Published : 17 Jan 2024 06:13 AM
Last Updated : 17 Jan 2024 06:13 AM

இந்திய மொழிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’

தமிழ்நாட்டின் இன்றியமையாத ஆளுமைகளைப் பற்றிய நூல்களின் வரிசையில் ‘இந்து தமிழ் திசை’, கடந்த 2019இல் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை வெளியிட்டது. இது அறிஞர் அண்ணா குறித்து அண்மைக் காலத்தில் வெளிவந்த மிக விரிவான, ஆழமான பதிவு. தமிழக அரசியலின் போக்கையே மாற்றியமைத்த அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அவருடன் பழகிய தலைவர்களின் அனுபவப் பகிர்வுகள், அண்ணா ஆற்றிய உரைகள் என அவரைப் பற்றிய முழுமையான பார்வையைத் தரவல்லது இந்நூல்.

அயலகம் செல்லும் தமிழ் ஆளுமைகள்: தமிழக அரசு, தமிழ் நூல்களை வெவ்வேறு மொழிகளுக்குப் பெயர்த்து உலக அளவில் கவனப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு, மொழிபெயர்ப்புக்கென தனி நிதிநல்கையை உருவாக்கியது. அந்த வகையில் 52 தமிழ் நூல்கள், வேற்று மொழிகளுக்குப் பெயர்க்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல், வங்காளம், குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு நூலாக்கம் பெற்று வருகிறது. அண்ணாவின் சிறுகதைகள், ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன. அவரைப் பற்றிய முழுமையான பார்வையைத் தரும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, இந்தியாவின் பிற மொழிகளுக்குச் செல்வது குறிப்பிடத்தக்க முயற்சி!

தமிழக அரசு, 2023இல் உருவாக்கிய மொழிபெயர்ப்புக்கான நிதி நல்கை மூலம், முக்கியமான தமிழ் படைப்புகள், இதுவரை வெளியில் செல்லாத நெடுங்காலக் குறை நீங்கும் சாத்தியங்கள் தோன்றியுள்ளன. பெரியாரின் வாழ்க்கை வரலாறு, பிற மொழிகளுக்குப் பெயர்க்கப்படாதது, அவர் குறித்து வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் புரிதல் ஏற்படுவதற்குத் தடையாக இருந்துவருகிறது.

அந்த வகையில் ஊடகவியலாளர் பாபு ஜெயக்குமார், 2021இல் பெரியார் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய ‘அ மேன் அஹெட் ஆஃப் ஹிஸ் டைம்’ என்ற நூல், கொரிய மொழியில் பெயர்க்கப்பட்டு வருகிறது.

அதேபோல, விடுதலைப்போராட்ட வீரரும் தொழிற்சங்கவாதியும் இடதுசாரிக் கொள்கையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவருமான சிங்காரவேலர் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நூல், ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்.’ கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் இதன் ஆசிரியர்கள்.

இந்நூல், தமிழக அரசின் நிதி நல்கை மூலம் மலையாளத்தில் ஆக்கம் பெறவுள்ளது. கேரளத்தின் சகாவுகள், விரைவில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டின் வரலாற்றைத் தங்கள் மொழியில் வாசிக்கலாம்.

‘அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!’ என எல்லைகளைக் கடந்து அறிவைப் பெருக்கப் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன். பெண் உரிமைக்காக அவர் எழுதிய பாடல்களும் ஏராளம். அவர் எழுதியதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்கள், டாக்டர் ஜாகிர் உசேன் என்பவரால் அரபு மொழியில் பெயர்க்கப்பட்டு வருகிறது. அரசியல், பண்பாட்டு நோக்கில் தமிழ்நாட்டின் தனித்தன்மை, தென்குமரியையும் வட வேங்கடத்தையும் கடந்து பலரைச் சென்றடையும் வாய்ப்பை இந்த மொழிபெயர்ப்பு முன்னெடுப்பு ஏற்படுத்தியுள்ளது. - ஆனந்தன் செல்லையா

முத்துகள் 5

தீட்டுப் பறவை
(ஒரு திருநங்கையின்
அமெரிக்க நாட்குறிப்புகள்)
கிரேஸ் பானு
திருநங்கை பிரஸ், விலை: ரூ.150

இலங்கையில் பெளத்தம்:
சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
கணநாத் ஒபயசேகரவின் ஆய்வுகள்
குறித்து ஒரு அறிமுகம்
தமிழில்: க.சண்முகலிங்கம்
குமரன் புத்தக நிலையம்
விலை: ரூ.175

ஆரோக்கிய வாழ்வு
ஆசனா இரா.ஆண்டியப்பன்
பாரதி பதிப்பகம்
விலை: ரூ.170

கனவல்ல நிஜம்: ஐஏஎஸ்
நெல்லை கவிநேசன்
குமரன் பதிப்பகம்
விலை: ரூ.250

டிடெக்டிவ் ஜெட் ஸ்பெஷல் (வகம் காமிக்ஸ்)
வகம் பப்ளிகேஷன்
விலை: ரூ.330

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x