Published : 22 Oct 2023 07:17 AM
Last Updated : 22 Oct 2023 07:17 AM
ஷேக் அகமது யாசினுக்கு யாசிர் அர்ஃபாத் மீது மதிப்பு, மரியாதையெல்லாம் நிறையவே உண்டு. அவரது தேச பக்தியின் மீதோ, பாலஸ்தீனர்களின் விடுதலைக்காக மட்டுமே தமது முழு வாழ்வையும் அவர் அர்ப்பணித்திருந்தது பற்றியோ அவருக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இஸ்ரேலிடம் அமைதிப் பேச்சு வார்த்தை எல்லாம் எடுபட வாய்ப்பே இல்லை என்பதில் யாசின் உறுதியாக இருந்தார். அது ஏன் அர்ஃபாத்துக்கு இறுதி வரை புரியவேயில்லை என்பது தான் அவருக்கு இருந்த ஒரே வினா.
தொண்ணூறுகளின் தொடக்கம் வரை (சரியாகச் சொல்வதென்றால் அர்ஃபாத் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குத் தயாராவதற்கு முன்னால் வரை) அவர்கள் இருவரும் பல முறை நேரடியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஓஸ்லோ உடன்படிக்கைக்குப் பிறகுதான் நேரடிச் சந்திப்புகள் இல்லாமல் போயின. யாசின், அர்ஃபாத்தின் அமைதி அரசியலை மிகத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். இஸ்ரேல் விஷயத்தில் அது ஒரு உருப்படாத வேலை என்பதே அவரது உறுதியான கருத்தாக இருந்தது.
இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கிய இண்டிஃபாதாவில் இஸ்ரேலிய ராணுவம் பேயாட்டம் ஆடத் தொடங்கி,கொத்துக் கொத்தாகப் பாலஸ்தீனர்கள் மடிய ஆரம்பித்த போது முதல் ஒருவருடம் ஹமாஸ் பெரிதாக எவ்வகையிலும் எதிர்வினை ஆற்றவில்லை. சிறிய அளவில் காஸா பகுதியில் அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டினார்கள் என்றாலும் ஹமாஸின் வழக்கமான வெளிப்பாடு அதுவல்ல.
இதற்குக் காரணம் உண்டு. இண்டிஃபாதா தொடங்கி, பாலஸ்தீனர் தரப்பில் வழக்கத்துக்கு விரோதமான,மிகத் தீவிர மிதவாதம் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் நடத்தியதெல்லாம் வெறும் ஊர்வலம். கல் வீச்சு சம்பவங்கள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்து வந்தன. ஆனால் பதிலுக்கு இஸ்ரேல் செய்தது என்னவென்று முன்னர் பார்த்தோம் அல்லவா? அது எப்படியும் ஹமாஸை சீண்டும், அவர்கள் வெறி கொண்டு தாக்கத் தொடங்குவார்கள் என்று யாசிர் அர்ஃபாத் நினைத்தார்.
இஸ்ரேல் தரப்புத் தாக்குதல் அநியாயமானது என்பதிலோ, அது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதிலோ அவருக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தச் சமயத்தில் பாலஸ்தீனர் தரப்பிலும் வன்முறையைக் கைக்கொண்டால் பழி மொத்தமும் அவர்கள் மீது போடப்பட்டு விடும் என்கிற கவலை அவருக்கு.
ஆனால் ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது. அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் யாசினை அவர் வீட்டுக்கே போய் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடந்த சந்திப்பு அது. இப்ராஹிம் நபி இறைவனின் ஆணைக்கிணங்க தமது மகனை பலி கொடுக்க முடிவு செய்ததை நினைவுகூரும் ஹஜ் பெருநாள் (Eid Al Adha) சமயம் என்பதால் அதனை ஒட்டி, யாசினுக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் சென்றார் என்று மீடியாவுக்குச் சொல்லி விட்டு, தமது அமைதி முயற்சிகளின் அடிப்படைகளையும் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் விளைவுகளையும் குறித்துச் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தார்.
அர்ஃபாத் பேசிய எந்த ஒரு விஷயத்துடனும் யாசினுக்கு உடன்பாடு கிடையாது. இருக்கவும் முடியாது என்பது அர்ஃபாத்துக்கும் தெரியும். ஆயினும் மரியாதை நிமித்தமாவது ஹமாஸ் சிலகாலத்துக்கு அமைதி காக்கும் என்று நினைத்தார். அவர் நினைத்தது சரி. இண்டிஃபாதா தொடங்கிய முதல் வருடம் சுமார் எழுநூறு பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட போதும் ஹமாஸ் மிகவும் பொறுமையாகவே இருந்தது. ஆனால் உங்கள் வழி தவறு, அமைதிப் பேச்சு எதுவும் எடுபடாது என்று அர்ஃபாத்தை அவர்கள் எச்சரிக்காமல் இல்லை. அதை அநேகமாகத் தினமுமே செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் 2001-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமாகத் தொடங்கியது. பி.எல்.ஓ.வின் உறுப்பு இயக்கங்கள் அனைத்தும் அர்ஃபாத்துக்குக் கட்டுப்பட்டு, கையைக் கட்டிக் கொண்டிருக்க, பாலஸ்தீனர்களுக்காக ஹமாஸ் களமிறங்கியே தீர வேண்டும் என்று காஸா மக்கள் பகிரங்கமாகவே குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இந்தக் கட்டத்தில்தான் மேற்குக் கரை மக்களும் ஹமாஸை ஆதரிக்க முடிவு செய்தார்கள்.
அர்ஃபாத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. அவர் பேசிக் கொண்டிருந்த அமைதி, இஸ்ரேலுக்குப் புரியாதது இயல்பானது. ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ள விரும்பாதவர்கள். ஆனால், பாலஸ்தீனர்களும் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டால் சிக்கல் மிகவும் பெரிதாகிவிடும். என்ன செய்வதென்று யோசித்தார்.
யோசிக்கவே வேண்டாம். ‘‘பாலஸ்தீன் அத்தாரிடி’’ கைது செய்து உள்ளேவைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; எங்களுக்காக அவர்களாவது போராடட்டும் என்று மக்கள் ஒரே குரலில் சொன்னார்கள். ஹமாஸ் பயன்படுத்திய ‘லெபனீஸ் மாடல்’ நெருக்கடி உத்திகளுள் இதுவும் ஒன்று. தங்களது செயல்பாட்டின் முக்கியத்துவத்தைத் தாங்களே பேசாமல், மக்கள் மூலமாக அர்ஃபாத்துக்கு உணர்த்தியது.
அன்றைக்கு பாலஸ்தீன் அத்தாரிடியின் சிறைச்சாலைகளில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இருந்தார்கள். பொதுஅமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டித்தான் அவர்களைப் பாலஸ்தீன அரசு கைது செய்திருந்தது. ஆனால் சொல்லப்படாத காரணம் வேறு என்று ஒரு தரப்பு சொல்லும்.
ஹமாஸின் பல முக்கியத் தலைவர்களைக் குறி வைத்து இஸ்ரேல் உளவுத் துறை அப்போது தேடிக் கொண்டிருந்தது. அவர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அர்ஃபாத் அவர்களைப் பாதுகாப்பதன் பொருட்டுக் கைது செய்து வைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். இந்த இரண்டில் எது உண்மை என்று சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் பல ஹமாஸ் தலைவர்களும் முதல் நிலைப் போராளிகள் பலரும் பாலஸ்தீன் அத்தாரிடியின் சிறைச்சாலையில் இருந்தனர் என்பது உண்மை.
இப்போது அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து வெளியே விட்டே தீரவேண்டிய நெருக்கடிக்கு அர்ஃபாத் ஆளானார். இரண்டாவது இண்டிஃபாதா வேறு முகம் கொள்ளத் தொடங்கியது இதன் பிறகுதான்.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 11 | மாற்று வழியை கண்டுபிடித்த ஹிஸ்புல்லா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT