Last Updated : 11 Oct, 2023 08:01 AM

12  

Published : 11 Oct 2023 08:01 AM
Last Updated : 11 Oct 2023 08:01 AM

கணை ஏவு காலம் 1 - ஹமாஸுக்குள் ஒரு புதிய மனிதர்!

ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகமான பாலஸ்தீனத்தின் காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம், ஏவுகணை குண்டுகளை வீசி வருகிறது. இதில் காசா நகரின் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. படம்: பிடிஐ

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

ஆம். போர் என்றுதான் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. கிளர்ச்சி, கலவரம், தாக்குதல், பதில் தாக்குதல், தற்காப்பு அது இதுவென்று எதுவும் கிடையாது. நேரடியாகப் போர். ஆரம்பித்தது ஹமாஸ்தான் என்றாலும் இஸ்ரேலின் பதிலடி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை உக்கிரம் தாங்கி வருகிறது. காசா என்றொரு நகரம் முன்னொரு காலத்தில் இருந்தது என்று பிற்கால சரித்திரப் பாடங்களில் எழுத வேண்டி வந்துவிடுமோ என்று பாலஸ்தீனர்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை கைமீறிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பித்தது ஹமாஸ்தான். ஐயாயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் அனுப்பிப் பிள்ளையார் சுழி போட்டார்கள். எடுத்த எடுப்பில் 200 பேர் பலி. 2 நாளில் எழுநூறு பேர் என்றார்கள். இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியதும் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்ற பேதமெல்லாம் இல்லாமல் போய்விட்டது. எங்கும் மரணம். எல்லா புறமும் ஓலக் குரல். விண்ணளாவிய கட்டடங்கள் நொறுங்கி விழுகின்றன. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. வீடுகள் தரைமட்டமாகின்றன. மக்கள் நாலாபுறமும் அலறிக்கொண்டு ஓடுகிறார்கள். இங்கே ஓடுவது முஸ்லிம்கள். அங்கே ஓடுவது யூதர்கள். மற்றபடி அச்சம் ஒன்றுதான். அவலம் ஒன்றுதான்.

பாலஸ்தீனத்து அரேபியர்களுக்கோ, இஸ்ரேலிய யூதர்களுக்கோ இது புதிதல்ல. வாழ்நாளில் அவர்கள் காணாத யுத்தத்தை உலகின் வேறெந்தப் பகுதி மக்களும் கண்டிருக்க முடியாது. ஒரு நாளா, ஓராண்டா, சில பத்தாண்டுகளா? இது நூற்றாண்டு கால யுத்தம். இம்முறை தொடங்கி வைத்திருப்பது ஹமாஸ் என்பது மட்டும்தான் ஒரே மாறுதல். ஹமாஸ் என்பதால்தான் அவ்வளவு ஏவுகணைகள். அவ்வளவு ஏவுகணைகளால்தான் அவ்வளவு சேதாரம். அவ்வளவு சேதாரத்தால்தான் அந்தளவுக்கு ஆக்ரோஷமான பதிலடி.

பிக்பாஸ் ஆரம்பித்ததும் ஆளுக்கொரு ஆர்மி தொடங்குவது போல, போர் தொடங்கிய மறுநாளே இந்தியா, நான் இஸ்ரேலின் பக்கம் என்று அறிவித்தது. அமெரிக்கா, கேட்கவே வேண்டாம். ஹமாஸைத் தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிடும் அனைத்து தேசங்களும் இஸ்ரேலுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. ஹமாஸ் ஒரு போராளி இயக்கம் என்று கருதுகிற தேசங்கள் `மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே' என்று பாடிக்கொண்டிருக்கின்றன. பகிரங்கமாக சிரியாவும் மறைமுகமாக ஈரானும் இன்றைக்கு ஹமாஸின் பக்கம் நிற்கின்றன. இந்த எதிர்ப்பு, ஆதரவுத் தரப்புகள் இனி பலவாறாக மாறவும் கூடும். நவீன கால அரசியல் என்பது நாணயங்களால் நெய்யப்பட்டு, நியாயங்களால் அலங்கரிக்கப்படுவது. எல்லாம் தெரிந்ததுதான். எங்கும் உள்ளதுதான். உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சொல்லத்தான் உருப்படிகள் தேறுவதில்லை.

இருக்கட்டும். நாம் இம்முறை ஹமாஸிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. பாலஸ்தீனத்தின் இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் குழுக்களுக்கும் ஹமாஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாசர் அராஃபத் உயிருடன் இருந்தவரை அவர்களுக்கு அராஃபத்தான் எல்லாம். அவர் ஆயுதம் எடுக்கச் சொன்னால் எடுப்பார்கள். அவர் ஓஸ்லோவுக்குச் சென்று இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டால், ஆதரித்துக் கைதட்டுவார்கள்.

ஷேக் அகமது யாசின்

ஹமாஸ் அப்படியல்ல. அது, தொடக்கம் முதலே யாசர் அராஃபத்தின் அமைதி முயற்சிகளை எதிர்த்த இயக்கம். தொடக்கம் என்றால் இணையத்தில் காணக் கிடைக்கும் 1987 டிசம்பர் 10 என்கிற தேதியில் இருந்தல்ல. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே ஹமாஸ் இயங்க ஆரம்பித்துவிட்டது. பேர் சொல்லாமல், அடையாளம் காட்டிக்கொள்ளாமல், படு பயங்கர படிப்பாளிகள் சிலர் ஒன்றுகூடி அதனைக் கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் நோக்கமாக இருக்கவில்லை. துப்பாக்கிகள், கையெறி குண்டுகளைக்கூட அவர்கள் கண்டதில்லை. மக்களிடம் நல்லவிதமாகப் பேசி, இஸ்ரேலுக்கு எதிராக அவர்களை ஒன்று திரட்டி, உலகின் கவனத்தைத் தம் பக்கம் ஈர்த்து, அதன் மூலம் என்னவாவது நல்லது நடக்க வைக்க முடியுமா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கவனியுங்கள். அமைதியாகப் போராடத்தான் நினைத்தார்களே தவிர, அமைதி உடன்படிக்கைக் கெல்லாம் அவர்கள் தயாராக இல்லை. யாருடன் யார் உடன்படிக்கை செய்வது? பாலஸ்தீனம் என்பது அவர்கள் நிலம். காலம் கணக்கிட முடியாத காலம் தொடங்கி அவர்கள் அங்கே வாழ்ந்து வருபவர்கள். யூதர்கள் வந்தேறிகள். அவர்களைத் துரத்தி அடித்து விட்டுத்தான் மறு காரியம்.

ஆயுதமில்லாத இந்தக் கோபமும் தீவிரமும் அன்று பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கதறுகிறாயா? கதறு என்று இஸ்ரேலே அலட்சியமாகத்தான் இருந்தது. அவர்கள் யாசர் அராஃபத்தை மட்டும் சமாளித்தால் போதும் என்று நினைத்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் ஹமாஸுக் குள் ஒரு புதிய மனிதர் வந்து சேர்ந்தார். இயக்கத்தை ஆரம்பித்தவர்கள் பெரியபடிப்பாளிகள் என்று பார்த்தோம் அல்லவா? இவர் அவர்களையெல்லாம் விடப் பெரிய படிப்பாளி. அவர்களாவது மக்கள் மத்தியில் பேசும்போது ஆக்ரோஷம் கொப்பளிக்கச் சொற்பொழிவாற்றுவார்கள். இவர் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு சொற்கள் பேசினால் அதிகம். அவர்களுக்கு மக்கள் பணிக்குப் பிறகுதான் மற்றதெல்லாம். இவருக்கு கணப் பொழுதும் தவறாமல் ஐந்து வேளை தொழுதாக வேண்டும். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம். அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டார்கள். இவர் மூன்று நாளுக்கு ஒரு முறை சாப்பிட்டாலே அதிகம். அவர்களுக்கு எல்லோரும் ஓதும் அளவுக்கே குர் ஆன் தெரியும். இவர் சொல் விடாமல் நினைவிலிருந்தே முழுதும் ஓதக் கூடியவர். தவிர, சிறுவர்களைக் கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்து, சொல்லிக் கொடுக்கவும் செய்வார்.

மத போதகரா என்றால் கிடையாது. பெரிய இயற்பியல் வல்லுநர். கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த அனைத்துப் பாடங்களையும் அழகாகச் சொல்லித் தருவார். பத்து காசு வாங்க மாட்டார். புரொபசரா என்றால் கிடையாது. குழந்தைகளுடன் சேர்ந்து தோட்டம் போட்டுக் காய்கறி பயிரிட்டு அக்கம்பக்கத்தாருக்குக் கொடுத்து சந்தோஷப்படுவார்.

குறிப்பாக இவர் இன்னார் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒரு நபர் இயக்கத்துக்குள் வந்தபோது முதலில் அவர்கள் திகைத்துப் போனார்கள். சிறு பிள்ளைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு கொட்டம் அடிக்கும் ஒருமனிதனால் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக என்ன செய்ய முடியும்?

அவர் புன்னகை செய்தார். பிறகு சொன்னார். ‘ஒரு துளி வெளிச்சமும் இல்லாத முழு இருளிலும் என்னால் குறிதவறாமல் இலக்கை நோக்கிச் சுட முடியும்.’

அவர் பெயர் ஷேக் அகமது யாசின்.மேலே கண்ட 1987 நாள் கணக்கெல்லாம் அவர் ஹமாஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து உருவப்பட்ட நாள், மாதம், வருடம்தான்.

(தொடரும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x