Published : 04 Jul 2024 07:25 AM
Last Updated : 04 Jul 2024 07:25 AM
டாக்டர் அம்பேத்கர் காலத்தில் சாதியை ஆராய்ந்த உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எல்லோரும் கவனிக்க மறந்த ஒன்று, இந்தியாவில் கிராமங்கள் ஊர்-சேரி என ஏன் இரண்டாகப் பிரிந்து இருக்கின்றன என்பதுதான். இந்தப் பிரிவினை அமைப்பு எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி அவர்கள் கவனம் கொள்ளாததால் அது ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது என்பது போன்ற கேள்விகளும் தோன்றாமல் போய்விட்டன.
ஆனால், அக்கேள்விகள் அம்பேத்கருக்குத் தோன்றின. அதனால் பிரச்சினையின் மூலத்தை அவர் கண்டறிந்தார். அவருக்குப் பின்னும் ஏராளமான அறிஞர்களையும் தலைவர்களையும் இந்தியா தோற்றுவித்தது. ஆனால், அவர்கள் யாரும் அம்பேத்கரின் கேள்வி குறித்தோ அல்லது ஊர் - சேரி என்பதன் தோற்றம், அதன் இயக்கம், அதன் ஒழிப்பு பற்றி அதிகம் பேசியதாகத் தெரியவில்லை.
அடிப்படைச் சிக்கல்கள்: தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் குடியிருப்பைக் கிராமம் என்று அழைக்கிறோம். அச்சொல்லுக்கு மூலச் சொல் ‘கிராம’ என்னும் வடசொல்தான். மக்கள் சேர்ந்து வாழும் ஒரு நாட்டுப்புறக் குடியிருப்புக்குத் தூய தமிழ்ப் பெயர் இன்னும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இது எப்போதும் இப்படித்தான் இருந்ததா? தொல்காப்பியத்தில் ‘ஊரும் அயலும் சேரியும்’ என மூன்று நாட்டுப்புறக் குடியிருப்புகள் குறிக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் ஊர் என்றும் சேரி என்றும் அழைக்கப்பட்டது ஒரே பொருளில்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த வரலாறு நீண்டது என்பதால், அதற்குள் போவது இப்போது தேவையற்றது. ஆயினும் கேள்வி என்னவென்றால், ஊர் என்பது இடைச்சாதியினர் வாழும் இடத்துக்கான சொல்லாகவும், சேரி என்பது தலித்துகள் வாழும் இடத்துக்கான சொல்லாகவும் மாறியது எப்படி? எப்போது?
கால மாற்றம் நிகழ்ந்து ஊர் என்பது இடைச்சாதியினர் வாழும் இடமாகவும், சேரி என்னும் தலித்துகள் வாழும் பகுதி ‘காலனி’ (Colony) என்றும் வழங்கப்படுகிறது. இதன் பின்னணி இதுதான்: வெற்றி கொள்ளப்பட்ட இந்தியா, வெற்றி கொண்ட பிரிட்டனின் காலனியாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக, காலனி என்கிற சொல் மீது ஏனோ மோகம் பற்றிக்கொண்டது. சாதியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட சாதியற்ற அவர்ண தலித்துகள், அவர்களை வெற்றிகொண்டதைக் குறிக்கும் வகையில் காலனி மக்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அது தோன்றிய காலத்தைக் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும், சேரி என்னும் சொல்லைப் பயன்படுத்துவது கூச்சமளித்ததால் குடியிருப்பு என்று பொருள்தரும் காலனியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அது இன்றும் கேள்விக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்டே இருக்கிறது. தலித்துகள் வசிக்கும் பகுதியைக் காலனி என்று அழைக்கும் சாதி இந்துக்களை யார்தான் தடுக்க முடியும்? எதிர்த்துக் கேட்டால், அது ஆங்கில வார்த்தை என்று பூசி மெழுகலாம்.
பண்பு மாற்றத்தின் தேவை: இப்போது காலம் மாறிவிட்டது. ஆனால், கிராமப்புறங்களில் சமூக வாழ்நிலை மாற்றம் பெரிதாக நிகழவில்லை. ஊர்-சேரி என்கிற பிரிவினையும் அப்படியேதான் நிலைத்துள்ளது. இதை ஒழிக்க வேண்டும் என்கிற செயல்திட்டம் எந்த ஓர் அமைப்பிடமோ அல்லது கட்சிகளிடமோ இல்லை. ஜப்பானில் புரோக்குமின்களுக்கும் (ஒதுக்கி வைக்கப்பட்டோர்), அமெரிக்காவில் கெட்டொக்களில் (புறக்கணிக்கப்பட்ட வாழிடம்) வசித்த கறுப்பின மக்களுக்கும் அந்நாடுகளில் எழுந்த குரல் இந்தியாவில் ஒலிக்கவில்லை.
இப்பிரச்சினையின் அவலத்தை முதலில் உணர்ந்த தலைவர்களுள் மு.கருணாநிதி முக்கியமானவர். அவர் உருவாக்கிய ‘சமத்துவபுரம்’ இந்தப் பாகுபாட்டை ஒழிக்க முற்பட்ட புரட்சிகரமான செயல்திட்டம். ஆனால், அத்திட்டம் ஏனோ நிறுத்தப்பட்டது. ஆயினும் அத்திட்டம் ஏற்கெனவே நிலவி வரும் ஊர்-சேரி அமைப்புக்கான மாற்று ஏற்பாடல்ல. அண்மையில் ‘கேரளம்’ என்கிற பெயர் மாற்றத்தின்போது அங்குள்ள தலித் குடியிருப்புகள் சேரி எனும் பொருள்படும் பெயர்களில் அழைக்கப்படக் கூடாது என்று ஓர் அறிவிப்பு வெளியானதைப் பார்த்தபோது, அது சரியான முன்னெடுப்பு அல்ல எனத் தோன்றியது. பெயரை மாற்றுவதல்ல தேவை, அதன் பண்பை மாற்றுவதுதான் முதல் தேவை.
சட்டம் இயற்றுவதன் மூலம் ஒரு பெயரை ஒழித்துவிட முடியாது. சேரி, காலனி என்கிற பெயர்களை ஒழிப்பதன் மூலம் எதை அடைய முடியும்? ஊர் - சேரி (காலனி) என்கிற சமூக அமைப்பு நில அடிப்படையில் இருப்பதால், அது சாத்தியப்படுமா? அதிகபட்சம் அரசு ஆவணங்களில் காலனி என்றும் சேரிகள் என்றும் இருப்பதைவேண்டுமானால் ஒழிக்கலாம். நடைமுறையில் அப்படி நிகழ்வது சாத்தியமே இல்லை. எனவே, மாற்று ஏற்பாடுகள் இதற்குத் தேவை.
என்ன செய்ய வேண்டும்? - ஊர் - சேரி என்கிற நில அமைப்பை ஒழிக்க முடியாது. ஆனால், அது நிரந்தரமானது அல்ல. இந்தியாவிலேயே விரைவாக நகரமயமாகும் மாநிலம் தமிழ்நாடு. ஒரு நகரம் உள்கட்டமைப்பு வசதிகளில் விரிவடையும்போது அருகில் உள்ள கிராமங்களை இணைத்துக்கொள்கிறது. பின் நாளாவட்டத்தில் நகரமாக மாறிவிடும்போது ஊர் - சேரி என்னும் இடைவெளி குறைகிறது. எனவே,நகரமயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும்.
தமிழ் உணர்வு மேலோங்கியுள்ள இக்காலத்தில், கிராமம் என்கிற வடசொல்லை நீக்கி, அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தி, அரசு ஆவணங்களில் அதைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். தலித்துகள் தங்களது குடியிருப்பைத் தனிக் கிராம அலகாக அறிவித்துக்கொள்ளவும், அதற்கான தனிப் பெயரைச் சூட்டிக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். காலனிகள் தனிக் கிராமங்களாகப் பெயர் மாற்றம் பெறும்போது, அப்பகுதிக்கே உரிய வரலாற்றுப் பெயர்களைச் சூட்டிக்கொள்ள அரசு வழிகாட்ட வேண்டும். அவை உடனடியாக வருவாய்த் துறை ஆவணங்களில் இணைக்கப்பட வேண்டும்.
தனிக் கிராமம் அல்லது குடியிருப்பாக அறிவிக்கப்பட்ட சேரிப் பகுதிக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, தனிக் கிராமத் தகுதியை வழங்க முடியும். 700 முதல் 25,000 மக்கள்தொகை கொண்ட ஊரகப் பகுதியைத் தனிக் கிராமமாக அறிவிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டம் இடம் தருகிறது. இதன் மூலம் கிராமங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பது உண்மை என்றாலும், அதற்கேற்ப மத்திய அரசிடமிருந்து பெரும் நிதியின் அளவும் இரட்டிப்பாகும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
தனிக் கிராமமாக அறிவிக்கப்பட்ட சேரிப் பகுதிகளில் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். ஊரக வளர்ச்சித் துறையின் நிதி உதவியும் ஆதிதிராவிட நலத் துறையின் வழிகாட்டலும் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியை உருவாக்கும். கல்வி - பொருளாதார வளர்ச்சியினால் ஊர் - சேரி என்கிற பிரிவினை படிப்படியாகக் குறைந்து ஓர் இணக்கம் உருவாகும்.
சேரிகள் அத்தனையும் தனியான ஒரு கிராமத் தகுதியினைப் பெற்று, தமது வளர்ச்சியை அவர்களே கவனித்துக்கொள்ள வாய்ப்பளிக்கும்போது தங்களைத் தாங்களே திறம்பட நிர்வகித்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்வார்கள். அப்படி நடக்காதெனில், அதற்கான பழியை அவர்களே சுமக்கட்டும். இந்த மாற்றத்தை அடுத்த25 ஆண்டுகளுக்கு அனுமதியுங்கள். ஊர் சேரிஎன்கிற சொல்லும் அதன் பண்பும் ஒழிந்துவிடும்.அதற்குப் பிறகு தனி உதவிகள் ஏதும் அப்பகுதிகளுக்குத் தேவைப்படாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT