Last Updated : 02 Mar, 2024 09:16 PM

1  

Published : 02 Mar 2024 09:16 PM
Last Updated : 02 Mar 2024 09:16 PM

‘ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி’ இந்தியாவில் சாத்தியமா? - ஓர் அலசல்

இந்தியாவில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட எந்தச் சட்டமும் தடை விதிப்பதில்லை. ஆனால், அவ்வாறு போட்டியிட வேண்டிய தேவை என்ன? வேட்பாளர் சுதந்திரமா? சுயநலமா? இதில் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் முரண்படுவது ஏன்? - இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அதிக தொகுதிகளில் போட்டியிட்ட முக்கியமான தலைவர்கள்: 1. கடந்த மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் வயநாட்டில் வெற்றிப் பெற்றார்.

2. 1957-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பால்ராம்பூர், மதுரா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பால்ராம்பூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.

3. 1999-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரி என இரு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அதன்பின், பெல்லாரியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

4. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மெயின்பூரி, அசாஹர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதனால், மெயின்பூரியில் மீண்டும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

5. நரேந்திர மோடி 2014-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரண்டும் தொகுதியில் இரண்டு தொகுதிகளிலும் வென்றார். பிரதமர் மோடி வெற்றி பெற்ற வதோதரா தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பாஜகவைச் சேர்ந்த ரஞ்சன் பட் வெற்றி பெற்றார்.

மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 33(7)-ன் படி ஒரு வேட்பாளர் இரண்டு இடங்கள் வரை போட்டியிட முடியும். 1996-ம் ஆண்டுக்கு முன், இந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது ஜனநாயகம்? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, அரசியல் வேட்பாளருக்கான தேர்வை தெளிவாக வழங்குகிறது. அடிக்கடி நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள், இடைத்தேர்தல்கள் மட்டுமே துடிப்பான ஜனநாயகத்தைக் உருவாக்க முடியும் என்னும் வாதமும் வைக்கப்படுகிறது.

அதேவேளையில், ஆரோக்கியமான ஜனநாயகத்தில் பல தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். வேட்பாளர் மற்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பதை வாக்காளர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும், அவரை நிராகரிப்பதற்கான விருப்பம் அவர்களுக்கு உள்ளது. ஒரு தலைவருக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டவே இந்த ஏற்பாட்டின் நோக்கம். வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக உரிமை என்பது போல, பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் உரிமையும் தடையின்றி தொடர வேண்டும்.

இந்த நடைமுறை சிக்கலானது ஏன்? - நேரம், பணச் செலவு: இப்படியாக, பலம் மிக்க பல தலைவர்கள் இரண்டு தொகுதிகளுக்கு அதிகமான இடங்களில் போட்டியிட்டுள்ளனர். ஆனால், இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவது நேரம் செலவு என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் ஒரு தொகுதியைக் கைவிடவேண்டும். இதனால் அந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இந்தச் செயல்பாட்டில் நேரம், பணம் மற்றும் ஆற்றல் அனைத்தும் வீணாகின்றன.

வாக்காளர்கள் இடையே குழப்பம்:இரண்டு தொகுதிகள் ஒரே வேட்பாளர் போட்டியிடுவதால், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும். குறிப்பாக, வேட்பாளர்கள் மீதான நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும்.

வேட்பாளர் சுயநலம்! - இரண்டு தொகுதியில் ஒரு வேட்பாளர் போட்டி என்பது மக்கள் நலன் என்பதைத் தாண்டி, வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்னும் சுயநலம்தான் மிஞ்சும் என்னும் கருத்தும் சொல்லப்படுகின்றன.

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி! - இதனால்தான் ஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதி என்னும் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 33(7) திருத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. குறிப்பாக, 2004,2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சிலிலும் இறங்கியது. ஆனால், அது பலனளிக்கவில்லை.

என்ன பரிந்துரைகள் இடம்பெறலாம்? அப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெறும் நிலையில், அந்தத் தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவை முன்னாள் வெற்றி பெற்ற வேட்பாளர் செலுத்த வேண்டும் என்பதான திருத்தங்களை மேற்கொள்ளலால். இது நிதிச்சுமையைக் குறைக்க வழிவகுக்கும் என்னும் வாதம் வைக்கப்படுகிறது.

எப்படி ’ஒரு வாக்காளர் ஒரு வாக்கு’ என்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கிறதோ, அதுபோல், ’ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி’ என்பதை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது பலரின் குரலாக இருக்கிறது.

ஆனால், சட்டத் திருத்தத்தை நிறைவேற்றும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. எனவே, அவர்களுக்குப் பலனளிக்கும் ஒரு சட்டத்தைக் கைவிடும் எண்ணம் அவர்களுக்கு எழுமா என்பது சந்தேகமே!

எனினும், இந்தச் சிக்கல்களுக்கு மாற்று வழியை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக பலர் முன்வைக்கும் கருத்துகளை நாம் தவிர்க்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x