Published : 16 Apr 2024 09:34 AM
Last Updated : 16 Apr 2024 09:34 AM
இணையப் பயன்பாடு பரவலான பிறகு தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சமூக வலைதளங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு இந்தப் போக்கு பெரும் வளர்ச்சி கண்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ‘ஐ.டி. விங்’ எனப்படும் பிரத்யேக அமைப்புகள் செயல்படுகின்றன.
இதில் ஈடுபட்டிருப்பவர்கள் சமூகப் பிரச்சினைகள், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் எனப் பலவற்றை உடனுக்குடன் ஒலி-ஒளி வடிவத்தில் அல்லது இணையச் சுவரொட்டியாகச் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இவையெல்லாம் வாக்காளர்களின் மனதில் தாக்கம் செலுத்துகின்றன.
இது தொடர்பாக புதுமையை விரும்புகின்ற கருதுகோள் (Innovation Hypothesis), இயல்பாகச் சிந்திக்கின்ற கருதுகோள் (Normalisation Hypothesis) என இரண்டு வகையான கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன. புதுமையை விரும்புகின்ற கருதுகோளின்படி இனி வருகின்ற நாள்களில் நேரடித் தேர்தல் பிரச்சாரங்களை இணையதளமும் சமூக வலைதளங்களும் முற்றிலுமாகத் தகர்த்துவிடும்; எல்லா பிரச்சாரங்களும் இணையதளம் வழியாகவே நடைபெறும்.
இணையதள வசதியைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்கிற நிலை எதிர்காலத்தில் உருவாகிறபோது, இந்தத் தொழில்நுட்பம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும்.
இயல்பாகச் சிந்திக்கின்ற கருதுகோளின்படி, இணையதள வசதியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும், அது தேர்தல் பிரச்சாரத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியாது.மாறாக, வழக்கமான தேர்தல் பிரச்சாரம் எப்போதும்போல் நடைபெறும்.
அதாவது தொழில்நுட்பம் அனைத்தையும் தீர்மானிக்க முடியாது. நடைபெறவிருக்கும் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிகுந்தோரின் (Social media influencer) பலத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.
இதற்காகப் பெரும் தொகை செலவிடப்படுகிறது. சமூக வலைதளங்களில் அதிகமான நண்பர்கள் / பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பவர்கள் மூலம் தங்கள் தேர்தல் பரப்புரைகளைக் கூடுதலான வாக்காளர்களிடம் கொண்டுசேர்க்கலாம் என்கிற அடிப்படையில் அரசியல் கட்சிகள் இதை முன்னெடுக்கின்றன.
இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களைப் பிரித்தறிகின்ற பக்குவம் ஒவ்வொரு வாக்காளருக்கும் வேண்டும். சமூக வலைதளங்களை விமர்சனப் பார்வையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தும்போது, அது ஆபத்தாக முடிந்துவிடுவதற்கும் சாத்தியம் இருக்கிறது.
எனவே, சமூக வலைதளங்கள் வழியாக வருகின்ற தேர்தல் பிரச்சாரங்களை விமர்சனப் பார்வையோடு சீர்தூக்கிப் பார்த்து, எந்தக் கட்சிக்கு நாம் ஓட்டுப்போடலாம் என்பதைத் தீர்மானித்தால், தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிலையை வாக்காளர்கள் நிச்சயம் அடைவார்கள்.
- தொடர்புக்கு: iruraj2020@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment