில் வேலை செய்யும் பெண்களுக்கு வெறும் 4 முதல் 6 வாரங்களே பயிற்சி வழங்கப்படுகிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால், நம்முடைய ஐடிஐபோன்ற திறன் அமைப்புகள் மூலம் இளைஞர்களிடம் போதிய திறனை வளர்க்க முடியாமல் திணறுகிறோம். காரணம் நம் திறன் அமைப்புகள், நிறுவனச் சூழலிருந்து விலகி இருக்கின்றன.
6. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை முறையான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஐபோன் உற்பத்தி நமக்குக் காட்டுகிறது.
7. அரசும் நிறுவனமும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் உரையாடல் மேற்கொள்வது அவசியம். தமிழ்நாட்டில் ஆலை திறக்க ஆப்பிள் நிறுவனத்தை சம்மதிக்க வைக்க 15 மாதங்கள் ஆனது. திறந்த மனதைக் கொண்ட தமிழ்நாட்டு அதிகாரிகள் குழு, ஆப்பிள் அதிகாரிகளுடன் பொறுமையாக உரையாடல் மேற்கொண்டே இதை சாதித்தது. வியட்நாம் பிரதமர்ஐபேட் தயாரிப்பு ஆலையை தங்கள் நாட்டில்அமைக்கக் கோரி அமெரிக்காவில் உள்ளஆப்பிள் தலைமையகத்துக்குச் சென்று பேசுகிறார். சீனாவும் வெளிநாட்டு நிறுவனங்களை தங்கள் நாட்டில் கொண்டு வரத் தவறுவதில்லை. இந்திய ஆட்சியாளர்கள் இதற்கு பயிற்றுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு போன்ற ஒரு சிலமாநிலங்கள் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாக செயல்படுகின்றன.
இந்தியா உற்பத்திக்கான நல்ல களம் என்பதை ஐபோன் வருகை சர்வதேச நிறுவனங்களுக்கு தெரிவிக்கிறது. ஐபோன் ஆலையைகொண்டுவந்தது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஜவுளி, காலணி, பொம்மைகள், உணவு பதப்படுத்தல் என ஏனைய உற்பத்திப் பிரிவுக்கும் நாம் கடைபிடிக்க வேண்டும். உலகளாவிய உற்பத்தி மையமாகமாறுவதில் இந்தியாவுக்கு ஆசிய நாடுகள் மட்டும் போட்டியில்லை. மெக்சிகோ, அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்துடனும் இந்தியா போட்டியிட வேண்டிய சூழலில் உள்ளது. இதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
- குர்சரண் தாஸ் | தமிழில்: முகம்மது ரியாஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT