Published : 13 Mar 2024 11:58 AM
Last Updated : 13 Mar 2024 11:58 AM
இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் விழா தொடங்கும் அதே நாளில், அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது பாஜக அரசு.
இந்து - முஸ்லிம் இரு வேறு அணுகுமுறையின் பின்னணி என்ன? - கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், இதில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் இணைக்கப்படாதது விமர்சனமானது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், அதன்பின் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. டெல்லி ஷாகின் பாக்கில் பல மாதங்களாக மக்கள் அறவழியில் போராட்டத்தை நடத்தினர். கொரோனா பரவல் காரணமாக அது கைவிடப்பட்டது.
இந்த நிலையில், 4 ஆண்டுகள் கடந்து இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது பாஜக. இது தொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் வாதம் என்ன? - அனைத்து எதிர்க்கட்சிகளும் இது பிளவை ஏற்படுத்தும் செயல் என்றும், தேர்தல் பத்திரம் விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் பாஜக, மக்களைத் திசை திருப்பும் நோக்கில் இதை அமல்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
பாஜகவின் முக்கியமான தேர்தல் வியூகமே இந்து பெரும்பான்மை வாக்குகளைக் கவருவதுதான். அந்தவகையில், சிறுபான்மையின இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புப் பிரச்சாரங்களை பாஜக செய்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகள் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டாக இருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என சொல்லப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தல் நேரத்தில் பாஜக அமல்படுத்தியுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளதாக மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ளும் பாஜக, சிஏஏ-வை அமல்படுத்தி இஸ்லாமியர்கள் வாக்குகள் இல்லாமலும் எங்களால் வெற்றிப் பெற முடியும் என்பதை உறுதியாக எடுத்துக் கூற சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியிருக்கலாம்.
எதிர்க்கட்சி மவுனம் ஏன்? - பாஜக இப்படியான சட்டத்தை அமல்படுத்தியபோதும், மாநில கட்சிகள் இதனை அமல்படுத்த மாட்டோம் என கூறுகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாகவும், இண்டியா கூட்டணி கட்சியைத் தலைமை தாங்கும் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இதனை எதிர்க்கிறார்களே தவிர, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை ரத்து செய்வோம் எனக் கூறவில்லை. இதில், அவர்களுக்கும் இரட்டை நிலைப்பாடு இருப்பதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக தீவிரமாகக் களமாட தயங்குகின்றனர் என்னும் வாதம் அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.
சிஏஏ அமல்படுத்தியிருப்பது பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT