Published : 02 Apr 2024 04:19 PM
Last Updated : 02 Apr 2024 04:19 PM
கச்சத்தீவு சர்ச்சை கடந்த சில நாட்களாக தேசிய, மாநிலத் தலைவர்கள் அனைவரும் கையில் எடுத்திருக்கும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இது மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து வெறும் 14 நாட்டிக்கல் மைல் (சுமார் 25 கிமீ) தொலைவில் தான் இருக்கிறது கச்சத்தீவு. இது தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கூட இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இதுவரை அவ்வப்போது பேசப்பட்ட இந்த விவகாரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பகிர்ந்த ட்வீட் மூலம் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.
அன்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில், “யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரைவார்த்திருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட புதிய தகவல்களின் மூலம் அம்பலமாகி உள்ளது. இந்த புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக் கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
இது போதாதா என்பது போல் மத்திய அமைச்சர்கள் முதல் மாநில பாஜகவினர் வரை பலரும் அதனை வைத்து கருத்து சொல்ல, அதற்கு தமிழகத்தில் திமுக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தொடங்கி, டெல்லி காங்கிரஸ் மேலிடம் வரை பதிலடி வரவும், ஒரு கட்டத்தில் வெளியுறவு அமைச்சரே விளக்கம் அளித்தார். இப்போது அதையும் சேர்த்துக் கொண்டு விவாதத்தை இன்னும் வலுவாக கட்டமைத்துள்ளன அரசியல் கட்சிகள். இப்படியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது கச்சத்தீவு சர்ச்சை.
ஆனால், இது எவ்வளவு தூரம் தேர்தலுக்கான விவாதப் பொருளாக உருவெடுத்து நீடிக்கும் என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது. கச்சத்தீவு 1974-ல் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் 1977-ல் மக்களவைத் தேர்தல் நடந்தது. அதனைத் தொடர்ந்து, இதுவரை நடந்த 12 தேர்தல்களில் 1998 மற்றும் 2014 என இரண்டு முறை மட்டுமே திமுக மற்றும் காங்கிரஸ் ஆதரவு இல்லாத வேட்பாளர்களை ராமநாதபுரம் தொகுதி பெற்றுள்ளது. இப்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக வசைபாடுவதும் காங்கிரஸ், திமுக ஆகிய இந்த இரு கட்சிகளைத்தான்.
1974-ல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியின் வெற்றியாளர்களுக்கு திமுக அல்லது காங்கிரஸின் முழு ஆதரவு இருந்து வந்துள்ளது. 2019-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி கண்டது. இந்த முறையும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் வேட்பாளர் அந்த இரு கட்சிகளின் முழு ஆதரவோடு அங்கே களம் காண்கிறார். இந்தத் தேர்தல் முடிவு புள்ளிவிவரங்களை அலசினாலே கூட கச்சத்தீவு விவகாரத்துக்கும், தேர்தல் அரசியலுக்கும் தொடர்பில்லை எனக் கூறலாம்..
இருப்பினும், அதிமுக மூத்த தலைவரான ஏ.அன்வர் ராஜா (2014-19 அதிமுக எம்.பி), இப்போதைய சூழலைப் பார்க்கும்போது ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு கூடும் எனக் கணிக்கிறார். ”1974-ல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இரந்தன. இப்போது 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவும் கச்சத்தீவு பிரச்சினையில் எதுவும் செய்யவில்லை. அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மட்டும்தான் கச்சத்தீவு மீட்பில் உண்மையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதனால், இப்போதைய சூழலைப் பார்க்கும்போது ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு கூடும்” என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.கோப்பண்ணா கூறுகையில், “கச்சத்தீவு விவகாரம் எப்போதுமே தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. இந்த முறையும் அதில் மாற்றமேதும் இருக்காது. மாநில மக்கள் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் வார்த்தைகளை நம்பமாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காக அவர் இதனைப் பேசுகிறார் என்றும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும், கச்சத்தீவுக்கும் மீன்படி விவகாரத்துக்கும் தொடர்பில்லை. ஏனெனில் கடல்வளத்தைப் பொறுத்தவரை நம்மைவிட அதிக வளம் கொண்டதாகவே இலங்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சி.ஆர்.கேசவன் கூறுகையில், “கச்சத்தீவு விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டு துரோகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது அந்த இரு கட்சிகள்தானே ஆட்சியில் இருந்தன. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது சகுனியின் சூதாட்டம் போன்றது. இந்திய நலனில் முக்கியமான ஒன்றை சூதாட்டத்தில் இழந்ததுபோல் இழந்தனர்” எனச் சாடியுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை காங்கிரஸும், 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், ஃபார்வர்ட் பிளாக், சுயேச்சை வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.ராமகிருஷ்ணன் | தொகுப்பு: பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT