Published : 29 Nov 2023 04:29 AM
Last Updated : 29 Nov 2023 04:29 AM
கடந்த 50 ஆண்டுகளில் பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் நிகழ்த்தியிருக்கும் அத்துமீறிய ஆக்கிரமிப்புகள் குறித்து இவர்கள் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் மிகவும் பயங்கரமானவை. 6 லட்சம் யூதர்கள்பாலஸ்தீனர்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு வாழ்வதாகச் சொல்லும் இவர்கள், 1967 முதல் இன்றுவரை இஸ்ரேலிய அரசு அபகரித்த நிலத்தின் அளவு ஒரு லட்சம் ஹெக்டேர் என்றும் இடிக்கப்பட்ட வீடுகள் 50 ஆயிரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த எண்களைக் காட்டிலும் கொடூரமான இன்னொரு எண் இருக்கிறது. உங்கள் வீடு ஒரு வீதியில் இருக்கிறது. உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரது வீடு பக்கத்து வீதியில் இருக்கிறது. நடந்து சென்றால் ஐந்து நிமிடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தொலைவை நீங்கள் இரண்டரை மணி நேரம் நடந்துதான் கடக்க வேண்டும் என்று சொன்னால் என்ன ஆவீர்கள்?
வீட்டை விடுங்கள். போகாமல்கூட இருந்துவிடலாம். உங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூடம் பக்கத்துச் சாலையில் இருக்கிறது. ஆனால் அங்கே செல்ல நீங்கள் அதற்கு நேரெதிரான வேறொரு சாலை வழியே இன்னொரு எல்லைக்குச் சென்று அங்கிருந்து மற்றொரு பாதை வழியேதான் பள்ளிக்கு வரவேண்டுமென்றால்? குடிநீர் வேண்டுமென் றால் ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். கடைக்குப் போக ஆறேழு கிலோ மீட்டர். ஒரு அவசர ஆத்திரத்துக்கு மருத்துவமனைக்குப் போக வேண்டுமென்றால் வழியில் குறைந்தது இரண்டு மூன்று சோதனைச் சாவடிகளில் நின்று போக வேண்டும்.
இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? என்றால்,காரணம் சுவர்கள். ஆக்கிரமித்த பாலஸ்தீனம் முழுவதிலும் இஸ்ரேலியர்கள் தடுப்புச் சுவர் எழுப்பிவிட்டார்கள். சுவருக்கு அந்தப் பக்கம் யூதப் பகுதி, இந்தப் பக்கம் முஸ்லிம் பகுதி.பெரும்பாலும் எல்லா வீதிகளிலும் யூதக் குடியேற்றங்கள் நடந்துவிட்டதால் எங்கும் சுவர்,எதிலும் சுவர். இந்தத் தடுப்புச் சுவர்களின்மொத்த நீளம் சுமார் 700 கி.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று ஒரு புள்ளிவிவரம் இருக்கிறது.அவை 99 சதவீதம் பாலஸ்தீனர்களின் நிலத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
இந்தச் சுவர்களைக் கட்டுவதற்காக ஏராளமான பழத் தோட்டங்கள், ஆலிவ் தோப்புகள் உள்ளிட்டமுஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த சுவர்அரசியல் குறித்த ஒரு வழக்கில்இஸ்ரேல் அரசு குற்றவாளி என2004-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது. சுவர் எழுப்புவதற்காக அபகரித்த நிலங்கள் அனைத்தையும் திருப்பித் தர இஸ்ரேல் அரசு கடமைப்பட்டிருக்கிறது என்றும் நீதிமன்றம் சொன்னது.
மேலோட்டமான பார்வையில் இப்பிரச்சினையைப் புரிந்துகொள்வது சிரமம். மனதளவிலாவது அந்தச் சூழ்நிலையில் சிறிதுவாழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு தலைபோகிற அவசரம் என்று வரையறுத்து அளிக்கப்பட்ட சுற்றுப்பாதையைத் தவிர்த்துவிட்டு ஒரு பாலஸ்தீனர் யூதக் குடியேற்றம் உள்ள பகுதி வழியாகப் போய்விட்டால் கதை முடிந்தது. சோதனைச் சாவடியில் நிறுத்திவிடுவார்கள்.
ஒரு தீவிரவாதியைத் தவிர வேறு யாரும் அப்படி அத்துமீறி வரமாட்டார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும், அது எவ்வளவு உண்மையாக இருந்தாலும் அன்று முழுவதும் சோதனைச் சாவடியிலேயேதான் இருக்க வேண்டும். மறுநாள் விசாரணைக்கு அழைத்துச் செல்வார்கள். அப்படிப் போனவர்கள் பெரும்பாலும் திரும்ப மாட்டார்கள்.
பெரும்பாலும் விசாரணை என்ற ஒன்று இல்லாமலேயே அவர்களை சிறையில் பலமாதங்கள் வைத்திருப்பதும் உண்டு. 15, 16வயது சிறுவர்களும் இதற்குத் தப்புவதில்லை.இப்படி அவசரத்துக்கு யூதக் குடியிருப்புகள் பக்கமாகப் போய் கைதான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்தது 8,000 என்கிறது ஐ.நா.வின் பாலஸ்தீனத்துக்கான சிறப்புக் கண்காணிப்புப் பிரிவு.
மம்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அத்தாரிட்டி, இந்த விஷயம் தொடர்பாக அவ்வப்போது அதிருப்தி தெரிவிக்கும். ஆனால் அதற்குமேல் ஒன்றும் கிடையாது. ஆனால் காஸாவின் நிலைமை வேறு. அங்கும் யூதக் குடியேற்றங்கள் உண்டு. தடுப்புச் சுவர்கள் உண்டு. என்னதான் 2004-லேயே காஸாவில் இருந்த தனது தரைப்படையை இஸ்ரேல்திரும்ப அழைத்துக்கொண்டது என்று சொன்னாலும் வான்படை, கடற்படை வீரர்கள் அங்கேயேதான் இருந்தார்கள். ஆனால் அது ஹமாஸ் உலவும் பிராந்தியம் என்பதால் மேற்குக் கரை அளவுக்கு மக்களுக்கு இந்த நடமாட்ட விவகாரச் சிக்கல்கள் கிடையாது
(தொடரும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT