Published : 04 Oct 2023 11:43 AM
Last Updated : 04 Oct 2023 11:43 AM
"பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் மாற்றங்களை எதிர்க்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான ஒரு பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம்" என்கிறார் அரசியலாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது.
பொது சிவில் சட்டம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிரமங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் தான் என்பது ஜனநாயகப்பூர்வமானது, அறிவுப்பூர்வமானது, விஞ்ஞானப்பூர்வமானது, பகுத்தறிவு ரீதியிலானது. எனினும், இதற்கான ஒப்புதலும், இதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் இன்னமும் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றன. இது, வெகுவாக ஜனநாயகப் பண்பை தீர்க்கவியலாத வன்முறையாக மாற்றுகிறது. மேலதிகமாக இப்பிரச்சினை சிக்கலாகிக் கொண்டுதான் போகிறது.
கணவரால் விவாகரத்து அளிக்கப்பட்ட ஷா பானு என்பவர், ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்தது அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தலைமையிலான அமர்வு. அந்த அமர்வில், ரங்கநாத மிஸ்ரா, டி.ஏ, தேசாய், ஓ. சின்னப்ப ரெட்டி, இ.எஸ்.வெங்கட்ராமைய்யா ஆகிய நீதிபதிகள் இருந்தனர். இவர்கள்தான், ஷா பானுவுக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அதோடு, மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். 1985ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு அமலுக்கு வராமல் தடுத்தவர் அப்போது பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி. 1986, மே மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தீர்ப்பை அமல்படுத்த முடியாதவாறு தடுத்தார். வாக்கு வங்கி, தேர்தல், போபர்ஸ் குற்றசாட்டு ஆகியவற்றை மனதில் கொண்டு அவர் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினார். ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அவரது அமைச்சரவையில் இருந்து விலகியவர் அவரது நெருங்கிய நண்பரான ஆரிப் முகம்மது கான். அவர்தான் தற்போது கேரள ஆளுநராக இருக்கிறார்.
1985ம் ஆண்டு உச்சநீதிமன்றம், மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறியதை பலரும் ஆதரித்தார்கள். ஷியா முஸ்லிம் சட்ட ஆணையம் ஆதரித்தது, சட்ட வல்லுநர் ராம்ஜெத் மலானி, வாஜ்பாய் ஆகியோர் ஆதரித்தார்கள். சிபிஎம் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரித்தது. ஏன் நாடாளுமன்றத்தில் திமுக இதை ஆதரித்து போது, முஸ்லிம் லீக் தலைவர் பனத்வாலா திமுக எப்படி ஆதரிக்கலாம் என கேட்டதுண்டு என வைகோ மதிமுக நிகழ்வுகளில் பேசியதை நானே கேட்டதுண்டு. அப்துல் கலாமும் பொது சிவில் சட்டத்தை விரும்பினார்.
பொது சிவில் சட்டம் என்பது ராஜா ராம் மோகன் ராயின் கனவு. பொது சிவில் சட்டத்தை அம்பேத்கர் ஆதரித்தார். பொது சிவில் சட்டம் குறித்து இந்திய சட்ட ஆணையம் பலமுறை விவாதித்திருக்கிறது. பொது சிவில் சட்டம் ஏன் வேண்டும் என்பது குறித்து நாம் தொடர்ந்து ஆலோசிக்க வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இந்தியா மதச்சார்பற்ற நாடு என ஒரு பதத்தை சேர்த்தார். அவ்வாறு சேர்த்தது தவறு. நமது நாட்டில் பல்வேறு மதங்கள் உள்ள நிலையில் நாடு எவ்வாறு மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்? மதச்சார்பின்மை என்பதற்குப் பதிலாக மத நல்லிணக்கம் என்ற பதத்தை சேர்த்திருக்க வேண்டும்.
சமச்சீர் சமுதாயம் அமைய வேண்டுமானால், திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடைபெற வேண்டும், மசூதிகளில் ஐந்து வேளை பாங் ஒசையோடு தொழுகைகள் நடைபெற வேண்டும், தேவாலயங்களில் மணி ஓசையோடு ஜெபங்கள் நடைபெற வேண்டும், குருத்வாராக்களில் கிரந்தங்கள் படிக்கப்பட வேண்டும், அதோடு, இறை மறுப்பாளர்கள் சதுக்க கூட்டங்கள் மூலம் கடவுள் இல்லை என பேசுவதற்கு இடம் இருக்க வேண்டும். இதுதான் உண்மையான மத நல்லிணக்கம். இத்தகைய சூழலில்தான் நமது சமுதாயம் அமைதியானதாக இருக்கும். போலி மதச்சார்பின்மை பேசுவது கூடாது. ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் எதிர்ப்பதும்; தேர்தல் ஆதாயத்துக்காக வேறு சில மதங்களை ஆதரிப்பதும் கூடாது. மத நல்லிணக்கம் இருந்தால்தான் சகோதரத்துவம் இருக்கும். மதச்சார்பின்மையால் சகோதரத்துவம் வராது. மகாத்மா காந்தி பாடிய ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் ! சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ து ப்யாரே சீதாராம் ! ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் ! பாடல் போல் நமது நாட்டில் மத நல்லிணக்கம் இருக்க வேண்டும். எல்லா மதங்களையும் போற்றக்கூடிய மனோபாவம் வளர வேண்டும்.
எல்லா மதங்களும், ஆலயங்களும், வழிபாடுகளும் உள்ள நிலையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொன்னால் அதனை எப்படிப் புரிந்து கொள்வது? முதல் கோணலே முற்றும் கோணல். சிறுபான்மை பெரும்பான்மை என்பதெல்லாம் மத அடிப்படையில் அதை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் வரையறுக்கப்படுகிறது. ஆனால் மனிதர்களை பொறுத்தவரையில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது தான் ஜனநாயகத்தின் உட்சபட்ச வந்தடைதலாக இருக்க முடியும். அதை விடுத்து விட்டு எங்கள் நாட்டில் இப்படித்தான் தண்டனை தருவோம்; அப்படித்தான் தருவோம் என்பதும், சிறைக் கூடங்களில் வைத்து சித்திரவதை செய்வது, மின்சாரம் பாய்ச்சி கொல்வது, தலையை வெட்டுவது, கல் எறிந்து கொல்வது, தேச துரோகம் என்கிற பெயரில் தூக்கிலிடுவது - இவை எல்லாம் எப்படி ஒரு ஜனநாயக மனிதப்பண்பாகும்.
பொதுவாக சட்டம் என்பது மக்களிடம் குழப்பங்களை விளைவிக்கக்கூடியதாகத்தான் இன்றளவிலும் நீடிக்கிறது. சட்டத்தை மனிதர்கள் தங்கள் சுயலாபத்திற்காக, அரசியலுக்காக பண்படாத மக்கள் தொகை மீது பிரயோகப்படுத்தும் போது அதுவே முதல் குற்றமாக மாறுகிறது. இந்த இடத்தில் தான் பொது சிவில் சட்டம் வெகு மக்களுக்கான வரையறையை வகுத்து தருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகளாவிய ஒரு பொது சிவில் சட்டம் பற்றி ஐநா எந்த அளவிற்கு யோசித்து வருகின்றது என்பது குறித்து அறிவு ஜீவிகளும் அரசியல் வல்லுநர்களும் பொருளாதார நிபுணர்களும் கூட்டாக சிந்திக்க வேண்டியது அவசியம். உலகில் அரசியல் சாசனம் என்ற கருத்தாக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது, பிரிட்டனில் எழுதப்பட்ட மகாசாசனம் என்ற ஆவணம்தான். அரசியல் அமைப்பு ரீதியாக சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் ஆட்சியே அமல்படுத்தப்படும் என கூறிய அந்த ஆவணத்திற்கு ஒப்புதல் கொடுத்தவர் ஜான் அரசர். எனினும், நமது நாட்டில் இருப்பது போல எழுதப்பட்ட அரசியல் சாசனம் பிரிட்டனில் கிடையாது. இஸ்ரேல், நீயூசிலாந்து நாடுகளிலும் கிடையாது. மரபுகள், வடிக்கைகள்தான் அரசியல் சட்டம். இந்திய அரசியல் சாசனம் இதுவரை 125 முறை திருத்தப்பட்டு, அவற்றில் 105 திருத்தங்கள் ஏற்கப்பட்டு சட்டமாக நமது சாசனத்தில் சேர்கப்பட்டுள்ளன.
பொது சிவில் சட்டத்தை அதிகமாக எதிர்ப்பவர்கள் அடிப்படை வாதிகளே. மாற்றங்களை மறுப்பவர்களும், தங்கள் இருப்பிற்கு ஆபத்து என்று நினைப்பவர்களும் ஒரு வர்க்கமாக ஒரு கும்பலாக இணைந்து இதை எதிர்க்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான ஒரு பொது சிவில் சட்டம் என்பது மிக மிக முக்கியம். எல்லா சாதியத்தையும் கூட்டாக வைத்துக்கொண்டு, எல்லா மதங்களையும் கூட்டாக வைத்துக் கொண்டு, ஓட்டு வங்கியின் மீது அரசை கட்டுவது என்பது பொது சிவில் சட்டத்திற்கு மிகவும் எதிரானது. அது மிகவும் பிற்போக்கானது. கையாலாகாத சமரசத்திற்கு ஆட்பட்ட நடுத்தர கருத்தியல்தானே ஒழிய, அது அறம் சார்ந்த மனித சீர்திருத்தமாகாது. மதத்திற்கு ஒரு சட்டம் என இருக்கும்போது சட்டத்தின் மூலம் எப்படி நீதியை கையாள முடியும்? கடந்த 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் நவீன வளர்ச்சிப்போக்குகள் இதை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை, அடையாளங்களை பொது சிவில் சட்டம் பாது காக்கும்.
இன்றைய பின் நவீனத்துவ காலப் பொது சிவில் சட்டம் இத்தகைய அநீதிகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வுகளை வைத்திருக்கிறது என்பது என் எண்ணம். யாரையும், எந்த அமைப்பையும புண்படுத்த சொல்ல வில்லை. இதுவே எதார்த்தம். இருத்தல் நிமித்தம், வளர்ச்சி என்ற வகையில் மற்ற நாடுகள் போல பொது சிவில் சட்டம் இந்திய திரு நாட்டிற்கும் தேவை. பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகள், உறவுகள், நிறம், வடிவம், சுவை, அளவு தழுவி நிற்கும் "பண்புத்தொகை" கொண்ட விசால இந்திய நாட்டில் அனைவரும் சமம் என்று போற்றுபவர்களாக, வேற்றுமையற்ற சகோதரத்துவத்தை பேனக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். உலகமயமாக்கல் காரணமாக உலகமே இன்று ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. நாமும் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என்கிறோம். உலக நாடுகளில் எல்லாம் பொது சிவில் சட்டம்தான் இருக்கிறது. இஸ்லாமிய அரபு நாடுகளில் மட்டும்தான் அவர்கள் திருக்குரானின் அடிப்படையில் சட்டம் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஒன்று என்ற சூழல் ஏற்பட்டு வரும் நிலையில், பொது சிவில் சட்டம் அனைவருக்கும் நன்மை தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT