Published : 16 Apr 2024 09:37 AM
Last Updated : 16 Apr 2024 09:37 AM
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு உள்படச் சில தேசிய அளவிலான தேர்வுகள், மாநிலங்களின் விருப்பத்துக்கு உள்பட்டவையாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு ‘கட் ஆஃப்’ கணக்கிடப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்வது நடைமுறையில் இருந்தது.
நுழைவுத் தேர்வுகளின் வரலாறு: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது 1983 வரை நேர்முகத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே நடந்துவந்தது. இதில் நடந்த முறைகேடுகளைக் களைவதற்காக ‘தமிழ்நாடு தொழில்முறைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு’ 1984இல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களும் சேர்த்தே கணக்கில் கொள்ளப்பட்டன. ஆனால், 2005-06 கல்வியாண்டின்போது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, இறுதித் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 2013இல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு 2017 முதல் தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டது.
2005க்கு முன்பு இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை, பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றதில்லை. உயிரியல் பாடத்தில் 200க்குப்பெறப்படும் மதிப்பெண்களை 100க்கும், வேதியியல்-இயற்பியல் பாடங்களில் 200க்குப் பெறப்படும் மதிப்பெண்களை முறையே 50 மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, பன்னிரண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வில் இந்த மூன்று பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்கள் 200 மதிப்பெண்களுக்குச் சுருக்கிக்கொள்ளப்படும்.
இயற்பியல்-வேதியியல் சேர்த்து 50 மதிப்பெண்களுக்கும், உயிரியல் பாடத்துக்கு 50 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டு, மொத்தத்தில் 100 மதிப்பெண்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு, நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு மாணவர் பெற்ற ‘கட் ஆஃப்’, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியிடப்படும்.
பள்ளியா, பயிற்சி மையமா? - அந்தக் காலகட்டத்தில், பன்னிரண்டாம் வகுப்பில் கடின உழைப்பை வெளிப்படுத்திப் படிக்கும் மாணவர்களால் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் நுழைவுத் தேர்வின் கேள்விகளும் இருந்தன. ஆண்டு முழுவதும் தனிப்பயிற்சி பெற வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
இன்றைக்கு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், நீட் தேர்வில் கேட்கப்படும் மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பயிற்சி மையங்களின் துணை இல்லாமல் பதிலளிப்பது சாத்தியமில்லை. இதற்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் செலவாகும் என்பதால், கிராமப்புற-பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குள்ளாகிறது. அத்துடன், பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றன.
கிராமப்புற இடஒதுக்கீடு: 1997-98 கல்வியாண்டின்போது திமுக அரசு கொண்டுவந்த கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 15% இடஒதுக்கீடு, மூன்று ஆண்டுகளுக்குக் கிராமப்புற மாணவர்களுக்குப் பொற்காலமாக அமைந்தது. ஆனால், கட் ஆஃப் மதிப்பெண் 288ஆக நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காலக்கட்டத்தில், கிராமப்புறப் பள்ளிகளிலிருந்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இந்த இடஒதுக்கீட்டை 2000-2001ஆம் கல்வியாண்டில் 25%ஆக அதிமுக அரசு உயர்த்தியது. எனினும், இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
தேர்வு அரசியல்: தமிழ்நாட்டின் முந்தைய நுழைவுத் தேர்வுக்குப் பள்ளிப் பாடங்களை ஒழுங்காகப் படிப்பதே போதுமானதாக இருந்ததால், தற்போது நடைபெற்று வருவதுபோல, ‘பகலில் பள்ளி, மாலை-இரவுகளில் பயிற்சி மைய வகுப்புகள்’ என்ற நிலை தேவைப்படவில்லை. மாணவர்களின் மனநல பாதிப்புகள், தேர்வின் அடிப்படையிலான தற்கொலைகள் அப்போது அரிது.
சில மதிப்பெண்களில் வாய்ப்பு நழுவியவர்கள்கூட மற்ற கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினர். ஆனால், இன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கும், தனியார் கல்லூரிகளில் கட்டணம் கொடுத்துப் படிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதி மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாததால், ‘நீட் தேர்ச்சி பெற்றும் சீட் கிடைக்காத விரக்தியில் மாணவர் தற்கொலை’ என்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது மருத்துவக் கல்வி மீண்டும் அரசியல்படுத்தப்படுவதை அதிகரிக்கிறது.
எனவே, பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் அதைக் கணக்கில் கொள்வதும், அப்படிப் படித்துவரும் மாணவர்களின் திறனைச் சோதிக்கும் வகையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்து கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவதும் நியாயமானதாகவும், மாணவர் நலன் மேலோங்கியதாகவும், தரமானதாகவும் இருக்கும்.
மாநிலங்கள் தங்களுக்கான தேர்வுமுறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக இருக்கும். இதற்கு மேல் மாநிலக் கல்லூரிகளில் இருக்கும் மத்திய அரசின் 15% இடஒதுக்கீட்டில் இடம்பெற முயற்சிக்கும் பொருளாதார வசதியுடைய மாணவர்கள் நீட் தேர்வில் பங்குபெற்று அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வது தமிழ்நாட்டு மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும்.
- godsonpsychiatrist@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT