Last Updated : 10 Apr, 2024 08:51 AM

7  

Published : 10 Apr 2024 08:51 AM
Last Updated : 10 Apr 2024 08:51 AM

“பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!” - சிபிஐ தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா நேர்காணல்

மக்களவைத் தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டை நோக்கி தேசியத் தலைவர்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இண்டியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த முறை பாஜகவுக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் மோடி பேசுகிறார். பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் பாஜக தலைமையிலான அணிதான் வெற்றி பெறும் என்று கூறுகின்றன. உங்கள் பார்வையில் கள நிலவரம் எப்படி இருக்கிறது?

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று பிரதமர் மோடி பேசுவது வெற்றுக் கோஷம். அவர் மிரட்சிக்கு உள்ளாகியிருக்கிறார். தேர்தலில் என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சம் மோடிக்கும் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால், விரக்தியில் என்னென்னவோ பேசுகிறார்கள்.

ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது அல்லவா? அதுபோல இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு எல்லா மாநிலங்களிலும் பரவலாக ஆதரவு பெருகிவருகிறது என்பதே உண்மை.

அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணி, பாஜக கூட்டணி என எந்தக் கூட்டணியிலும் இணையாமல் சில கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்தக் கட்சிகளை இண்டியா கூட்டணியில் இணைப்பதில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது என்று கூறப்படுகிறதே?

தேர்தல் முடிந்த பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் முடிந்த பிறகு எப்படி நிலைமை மாறும் என்று சொல்ல முடியாது. தேர்தலில் ஆதரவு தரவில்லையென்றாலும், இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது அக்கட்சிகள் ஆதரவளிக்கும் நிலை ஏற்படலாம்.

எந்தெந்த மாநிலங்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்? ஒட்டுமொத்தமாக இண்டியா கூட்டணி அதிகபட்சம் எத்தனை இடங்களைப் பெறும் என்று கருதுகிறீர்கள்?

தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களிலும் பெரும் பான்மையுடன் வெற்றிபெறுவோம். ஆட்சி மாற்றம் சாத்திய மாகும்! தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை. அதேபோல எல்லா மாநிலங்களிலும் வெல்வோம்.

2004, 2009 காலகட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்டு செல்வாக்குடன் திகழ்ந்த இடதுசாரிக் கட்சிகள், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒற்றை இலக்க எம்.பி-க்களுடன் செல்வாக்கை இழந்தன. தற்போதைய தேர்தலுக்குப் பிறகு இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் எழுச்சி பெறுமா?

இந்தத் தேர்தலில் வெற்றி எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறோம். மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் மட்டுமல்ல, தமிழ்நாடு, பிஹார் உள்பட பல மாநிலங்களிலும் இடதுசாரி எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இடதுசாரிகளின் எண்ணிக்கை பலம் குறைந்தாலும் கொள்கை பலம் குறையவில்லை. அதனால்தான் பிரதமர் மோடி, இப்போது இடதுசாரி சித்தாந்தம் குறித்து அலறத் தொடங்கியிருக்கிறார். இந்த அலறலுக்கு என்ன காரணம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி யிடுவது உறுதி என்று தெரிந்தபிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஒருவரை அவருக்கு எதிராகக் களமிறக்காமல் உங்கள் கட்சி தவிர்த்திருக்க முடியும்தானே?

அதை நீங்கள் இப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் கேரளத்தில் இருப்பதே 20 தொகுதிகள்தாம். இடதுசாரி முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வயநாடு. அந்தத் தொகுதியில் நாங்கள் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறோம். 2019இல்கூட அவர் (ராகுல்) போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிட்டார். எனவே, இது புதிதல்ல.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) இடையிலான களப் போராட்டம் என்பதால் அங்கே பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே. தமிழ்நாட்டில்கூடச் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு இதுவரை இடம் கிடைக்கவில்லை என்பதுதான் கேரளத்தின் அரசியல்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடு வதால், அது பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறதே?

தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று சில கட்சிகள் விரும்புவதால் ஏற்படும் சிறிய பிரச்சினை இது. ஆனால், எங்கள் எல்லோருடைய ஒரே நோக்கமும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான்.

தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையால் அந்தக் கட்சிக்குச் செல்வாக்குப் பெருமளவில் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறதே?

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதைப் போல எனக்குத் தெரியவில்லை. அதிகமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். பணம் அதிகமாகச் செலவழிக்கிறார்கள். கொடி கட்டவும், போஸ்டர் ஒட்டவும் ஆள் பிடிக்கிறார்கள்.

ஆனால், களத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆளே இல்லை என்று காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பினவே? நாற்காலிகள் காலியாக இருந்தன, நட்டா அதிர்ந்துபோனார் என்று செய்திகள் வந்தனவே! மோடி, நட்டா எத்தனை முறை வந்தாலும் இங்கு அவர்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார நிலைமை மேம்பட்டது. எனவே, பாஜகவின் அரசியல் இங்கு எடுபடாது.

வரும் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?

மத்திய ஆட்சி, அதிகாரத்துக்காக நடைபெறும் இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்கிறோம், புதிய அரசு அமையும்போது அதில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று அப்போது தீர்மானிக்கப்படும். பாஜக வீழ்த்தப்பட்டு, புதிய அரசு அமைகிறபோது அதில் தமிழ்நாட்டின் பங்கு முதன்மையாக இருக்கும்.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x