Published : 26 Feb 2024 06:20 AM
Last Updated : 26 Feb 2024 06:20 AM
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது காங்கிரஸ் கட்சி அடிக்கடி சொல்லும் வாசகம். சில நேரம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட மதச்சார்பின்மை பற்றி பேசும். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்கள் தெளிவு. நாங்கள் இந்துத்துவா கொள் கையை ஆதரிக்கிறோம், பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்வார்கள், சொல்லி வருகிறார்கள்.
இந்திய ஜனத்தொகையில் 80% இந்துக்கள் 20% முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மதச் சண்டை ஜாதிக் கலவரம் இவை எப்போதாவது தலைதூக்கினால் அதன் பின்புலம் ஏதாவது ஒருஅரசியல் இருக்கும். தனிப்பட்ட எந்த இந்தியனும்ஜாதி மத வேறுபாடுகளை தாண்டிதான் தனது அன்றாட வாழ்க்கையை கடந்து போகிறான். இன்றைக்கும் இந்துக்களில் பலர் தங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மசூதியில் தாயத்து கட்டிக் கொண்டு பிரார்த்தனை செய்ய விரும்புகிறார்கள்.
ராமநாதபுரம் கோயில் நகரம். அந்த மக்களவை தொகுதியில் சென்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். இந்துக்களும் ஓட்டு போட்டுதான் அவரை வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். அயோத்தியில் ஒரு முறைநாடாளுமன்ற, சட்டமன்ற, நகர சபை தலைவர் உட்பட எல்லோருமே முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்களை தேர்வு செய்ததும் ராமஜென்ம பூமியில் இருந்த இந்துக்கள்தான். எனவே மக்கள் அரசியல் தலைவர்கள் விட தெளிவாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுக்கிறார்கள்.
அவர்கள் சார்ந்து இருக்கும் மதம், கடவுள் நம்பிக்கை எல்லாவற்றையும் அவர்கள் பூஜை அறையில் விட்டுவிட்டுதான் வெளியுலக வாழ்க்கைக்கு வருகிறார்கள். இந்த புரிதல் அரசியல் தலைவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதா, மகாளய அமாவாசை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு எல்லாம் கூட வாழ்த்து சொன்னார். கிறிஸ்மஸ் விழாக்களிலும் கலந்து கொண்டார். ரம்ஜான் காலங்களில் அவரும் நோன்பு கஞ்சி குடித்தார். சங்கராச்சாரியாரையும் அவர்தான் கைது செய்தார். கருணாநிதி தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசும் போது எனக்கு அந்த துணிச்சல் இருப்பதாக தெரியவில்லை. நான் கொஞ்சம் யோசிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜார்க்கண்டில் ராகுல் காந்தி பாரத் பாத யாத்திரை போன போது புகழ் பெற்ற சிவன் கோயிலான பாபா வைத்தியநாத் தாம் கோயிலில் பூஜை செய்து வழிபாடு செய்தார். நெற்றி நிறைய பட்டை போட்டுக் கொண்டு பிங்க் நிற ஆடையில் ராகுல் காந்தி வழிபடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாரணாசி கோயிலில் ருத்ராட்சம் அணிந்து வழிபடும் புகைப்படத்தை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மைக்கு இதெல்லாம் உதாரணம். திமுக ஆட்சி செய்யும் போது கூடதைப்பூசத்திற்கு புகழ்ப்பெற்ற முருகர் தலங்கள்இருக்கின்ற மாவட்டங்களில் உள்ளூர் அரசு விடுமுறை விடப்படுகிறது. அன்னை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா இங்கெல்லாம் இந்துக்களும் சேர்ந்துதான் போய் வழிபாடு செய்கிறார்கள்.
அரசின் நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவின் போது சம்பிரதாய பூஜை சாஸ்திரப்படி நடத்திவிட்டுதான் அந்த திட்டங்கள் பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. ஒரு திமுக எம்.பி. இப்படி பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து இயேசு படம் எங்கே, தர்கா படம் எங்கே, பெரியார் படம் எங்கே என்று சர்ச்சை செய்தார். அதன் பிறகு அவருக்கு வாக்கு வங்கி பயம் வந்ததும் அவரும் இது போன்ற பூஜைகளில் பவ்யத்துடன் கலந்து கொண்டார். கிறிஸ்மஸ் காலங்களில் கிறிஸ்மஸ் விழாக்களில் கலந்து கொள்வது, ரம்ஜான் காலத்தில் நோன்பு கஞ்சி குடிப்பதெல்லாம் அரசியல் வாக்கு வங்கி என்பது பொதுமக்களுக்கு தெரியாது என்று எந்த அரசியல் தலைவர்களும் நினைக்க மாட்டார்கள். வாக்காளர்களின் மதம் - மதச்சார்பின்மை பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
ஜோசப் விஜய் என்று பொது மேடையில் தன்னை ஒருமுறை அழைத்துக் கொண்டிருந்த நடிகர் விஜய், கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பு வெளியிட்ட புகைப்படத்தில் நெற்றி பொட்டுடன்தான் இருக்கிறார். எப்போதும் பளிச்சென்று விபூதி, குங்குமத்துடன் வரும் எடப்பாடி பழனிச்சாமி, கிறிஸ்துவ மத விழாவுக்கு போன போது, விபூதி, குங்குமம் இல்லாமல்தான் மேடை ஏறினார். இதுதான் அவர்கள் வாக்கு வங்கியின் பயம். சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உடனே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால், நிதீஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர்.
பாரதிய ஜனதா அதில் அரசியலே செய்தது.இதனால் 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்ததேர்தலில் 2 மாநிலங்களில் ஏற்கெனவே இருந்த ஆட்சியை காங்கிரஸ் இழந்தது. அதற்கு, உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன தர்ம விமர்சனம் ஒரு காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக சொன்னார்கள். இந்தியாவில் பல கிராமங்களில் அய்யனார், கருப்பு என அவர்கள் கொண்டாடும் விருப்பப்படும் காவல் தெய்வங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த தெய்வங்களுக்கு அவர்கள் விமர்சியாக பூஜை செய்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சில கிராமங்களில் ஓட்டு கேட்க வரும் அரசியல் தலைவர்களை அந்த கிராம தேவதை கோயிலில் வைத்து அவர்களை ஓட்டு கேட்க வைக்கிறார்கள். இதெல்லாம் நீண்ட காலமாக வரும் நடைமுறை.
சக்தி, துர்க்கை ,வெவ்வேறு பெயர்களில் அம்மன் என்று வழிபாடு பல ஊர்களில் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது தவிர ஐயப்பன், ஷீரடி சாய்பாபா, சந்தோஷி மாதா என்று மக்கள் ஈர்ப்புள்ள தெய்வங்களை இப்போதும் வழிபடத்தான் செய்கிறார்கள். இவை எல்லாமே வெகுஜன மக்களின் இஷ்ட தெய்வங்கள். ஆண்டின் 365 நாட்களில் கிட்டத்தட்ட 300 நாட்கள் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஏதாவது ஒரு இந்து பண்டிகை கொண்டாட்டம் இருப்பதும் அந்தப் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பதும் அந்தப் பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் சம்பிரதாய சடங்கு என்று தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.
முதல்வர் ஸ்டாலினின் மனைவி கூட தனது வீட்டில் தனியாக பூஜை அறை வைத்து கருணாநிதி மற்றும் அவரது மூத்த குடும்பத்தினர் படங்கள், சிவா, விஷ்ணு என்று எல்லா கடவுள் படங்களையும் வைத்து பூஜை செய்கிறார். அது அவரது தனிமனித விருப்பம். இதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. ஒருவர்கடவுளை வணங்குவதாலேயே அவருக்கு பகுத்தறிவு இல்லை என்று முடிவு செய்ய முடியாது. மக்களைப் பொறுத்தவரை காந்தி சொன்ன ஈஸ்வர அல்லா தேரோநாம் என்று தெளிவாக இருக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்குதான் அந்த தெளிவு இல்லை. அதுதான் நிஜம்.
தொடர்புக்கு Jasonja993@Gmail.Com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT