Published : 14 Feb 2024 08:08 AM
Last Updated : 14 Feb 2024 08:08 AM
உலகெங்கும் காதலுக்கென்று கடவுள்களும் விழாக்களும் உண்டு. சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் இந்திர விழாவும், தமிழகத்தின் காமன் பண்டிகைகளும் அத்தகையவைதான். தடைசெய்யப்பட்ட திருமண உரிமையை இளைஞர்கள் மீட்டிடத் தனது உயிரையே தியாகம் செய்த வாலன்டைன் என்கிற பாதிரியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது நினைவு நாளான பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இன்று சரக்காக (Commodity) மாற்றப்படாத எதுவும் இல்லை என்னும் நிலையில், காதலும் அதிலிருந்து தப்பவில்லை. காதலர் தினமும் அன்பளிப்புப் பொருள்களை விற்பதற்கான கொண்டாட்டமாகிவிட்டது. காதலையும் காதலர் தினத்தையும் வணிக நிறுவனங்கள் லாப நோக்கில் ஊக்கப்படுத்துகின்றன. காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கான பொருள்களின் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம், நுகர்வு உலகளாவிய வணிக உறவுகளை உருவாக்கியுள்ளது.
‘முதலாளித்துவம், மனித மாண்பைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய் சிறுமையடையச் செய்துவிட்டது.
முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருள் களுக்குத் தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகும்’ என கம்யூனிஸ்ட் அறிக்கையில் கார்ல் மார்க்ஸும் எங்கல்ஸும் குறிப்பிட்டுள்ளனர். அது காதலர் நாளுக்கும், அதையொட்டிய வணிகத்துக்கும் பொருந்தும். எனினும், வணிகமாக இருந்தாலும் காதல் என்றென்றைக்கும் வரவேற்புக்குரியதே.
மனித உரிமை மீறல்கள்: காதலும் காதலர் தினமும் சாதி, மதம், இனம், நிறம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து காதலர்களை இணைக்கின்றன. அவ்வகையில் சமூகத்தில் முற்போக்குப் பாத்திரத்தை வகிக்கின்றன. சாதி கடந்த கலப்பு மணங்கள், சாதி - வரதட்சிணை ஒழிப்புக்கும், இணையரைத் தெரிவு செய்யும் தனிநபர் சுதந்திரத்தைக் காக்கவும் உதவுகின்றன.
சாதி, சமய, இன, நிறப் பாகுபாடுகள் ஆணாதிக்கத்தை வேரறுக்க உதவுகின்றன. எனவே, அவை வரவேற்புக்குரியவை. அவை காக்கப்பட்டு, ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்கப் பட வேண்டும்.
சாதி, மத, இன, நிற அடை யாளங்களைப் பெரிதுபடுத்தி அரசியல் செய்ய நினைக்கும் பிற்போக்கு சக்திகள், காதலுக்கும், கலப்பு மணங்களுக்கும் எதிராகச் செயல்படுகின்றன. காதலர்களைத் தாக்குகின்றன, கொலைசெய்கின்றன. இவை மனித உரிமை மீறல்களாகும்.
விழிப்புணர்வு வேண்டும்: காதல் என்பது, வரலாற்றுரீதியாக உணர்வின் (Consciousness) பரிணாம வளர்ச்சியில் உருவான ஒன்று; மனிதச் சிந்தனையின் வெளிப்பாடு; விலங்குகளுக்கு இல்லாத - மனிதர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று; சமூகத்தன்மை உடையது; மனிதர்களிடையே சமூகரீதியான வாழ்க்கையை உருவாக்கியது. சமூக வாழ்வு இல்லையேல், காதலும் இல்லை. காதல், காதலின் தன்மை சமூக வாழ்நிலையை, குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தைச் சார்ந்துள்ளது.
சுதந்திரமான காதலை, திருமண உறவை, ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் ‘அகமணத் திருமண முறை’ மூலம் இந்திய சமூகத்தில் தடை செய்தது ஆளும் வர்க்கம். பரம்பரை பரம்பரையாகச் சாதி அடிப்படையிலான, தொழிலையும், உழைப்புச் சுரண்டலையும், ஆணாதிக்கத்தையும் உறுதிப்படுத்த புறமணத் திருமண முறை தடைசெய்யப்பட்டது.
இது சுரண்டும் வர்க்கத்தின் நலன் சார்ந்த நடவடிக்கை. எனவே, இதன் மூலம் சமூக வாழ்நிலை, காதலையும் பாலுறவையும் திருமண வாழ்வையும் எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இயற்கை உணர்வும் சமூக உணர்வும்: சமூகப் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி நிலை காதலில் தாக்கம் செலுத்துகிறது. மனிதர்கள் தங்கள் காதல் - பாலுறவு வாழ்வில் இயற்கையாகப் பெறப்பட்ட பாலுணர்வோடு, சமூகரீதியாகப் பெறப்பட்ட உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றனர். கலை, இலக்கியம், திரைப்படம், சமூக ஊடகச் செய்திகள் போன்றவற்றின் தாக்கம் இன்றைய காதலில் வெளிப்படுகிறது.
ஆண் - பெண் காதலில் பாலுணர்வும் பங்காற்றுகிறது. ஆனால், பாலுணர்வும் பாலுறவும் உயரிய காதலுக்கு ஒரு தடையாக இருந்ததில்லை என்பதையும் மானுட வாழ்க்கை உறுதிசெய்கிறது. முதுமை, பாலுறவில் ஈடுபட இயலாத பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால், பாலுறவில் ஈடுபட முடியாத நிலையிலும் மனிதர்கள் காதல் வாழ்வை மேற்கொள்கிறார்கள். காதல் என்பது ஆண் - பெண் சார்ந்த ஒன்றாக மட்டுமே இருப்பதில்லை என்பதும் கவனத்துக்குரியது.
காதலற்ற நிலையிலும் பாலுறவு நடை பெறுகிறது. பாலுணர்வும் பாலுறவும் சரக்குகள் ஆக்கப்பட்டுவிட்டன. இன்றைய ஏற்பாட்டுத் திருமணங்களில் கோடிக்கணக்கான மக்கள், காதலற்ற பாலுறவுடன் கூடிய வாழ்க்கை யையே வாழ்ந்து வருகிறார்கள்.
இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பின், திருமண முறைகளும், குடும்ப வாழ்வும், வரதட்சிணைகளும், பொருளாதாரச் சுரண்டல்களும், ஆணாதிக்கமும் காதலைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. குடும்பங்களை ஒரு பொருளாதார அலகாக, பாலுறவுக்கான, இனப்பெருக்கத்துக்கான, சாதி, மதம் போன்ற அடையாளங்களைக் காப்பதற்கான நிறுவனங்களாக முதலாளித்துவம் சுருக்கிவிட்டது.
காதலும் உயிரினங்களும்: மனிதர்களைத் தவிர இதர உயிரினங்கள், உயிரியல்ரீதியில் இயற்கையாகப் பெறப்பட்ட பாலுணர்வை மட்டுமே பாலுறவில் வெளிப்படுத்துகின்றன. ஆதி மனிதர்களும் அவ்வாறே வாழ்ந்தனர். குழு மணம், இணை மணம், ஒருதார மணம் எனப் பல பாலுறவு வாழ்க்கை முறைகளை மனித குலம் கடந்து வந்துள்ளது. குழு மண முறையில் காதலுக்கு வாய்ப்பில்லை.
காதல், சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியால் பரிணமித்த ஒன்று. காதல் எப்போதும் இருந்தது என்பது அறிவியலுக்குப் புறம்பானது. காதல் என்பது மனித சாரத்தின் (Human Essence) கூறு. இந்த மனித சாரம் வரலாற்றுரீதியில் உழைப்பு நடவடிக்கையால் உருவான ஒன்று.
மனிதர்களால் மட்டுமே உழைப்புக் கருவிகளை உருவாக்க முடியும். தாம் உருவாக்கும் கருவிகளைக் கொண்டு, சமூகரீதியாக உழைப்பு நடவடிக்கையில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு உழைக்கும் ஆற்றல் மனிதர்களிடம் மட்டுமே உள்ளது.
இத்தகைய உழைப்பின் மூலம் இயற்கைப் பொருள்களின் மீது செயல்பட்டு தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்கின்றனர். இத்தகைய உழைப்பு நடவடிக்கை பொருள்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. கருத்துகளையும் உற்பத்தி செய்கிறது. மனித உணர்வு, சிந்தனை, மொழி, அறிவியல், ஆன்மிகம், கலை, இலக்கியம் பண்பாடு, காதல் போன்றவற்றின் ஊற்றுக்கண்ணும் அதுவே. அந்த உழைப்பே மனிதனை உருவாக்கியது.
உழைப்பு நடவடிக்கையின் இந்த விளைவுகளே மனித சாரம். இந்த மனித சாரத்தின் கூறே காதல். எனவே, காதலை வெறும் உயிரியல் தன்மை கொண்ட ஒன்றாகவோ, ஹார்மோன்களின் செயல்பாடாகவோ சுருக்கிப் பார்ப்பது தவறு. அப்படிப் பார்ப்பது மனித குலத்தின் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியலுக்குப் புறம்பானதாகும்.
பண்பாட்டின் தாக்கம்: “சமூக வாழ்நிலையே சமூக உணர்வை (சிந்தனையை) தீர்மானிக்கிறது” என்றார் மார்க்ஸ். அது காதலுக்கும் பொருந்தும். உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட்ட, முற்போக்கான பண்பாடு நிலவக்கூடிய சமூக வாழ்க்கை முறையானது காதலிலும் தாக்கம் செலுத்தும். அச்சமூகத்தில் காதல் மேன்மையானதாக, அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.
காதல் மீது பணம், சொத்து, சாதி, மதம் போன்றவற்றின் செல்வாக்கு மறையும். காதல்வயப்படுவதற்கான அழகியல் உணர்ச்சியிலும் மாற்றங்கள் நிகழும். காதல்வயப்படுவதற்காக முதலாளித்துவ நுகர்வுப் பண்பாடு உருவாக்கியுள்ள அழகுணர்வும் தகரும்.
மனிதகுல நலனுக்கான படைப்பாக்கத் திறனும், உழைப்பாற்றலும், நற்பண்புகளும், மனிதநேயமும் காதலில் செல்வாக்கு செலுத்தும். இருவரின் காதலில் பிறரின் தலையீட்டைத் தடுக்கும். காதல் சுதந்திரமானதாகும்.
‘ஆதலினால், காதல் செய்வீர் உலகத்தீரே’ எனக் காதலின் பயன்களைக் கூறி அறைகூவல் விடுத்தார் பாரதியார். அந்தக் காதல் மேன்மையானதாக, அன்பு நிறைந்ததாகப் பரிணமிக்க, இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பு மாற்றப்பட வேண்டும். உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்.
முற்போக்கான பண்பாடு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே, அனைத்து வகை அடிமைத் தளைகளிலிருந்தும் காதலை விடுவிக்கும்.
- பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் | தொடர்புக்கு: daseindia@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT