Published : 18 Apr 2024 08:02 AM
Last Updated : 18 Apr 2024 08:02 AM
அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள் தேர்தல் காலத்தில் மிக முக்கியமானவை. சில பத்தாண்டுகளாக, தேர்தல் அலுவலர் என்னும் வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் முறையை நேரடியாகக் கவனித்துவருவதால், வாக்குச்சாவடி முகவர்கள் தொடர்பான அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு.
தொண்ணூறுகளின் தொடக்கம். சட்டமன்றத் தேர்தல். நான் பணியில் சேர்ந்திருந்த புதிது. முகவர்களே வரவில்லை என்றாலும் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவைத் தொடங்கிவிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. நாங்களும் தொடங்கிவிட்டோம். ஏழே கால் மணிக்கு ஒரு முக்கிய மாநிலக் கட்சியின் முகவர் வந்தார்.
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, “வாக்குப்பதிவை நிறுத்துங்கள்” என்று சத்தமிட்டார். நான், “வேட்பாளரின் நியமனக் கடிதம் இருந்தால் மட்டுமே நீங்கள் முகவராகிவிட முடியாது. உங்களுடைய ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர், தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால்தான் நீங்கள் முகவர்” என்றேன்.
வாக்குச்சாவடியைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வாக்குவாதம் நீண்டது. ஆவணங்களைச் சரிபார்த்து, முகவர் அட்டையை வழங்கிய பிறகு உரிய இடத்தில் அவரை அமரவைத்தேன். அப்போதெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி நிலைய அலுவலர் போன்றவை இல்லை. எவ்வளவு கவனமாக இருந்தாலும், ஒருவரது வாக்கை, மற்றொருவர் செலுத்திவிட்டுப் போய்விடுவார்.
மேற்படி இளைஞர் அடிக்கடி ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கூறிக்கொண்டு அருகில் வந்துவிடுவார். “உங்கள் இடத்திலிருந்தே கையை உயர்த்துங்கள். உங்கள் ஆட்சேபத்தைப் பரிசீலனை செய்து, வாக்கைச் செலுத்தும்படி கூறலாம்” என்று கூறி ஓரிடத்தில் அமரவைத்தேன்.
சற்றேறக்குறைய மாலை 3 மணி வரை, இதேதுடிப்போடு அந்த இளைஞர் செயல்பட்டார். அவரது செயல்பாடுகள் சரியா.. தவறா என்பது இங்கு இரண்டாம்பட்சம். அந்த இளைஞரின் துடிப்பே ஒரு கட்சியின் ஆன்மா. ஆரோக்கியமான ஜனநாயகத்தின் மூலக்கூறுகளில் ஒன்று.
அடுத்து, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி, பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் இருந்தது. ஒரு கட்சியின் வாக்குச்சாவடி முகவரால் பிரச்சினை எழுந்தது. அவருக்கு 60 வயது இருக்கும். தொடர்ந்து தேர்தல் அலுவலர்களை நோக்கித் திணறடிக்கும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அச்சுறுத்தும் வகையில் பேசினார். “பெட்டியை எடுத்துக்கொண்டு செல்லும்வரைதான் உங்களுக்குக் காவல் துறை பாதுகாப்பு. அதன் பின்னர் எங்கள் தயவில்தான் நீங்கள் வீடு செல்ல வேண்டும். இதோ ஆறு பக்கத்தில்தான் இருக்கிறது” என்று மிரட்டல் விடுத்தார். அதற்கெல்லாம் பயந்து அடிபணிந்துவிட மாட்டோம் என்பதை உறுதியான குரலில் சொல்லிவிட்டேன். அத்தோடு அவர் அமைதியாகிவிட்டார்.
வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப் பெட்டியை எடுத்துச்செல்ல, இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஊரார் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். கிராம நிர்வாக அலுவலர், “நீங்கள் பொருளியல் பேராசிரியர்தானே! புதிய தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிச் சொல்லுங்களேன்” என்றுஉரையாடலைத் தொடங்கிவைத்தார்.
வேளாண்மையில் இவற்றின் விளைவுகள் எப்படி இருக்கும் எனப் பேசத் தொடங்கினேன். காலையில் எங்களை மிரட்டிய அந்தப் பெரியவர், “சார், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எனது தோட்டத்தில் விளையும் நெல்லுக்கும் மாட்டுக்குக் கடையில் வாங்கும் தவிட்டுக்கும் ஒரே விலை. இந்த அநியாயம் இன்னும் விரிவடையப்போகிறதா?” என ஆதங்கப்பட்டுக்கொண்டே என் அருகில் வந்துஅமர்ந்துகொண்டார்.
அந்த நள்ளிரவில் ஊர்க்காரர்கள்கட்சி வேறுபாடின்றி கூட்டாகப் பல்வேறு விஷயங்களைவிவாதித்தனர். காலையில் வாக்குச்சாவடியில், ஒருவர்மீது ஒருவர் கோபத்துடன் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள்தான்; அந்தக் கலந்துரையாடலில் எல்லாமே மாறிவிட்டது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. எனினும், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி மீதான அவர்களுடைய பிடிப்பு மறக்க முடியாதது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ட வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்த துடிப்பு இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. கட்சிப் பற்றுதல் இல்லை. ‘எனது கட்சி... இந்த வாக்குச்சாவடிக்கு நானே பொறுப்பு’ என்கிற பொறுப்புணர்வு மங்கிவிட்டது. காத்திரம் நிறைந்த கடமை உணர்வு குறைவாக உள்ளது. இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை ஒரே இலக்கோடு வாக்குச்சாவடியில் பணியாற்றியது குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
அப்போதெல்லாம் கட்சிகள் தங்கள் முகவர்களுக்குப் பணம் கொடுத்தனவா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயமாகப் பணத்துக்காக அந்த முகவர்கள் வேலை செய்யவில்லை. கட்சிப் பணியை உயிர்மூச்சாகக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைய வாக்குச்சாவடி முகவர்கள், இன்றைய முகவர்களைக் காட்டிலும் மிகுந்த ஈடுபாட்டோடு வாக்குச்சாவடிகளில் இயங்கியதை உணர முடிகிறது.
வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற, கள்ள வாக்குகள் குறைய, வாக்காளர் அடையாள அட்டையும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பணி நியமனமும் பெருமளவில் முக்கியக் காரணம். அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலரோடு தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய தேவை இன்றைக்கு அதிகம் இல்லை. ஆனால், அதையெல்லாம் தாண்டி, அன்றிருந்த தீட்சண்யம், இன்று மிகவும் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.
கட்சிகளின் தொலைநோக்குப் பார்வையின் மீது உள்ள நம்பிக்கை குறைந்துவிட்டதாகப் படுகிறது. இதில் வாக்குச்சாவடி முகவர்களை மாத்திரம் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. ஓர் ஆழமான நெருக்கடியின் ஒரு பகுதியே இது என்றாலும், அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
- நா.மணி | தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT