Published : 14 Dec 2023 06:10 AM
Last Updated : 14 Dec 2023 06:10 AM
வட சென்னை எனக்கு அறிமுகமான நாளில் இருந்து இன்றுவரை புறக் கணிக்கப்பட்ட பகுதியாகவே என்னுள் பதிந்திருக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் அடித்தட்டு வர்க்கத் தினர் என்பதால், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்காக இங்கிருந்து மக்கள் திரளாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அரசியல் கட்சிகளின் ஆதாயத்துக்காகவே இவர்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பேரிடர்க் காலங்களில் இம்மக்கள் கைவிடப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. சமீபத்திய மிக்ஜாம் புயல் இந்தக் குற்றச்சாட்டை உறுதியாக்கி இருக்கிறது. டிசம்பர் 4 அன்று சென்னையில் பெய்த கனமழையில் நகரம் முழுவதும் மழைநீர் வெள்ளமாகச் சூழ்ந்துகொண்டது. வட சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதத்துக்குள்ளாகின. வியாசர்பாடியின் முல்லை நகர், சத்யமூர்த்தி நகர் போன்ற நெரிசல்மிக்க பகுதிகளில் கையில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் அல்லல்படுவதைக் காண முடிந்தது. எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவால் மக்கள் தீவிரச் சுகாதாரச் சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், வெள்ள நீர் வடியும்வரை எந்த அரசியல் கட்சியும் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வரவில்லை; அவர்களுக்குரிய நிவாரணங்களும் கிடைக்கப்பெறவில்லை. வெள்ள நீர் வடிந்த பிறகே மீண்டும் வட சென்னையைத் தற்போது கட்சிகள் முகாமிடத் தொடங்கியுள்ளன. நிவாரணப் பொருட்கள் பகுதி பகுதியாக வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையின் வரலாற்று அடையாளமாக வட சென்னை இருந்தாலும் வளர்ச்சியளவில் மத்திய, தென் சென்னையை ஒப்பிடுகையில் வட சென்னைப் பகுதிகள் பலமடங்கு பின்தங்கியுள்ளன. சாலைகள், கழிவுநீர் வசதி போன்றவை இன்னமும் முழுமையாக வட சென்னையில் சீரமைக்கப்படவில்லை. இதனால், இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வது இங்கு கூடுதல் சிக்கல்களை உருவாக்குகிறது. வட சென்னை நில அமைப்பு, முந்தைய ஆண்டுகளில் இப்பகுதி சந்தித்த பேரிடர்கள் குறித்த தரவுகள் இருந்தும் அரசு களத்தில் செயலாற்றத் தவறியிருக்கிறது. வட சென்னையில் குப்பை மேலாண் மையின் நிலை படுமோசம். குறிப்பாகக் காசிமேடு, எண்ணூர் போன்ற கடற்கரைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகம். இதில் மிக்ஜாம் புயலினால் நகரில் பெரும்பாலான இடங்களில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகளை நீக்க தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திடக் கழிவு மேலாண்மையைக் கையாள்வதில் நம்மிடம் இருக்கும் அறியாமையின் காரணமாக, மட்கும், மட்காத குப்பைகள் என ஒரு சில இடங்களில் குப்பைகள் கவனமாகப் பிரிக்கப்பட்டாலும் அவை போதுமான தீர்வைத் தரவில்லை. வட சென்னையைச் சீர்செய்யப் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்தாலும், அவை முழு வீச்சில் செயல்படுத்தப்படுவதில்லை. ரூ.1,000 கோடி மதிப்பில் வட சென்னை மேம்படுத்தப்படும் என்று சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கான வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில், மிக்ஜாம் புயலால் வட சென்னை யின் கட்டமைப்பு சறுக்கலைச் சந்திருக்கிறது. இவற்றிலிருந்து வட சென்னை மீள்வது எப்போது?
- தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT