Published : 14 Oct 2023 06:49 AM
Last Updated : 14 Oct 2023 06:49 AM
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
உலகில் மிக நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளைப் பட்டியலிட்டால், எந்தச் சிக்கலும் இன்றி இஸ்ரேல் - பாலஸ்தீன் முதலிடத்தில் வரும். யூதர்கள், முஸ்லிம்கள், அர்ஃபாத், பிஎல்ஓ, ஃபத்தா, ஹமாஸ், அரபு லீக், ஐ,நா., அமெரிக்கா, அமைதி ஒப்பந்தம், போர், போர் நிறுத்தம் என்று ஆயிரம் பேசினாலும் அனைத்துக்கும் அடிப்படை, ஜெருசலேம். குறிப்பாக கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள ஒரு மசூதி. அல் அக்ஸா என்று பெயர்.
ஜெருசலேத்தில் அல் அக்ஸா இருப்பதினும் பெரும் பிரச்சினை, அந்நகரம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பது. பிறகு அந்த, ‘உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை; உலகுக்கே பொது’ என்ற ஐ.நா.வின் திட்டமெல்லாம் எங்கே போனது என்று இனி கேட்டுப் பயனில்லை. 1967-ல் நடைபெற்ற ஒரு போரில் (ஆறு நாள் யுத்தம்) இஸ்ரேல், ஜெருசலேத்தை முழுதாக ஆக்கிரமித்துக்கொண்டது.
பிறகென்ன? கொதிப்புகள், கொந்தளிப்புகள், கொலைவெறித் தாண்டவங்கள். ஒரு மார்க்கமாக மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சியின் விளைவுகூட பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு சாதகமாக இல்லை. அல் அக்ஸா வளாகத்தை நிர்வாகம் செய்யும் உரிமை, ஜோர்டான் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புரிகிறதா? கிழக்கு ஜெருசலேம் என்பது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் ஜோர்டான் கட்டுப்பாட்டில்.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் மூலாதாரப் புள்ளி என்று ஒன்றைச் சுட்ட வேண்டுமென்றால் இந்த விவகாரத்தில் இருந்து தொடங்குவதே சரி.
அல் அக்ஸா என்பது மிகப்பெரிய பள்ளிவாசல். ஒரே சமயத்தில் ஐயாயிரம் பேர் அங்கே தொழுகை செய்யலாம். அதுவல்ல பெருமைக்குக் காரணம். முகம்மது நபியின் விண்ணேற்றம் இங்கிருந்தே நிகழ்ந்தது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதாவது, அங்கிருந்தே அவர் சொர்க்கம் சென்று கடவுளைக் கண்டு திரும்பினார் என்பது இதன் பொருள்.
முகம்மது நபியின் சரித்திரத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் மெக்கா, மெதினாவுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமாக இது இருக்கிறது. மேற்படி அல் அக்ஸா பள்ளிவாசலுக்குச் சற்றுத் தள்ளி (ஆனால் அதே வளாகம்) இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது. கலீஃபா உமர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் அது. இந்த இரண்டு பள்ளிவாசல்களும் இணைந்த வளாகத்துக்குப் பைத்துல் முகத்தஸ் என்று பெயர்.
இந்தக் குறிப்பிட்ட பைத்துல் முகத்தஸ் வளாகம் யூதர்களின் புராதன மத நம்பிக்கையுடனும் நேரடித் தொடர்புடையது.
அல் அக்ஸா கட்டப்பட்ட அதே இடத்தில்தான் பண்டைய சாலமன் தேவாலயம் இருந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை. பள்ளிவாசலின் ஒரு பக்கம் மட்டும் ஒரு நீண்ட மதில் சுவர் உண்டு. இடிந்தது போகமிச்சமுள்ள சுவர். யூதர்கள் அதனை wailing wall என்பார்கள். அழுகைச் சுவர். கவனம். சுவர் அழாது. இந்தச் சுவரில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதபடி பிரார்த்தனை செய்வது யூதர்களின் வழக்கம். அதனால் அந்தப் பெயர்.
மேற்படி அழுகைச் சுவரைத்தான் யூதர்கள் தம் தரப்பு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். பண்டைய சாலமன் தேவாலயம் இடிந்து, மிச்சமிருக்கும் சுற்றுச் சுவரின்ஒரு பகுதி அது என்று சொல்கிறார்கள்.
ஆக, அந்த இடம் யூதர்களுக்குச் சொந்தமானது. சாலமன் தேவாலயம் என்பது காலம் குறிப்பிட முடியாத காலத்துக்கு முற்பட்டது என்பதாலும், முகம்மது நபியின் விண்ணேற்றச் சம்பவம் கி.பி. 621-ம்ஆண்டு நடந்தது என்று இஸ்லாமியர்கள் சொல்வதாலும் யூதர்களுக்கே அந்த இடம் சொந்தம் என்பது அவர்கள் தரப்பு வாதம்.
இன்னொன்றும் உண்டு. முகம்மது நபியின் விண்ணேற்றம் அல் அக்ஸாவில் இருந்து நடைபெறவில்லை. அருகே உள்ள உமர் பள்ளிவாசலில் இருந்துதான் நடந்தது என்றும் யூதர்கள் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். உமர் பள்ளி வாசலை அவர்கள் Dome of the Rock என்று குறிப்பிடுவார்கள். தவிர அதை மட்டும்தான் அவர்கள் அல் அக்ஸா என்றும் சொல்வார்களே தவிர, உண்மையான அல் அக்ஸாவை மறந்தும் அந்தப் பெயரில் சுட்ட மாட்டார்கள்.
யூத மதம் என்பது காலத்தால் தொன்மையானது. இந்து மதத்தைப் போல. இஸ்லாம் என்பது மிகவும் பிற்காலத்தில் வந்ததுதான். எனவே மசூதிகளும் ஏழாம்நூற்றாண்டில் இருந்தே கட்டப்பட்டிருக்கும். நாலாயிரம் வருடங்களுக்கு முன்னர் அங்கே எங்கள் தேவாலயம் இருந்தது என்று யூதர்கள் சொன்னால், அதை இல்லை என்று யாரும் அறுதியிட்டு மறுக்க இயலாது. இருந்திருக்கலாம்.
ஆனால் அல் அக்ஸா கட்டப்பட்ட காலம் தொட்டு உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் புனித யாத்திரையாக ஜெருசலேமுக்கு வந்து தொழுகை நடத்திச் செல்கிறார்கள். முஸ்லிம்களின்இறைத் தூதருடன் நேரடித் தொடர்புடையஅம்மசூதியை இடித்துவிட்டு பண்டைய யூத தேவாலயத்தைத் திரும்பக் கட்டத்தான் வேண் டும் என்பதில் இருந்தே அரசியல் தொடங்குகிறது.
கடந்த 1967-ல் நடைபெற்ற ஆறு நாள் யுத்தம் முடிந்த மறுநாள் இஸ்ரேல் அரசு ஒரு காரியம் செய்தது. ஒரு நாள். ஒரே நாள். இனி யாருமே, எக்காலத்திலும் அப்பள்ளிவாசல் பக்கம் வர முடியாதபடி ஏதாவது செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? நெடுநாள் யோசித்துத்தான் அம்முடிவை எடுத்திருப்பார்கள். ஆனால் யுத்தம் முடிந்த மறுநாளே அதைச் செயல்படுத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 3 | அண்டை நாடுகளின் நம்பிக்கை துரோகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT