Last Updated : 05 Jun, 2024 08:43 AM

1  

Published : 05 Jun 2024 08:43 AM
Last Updated : 05 Jun 2024 08:43 AM

வடக்கு, தெற்கு தந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும்

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட வட இந்திய மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் பொதுவாகக் கருதப்பட்டுவந்தது.

மக்களவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து, தென்னிந்தியாவில் பரவலாக பாஜகவுக்கு எதிரான மனநிலை நிலவுவதாகக் கூறப்பட்டது.

ஆனால், 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளின் பிராந்திய வாரி முன்னிலை நிலவரங்கள், இந்தக் கூற்று அவ்வளவு சரியானதல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

2024 தேர்தலில் 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த முறை 29.38% ஆக இருந்த அதன் வாக்குவிகிதம் இந்த முறை 36.1% ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றிபெற்றுள்ளார்.

இதன் மூலம் கேரள மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில்கூட வென்றதில்லை என்னும் வரலாறு முடிவுக்கு வந்தது. கடந்த முறை 37.9% வாக்குகளுடன் 65 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக் கட்சிகள் இந்த முறை 37.7% வாக்குகளுடன் 70 தொகுதிகளில் முன்னிலை வகித்தன.

வட இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை, 2019 தேர்தலில் 53.9% வாக்கு விகிதத்துடன் தே.ஜ. கூட்டணி 196 தொகுதிகளில் வென்றிருந்தது. இந்த முறை 48.3% வாக்கு விகிதத்துடன் 130 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த முறை 29.7% வாக்குகளுடன் 13 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த இண்டியா கூட்டணிக் கட்சிகள், இந்த முறை 40.1% வாக்குகளுடன் 72 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

வெற்றி / முன்னிலையைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை இறுதியானதல்ல என்றாலும், தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்புக்கு மாறாகத் தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொகுதி எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

அதைவிட முக்கியமாக பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட இந்தி பேசும் மாநிலங்களில் இண்டியா கூட்டணியின் வாக்கு விகிதமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. தொகுதி எண்ணிக்கையும் ஐந்து மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் 2019 தேர்தலில் பாஜக 62 (மொத்த தொகுதிகள்-80) தொகுதிகளில் வென்றது. இந்த முறை சமாஜ்வாதி 36, காங்கிரஸ் 7 என இண்டியா கூட்டணியின் இவ்விரு கட்சிகளும் மொத்தம் உள்ளவற்றில் பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இது, தேசம் முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2022 மாநில சட்டமன்றத் தேர்தல் பாஜக மீண்டும் அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியமைத்திருந்தது. எனவே, 2024 மக்களவைத் தேர்தல் தொடங்கியபோது உ.பி.யில் எதிர்க்கட்சிகள் இரட்டை இலக்கத் தொகுதிகளை வென்றாலே பெரிய சாதனை என்று கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தத் தேர்தல் தொடங்கும்போது கிழக்கு, மேற்கு மாநிலங்களில் வெல்லும் கட்சிகளே ஆட்சியைத் தீர்மானிப்பவையாக இருக்கும் என்று கருதப்பட்டது. மேற்கு வங்கத்தில் 2019இல் 18 தொகுதிகளை வென்றிருந்த பாஜக, இந்த முறை 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது, கிழக்குப் பிராந்தியத்தின் இன்னொரு மாநிலமான ஒடிஷாவில் இந்தப் பின்னடைவு சமன் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை அங்கு 8 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக, இந்த முறை 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மேற்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை பாஜகவின் கோட்டையாகவே குஜராத் தொடர்கிறது. 2019இல் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்த பாஜக, 2024 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி வென்றிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

ஆக, நான்கு முதன்மைப் பிராந்தியங்களைச் சேர்ந்த வாக்காளர்களுமே இரண்டு கூட்டணிகளுக்கும் கலவையான முடிவுகளைத் தந்துள்ளார்கள். ஒரே கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவானவையாகப் பிராந்தியங்களைச் சித்தரிப்பது தவறு என்பதை வாக்காளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x