Published : 12 Jan 2024 06:16 AM
Last Updated : 12 Jan 2024 06:16 AM
பருவமழைக் காலங்கள், பேரிடர்களின்போது வானிலை அறிக்கைகள் மக்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. 2004இல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உருவான ஆழிப்பேரலைப் பேரிடருக்குப் பிறகு, இந்தியாவில் புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences) தொடங்கப்பட்டது. இதன்கீழ் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை, மத்திய கால வானிலை கணிப்புக்கான தேசிய மையம், புணேயில் இயங்கும் இந்திய வெப்ப மண்டல ஆராய்ச்சி நிறுவனம், புவிக்கான பேரிடர் மதிப்பீடு மையம், கடல் சார் வளர்ச்சித் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கிவருகின்றன.
இதில் மிகப் பெரிய நிறுவனம் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை (Indian Meteorological Department). இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தொடங்கப்பட்ட அரசு நிறுவனங்களில் ‘இந்தியன்’ என்று இருக்கும். இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்ட காரணம் என்ன என்று பார்ப்போம்.
ஒரு வெப்ப மண்டலப் புயலானது 1864இல் கல்கத்தாவைத் தாக்கியது. 1866, 1871 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததன் காரணமாக வறட்சி ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வானிலைத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்ற கருத்து உருவானது. ஆகவே, வானிலைச் சேவைக்காக ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது.
1875 ஜனவரி 15 முதல் வானிலை அறிவிப்பாளராக ஹென்றி பிரான்சிஸ் பிளான்போர்டு பதவியேற்றார். 1889இல் சர் ஜான் எலியட் வானிலைக் கூடங்களுக்கான தலைமை இயக்குநராகப் (Director General of Observatories) பதவியேற்றார். 1905இல் கல்கத்தாவிலிருந்து சிம்லாவுக்கு இந்நிறுவனம் மாற்றப்பட்டது; அதே ஆண்டில் புணே நகரத்துக்கும் மாற்றப்பட்டது; 1944இல் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
வானிலைக் கூடங்கள்: வானிலைக் கணிப்புகளுக்கு ஆதாரமாக இருப்பவை வானிலைக் கூடங்கள் (Weather Observatory). வானிலைக் கூடங்களில் பதிவுசெய்யப்படும் தரவுகளே வரைபடங்களில் பொறிக்கப்பட்டு, பின்பு பகுப்பாய்வு (Analysis) செய்யப்பட்டு, வானிலை அறிக்கைகளாக, முன்னறிவிப்புகளாக, எச்சரிக்கையாக வெளியிடப்படுகின்றன.
அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக இன்று கணினிசார் கணிப்பாக (Numerical Weather prediction) கிடைக்கிறது. என்னதான் கணினி மூலம் என்றாலும், அதற்கு ஆதாரம் பல்வேறு நாடுகளில் உள்ள வானிலைக் கூடங்களில் பதிவுசெய்யப்படும் தரவுகளே. காற்றின் அழுத்தம், வெப்பம், காற்றின் திசை, வேகம் ஆகியவற்றைக் கொண்டுதான் வானிலை கணிக்கப்படுகிறது.
இதைத் தவிர மேக வகைப்பாடுகள், மழை வீழ்ச்சியின் அளவு, தோற்றத் தெளிவு (visibility) போன்றவை பதிவுசெய்யப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் தொடங்கப்பட்ட வானிலைக் கூடங்கள்தான் பழைமையானவை. கல்கத்தாவில் 1785இல், சென்னையில் 1796இல், மும்பையில் 1826இல் இவை தொடங்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல மாகாண அரசுகள் வானிலைக் கூடங்களை நிறுவின.
வானிலைச் சேவையைப் பொறுத்தமட்டில் பல சேவைகள் உள்ளன. அனைத்து சேவைகளையும் இங்கு சொல்ல முடியாத காரணத்தினால் விமானம் மற்றும் வேளாண் சேவைகளை மட்டும் இங்கு பார்ப்போம். விமான சேவையைப் பொறுத்தவரை ஓடுதளம் (Runway) சார்ந்த அமைப்புக்குக் காலநிலைத் தரவுகள் (Climate data) அவசியம். விமானங்கள் தரையிறங்குவது, வானில் பறப்பது என்பது காற்றை எதிர்த்துதான்.
ஆகவே, ஒவ்வொரு ஊரிலும் காற்று முதன்மையாக வீசும் திசையைக் கருத்தில் கொண்டு இது அமைக்கப்படுகிறது. உலக வானிலைக் கழகமும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பும் சேர்ந்து வானிலை மையங்களுக்கு, குறிப்பாக விமானநிலையத்தில் அமைந்துள்ள மையங்களுக்கு வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளன.
இதன் காரணமாக வானிலை சார்ந்த விபத்துகள் கணிசமாகக் குறைந்துள்ளன. ஒரு விமானம் எந்த உயரத்தில் பறக்கிறது என்பது, தரைநிலை வானிலைக் கூடத்தில் பதிவுசெய்யப்பட்ட காற்றின் அழுத்தம், விமானத்தில் பதிவுசெய்யப்படும் காற்று அழுத்தத்தின் மாறுபாடு ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
புயல், எரிமலை வெடிப்பு போன்றவை நிகழும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்துவிடுவதால், அந்த இடங்களை விமானங்கள் தவிர்த்துவிடும். வளிமண்டல மேலடுக்குகளில் அதிகமான வேகத்தோடு வீசும் காற்றைக் கருத்தில்கொண்டு, அந்தக் காற்றோடு விமானம் பயணித்தால் எரிபொருள் செலவு குறையும். இப்படிப் பல முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும்.
விவசாயத்துக்குப் பலனளிக்கும் வானிலை: வேளாண் பணிகளுக்கு வானிலையின் பங்கு மகத்தானது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது நமது பகுதியில் மழை வரும் என்பதற்காக அல்ல. கர்நாடகத்தில் பெய்யும் மழையால் (தென்மேற்குப் பருவமழை) அந்தக் காலத்தில் காவிரியில் நீர்வரத்து இருக்கும். மழையை நம்பியிருக்கும் மானாவாரிப் பயிர் முறையில் பயிரிடப்படும் பயிர்களின் வளரும் காலமும், மழை வரும் காலமும் ஒன்றாக இருந்தால் மகசூல் நன்றாக இருக்கும்.
ஒவ்வொரு ஊரின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, அந்தப் பகுதிகளில் மழை வரும் காலத்துக்கேற்பப் பயிர் செய்ய வேண்டும். பல நாள்களுக்கு மழை வராது என்றால், இலை நீராவிப் போக்கின் (Evapotranspiration) காரணமாகப் பயிர் வாடத் தொடங்கும். இதைத் தடுப்பதற்குச் சில இலைகளை வெட்ட வேண்டி வரும் (Ratooning). இல்லையென்றால் மூடாக்கை (Mulch) வேர்ப் பகுதிகளில் போட்டுப் பாதுகாக்க முடியும்.
வேளாண் வானிலைத் துறை இணையதளத்தில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் அந்தந்த வாரத்தில் விவசாயிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு பயிர்க்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அறுவடை செய்த பிறகு சாலையில் உலர வைப்பது வழக்கம்.
நான் பணிசெய்த காலத்தில் மழை வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, விவசாயிகள் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வர். பெய்த மழையின் அளவு, வறட்சி குறித்து வானிலை மையத் தரவுகளை வைத்து விவசாயிகள் காப்பீட்டுத் தொகையைப் பெறுகின்றனர்.
வாழ்க்கையின் அங்கம்: அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தும் ஆற்றல் வானிலைத் துறைக்கு உண்டு. ஆளில்லாப் பெருங்கடல் பகுதிகளில் தோன்றும் புயல்களைச் செயற்கைக்கோள் மூலம் தெரிந்துகொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று எதிரி நாட்டு விமானங்களைக் கண்டறிந்து அழிப்பதற்கு ரேடார் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வானிலைத் துறை மேகத் தொகுதிகளை ஆய்வதற்கு ரேடார்களைப் பயன்படுத்துகிறது. ஒரு காலத்தில் வானிலை மையங்களில் உலகளாவிய தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள் (Global Telecommunication Network) வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ளதரவுகளைப் பரிமாற்றம் செய்வதில் ஈடுபட்டன. பின்னர், கணினி-இணையத்தின் பயன்பாடு தொடங்கியது.
இன்றைக்கு செல்போன் மூலம் தரவுகளைப் பெறும் வசதிகள் உள்ளன. செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கு வானிலைத் தரவுகள் முக்கியம். ஏவூர்தியானது (ராக்கெட்) ஒவ்வொரு அடுக்கிலும் வீசும் காற்றைக் கருத்தில்கொண்டு வளைந்து, வளி மண்டலத்தைக் கடந்து செல்லும். அந்த வகுக்கப்பட்ட பாதையை ‘Trajectory Shaping’ என்று அழைப்பார்கள். இதற்கு வானிலைத் தரவுகள் பயன்படுத்தப்படும்.
2025இல் இந்திய வானிலைச் சேவையின் 150ஆவது ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. வானிலையின் தாக்கம் என்பது மனித வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது. நாம் பாதுகாப்பாக வாழவும், வளத்தைப் பெருக்கவும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜனவரி 14: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆம் ஆண்டு தொடக்கம்
- தொடர்புக்கு: srramanan56@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT