Published : 20 Nov 2023 06:13 AM
Last Updated : 20 Nov 2023 06:13 AM
“இந்தியாவுக்குச் சுதந்திரத்தைவிடச் சுகாதாரம் தான் முக்கியம்” என மகாத்மா காந்தி சொல்லி 98 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுகாதாரம் மேம்படுவதற்குக் கழிப்பறையும் அவசியம். கழிப்பறையைப் பயன்படுத்துதல் தனிமனித நலன் சார்ந்தது மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. இன்றைய நவீன யுகத்தில் எவ்வளவோ விஷயங்களைச் சாதித்துவருகிறோம். எனினும், கழிப்பறை விஷயத்தில் ஏன் இந்தியா இன்னமும் முன்னேற்றம் காணவில்லை?
கழிப்பறை இல்லை: உலகில் 420 கோடிப் பேர், அதாவது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறை உள்ள சூழலில் வாழ்கின்றனர் என்றும் 67 கோடியே 30 லட்சம் பேர், மலம் கழிக்கத் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாகவும் ஐ.நா. குழந்தைகள் நிதியமும் (யுனிசெப்), உலக சுகாதார நிறுவனமும் சொல்கின்றன. ஏழு நபர்களில் ஒருவர் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருவதாக யுனிசெப் கூறுகிறது.
“கிராமங்களில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோருக்குக் கழிப்பறை வசதி இல்லை” என தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. “கிராமப்புறக் குடும்பங்களில் 28.7% வீடுகளுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அவர்கள் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்” என்கிறது குடிநீர், சுகாதாரம் - வீட்டுவசதி நிலை குறித்த அறிக்கை. ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட 42% கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இது தமிழ்நாட்டில் 37%; ராஜஸ்தானில் 34% என உள்ளது. “96.2% நகர்ப்புறக் குடும்பங்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன” என்று தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
பள்ளிகளில்... “இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை” எனக் கூறியிருக்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால். இந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உண்டு. தமிழ்நாட்டில் கழிப்பறை வசதி இல்லாத 2,391 அரசுப் பள்ளிகளின் பட்டியலை 2020ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்படைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட செய்தியில், 2020இல் நடத்தப்பட்ட ஆய்வில், 40% அரசுப் பள்ளிகள் போதிய கழிப்பறைகள் இல்லாதவை அல்லது பயன்படுத்த முடியாதவை எனக் கண்டறியப்பட்டது. ஏறக்குறைய 72% கழிப்பறைகளில் போதிய நீர் இல்லை. தேவையான துப்புரவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக, 23% பெண்கள் பருவமடைந்த பின்னர் பள்ளிப் படிப்பைவிட்டு வெளியேறும் அவலமும் நேர்கிறது.
பாதிப்புகள்: பொதுவாகப் போதிய சுகாதார வசதிகள் இல்லாதது, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் ஆகியவை வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நீர் மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவில் இந்த நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,000 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்கிறது யுனிசெப். உயரத்துக்கு ஏற்ற எடையைக் கொண்டிருப்பதிலும் இந்தியக் குழந்தைகள் பின்தங்கியே உள்ளன. இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு, கழிப்பறையைப் பயன்படுத்தாததும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமும் பரவலாக இருப்பதே காரணம்.
முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள்கூட நோய்களைப் பரப்பும் மையங்கள்தான். இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கும் மக்களுக்கும் உண்டு. நகர்ப்புறங்களில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பொதுக் கழிப்பறைகளின் தேவை அதிகம். தவிர, ஏழை-எளிய மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்படும் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. கழிப்பறைக்குத் தேவைப்படும் தண்ணீர் வசதி, மின் வசதி, பாதுகாப்பு போன்றவற்றையும் அரசு வழங்க வேண்டும். முதியவர்களின் பயன்பாட்டுக்காக மேற்கத்திய வகை கழிப்பறைகளும் ஆங்காங்கே இருத்தல் நலம்.
பொருளாதார இழப்பு: போதிய கழிப்பறை வசதிகள், சுகாதார வசதிகள் இல்லாததால், ஒவ்வோர் ஆண்டும், ரூ.2.4 லட்சம் கோடியை இந்தியப் பொருளாதாரம் இழந்து வருகிறது என்று உலக வங்கியின் அங்கமான, நீர்-சுகாதாரத்துக்கான இயக்கம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆகும். அகால மரணங்கள், சிகிச்சை செலவு, நோய் காரணமாக வேலை நேர இழப்பு, வருமானம் இழப்பு போன்றவற்றால் இந்த இழப்புகள் நேர்கின்றன. அதாவது, சுகாதாரம் இல்லாததால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.1,200 கோடி அளவுக்குச் சுற்றுலாத் துறையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளின் அருகே மலம் கழிக்கப்படுவதால், குடிநீர் சுத்திகரிப்பதற்கு ஆண்டுதோறும், ரூ.11,200 கோடி செலவாகிறது. சுகாதாரமற்ற குடிநீர், கழிப்பிடங்களால் ஏற்படும் உடல்நலக் குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் ரூ.21,700 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
கழிப்பறையின் அவசியம்: சுகாதாரத்தை ஓர் அடிப்படை மனித உரிமையாக ஐ.நா. அங்கீகரிக்கிறது. சுகாதார வசதிகளைப் பெறுவது என்பது ஒருவரது அடிப்படை உரிமையாகும். கழிப்பறை வசதி தனிநபர்களின் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. நோய்களைத் தடுப்பதிலும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் பெண்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது. பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாதது, குறிப்பாகப் பெண் குழந்தைகள் கல்வி கற்கத் தடையாக இருப்பதை மறுக்க முடியாது. கழிப்பறை மேம்பாடு என்பது, மருத்துவச் செலவுகளைக் குறைக்கிறது. சுற்றுச்சூழலையும் நீராதாரங்களையும் பாதுகாக்கிறது. பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துகிறது. காலரா, டைபாய்டு போன்ற நீர்வழி நோய்களின் பரவலைத் தடுக்கிறது. நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது.
என்ன செய்ய வேண்டும்? - 2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான கழிப்பறைகள் - தண்ணீர் என்கிற சுகாதார இலக்கை ஐ.நா. நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த இலக்கை அடைய உலகம் இன்னும் ஐந்து மடங்கு வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. “2015 முதல் 2020 வரை, இந்தியாவில் 6,00,000 கிராமங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் அற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன” என அரசு கூறுகிறது. கழிப்பறை குறித்து மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர் மத்தியில் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளிக் கழிப்பறைகளில் மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரத்துக்கான கூடுதல் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். கழிப்பறைகளைப் பராமரிப்பதில் தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். பயன்படுத்துவதற்கான தண்ணீர், தேவையான துப்புரவுச் சாதனங்கள், கிருமிநாசினிப் பொருள்கள் இருக்க வேண்டும். இவை கிடைக்க உள்ளாட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.
உள்ளாட்சிக் கூட்டங்களிலும் கிராமசபைக் கூட்டங்களிலும் கழிப்பறைத் தேவைகள் குறித்து மக்கள் பேச வேண்டும். பொதுக் கழிப்பறைகளில் புகார் பெட்டி வைக்கலாம். பத்து நாள்களுக்கு ஒருமுறை இந்தப் புகார்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்கலாம். கழிப்பறைகள் பராமரிப்பை எளிமைப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குறைந்த தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகளை ஏற்படுத்தலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தனியார் ஓட்டல்களின் கழிப்பறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதைக் காண்கிறோம். அதுவும் அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால், மாநகராட்சிகளின் கட்டணக் கழிப்பறை முகம் சுளிக்க வைப்பது ஏன்? தனி மனித ஆரோக்கியம், நாட்டின் பொருளாதார இழப்பைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, கழிப்பறைகள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியம்.
- தொடர்புக்கு: thirugeetha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT