Published : 13 Sep 2023 06:16 AM
Last Updated : 13 Sep 2023 06:16 AM
தமிழ்நாட்டின் கல்வித் தளத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை இன்று நிலவுகிறது. அடிப்படை எழுத்தறிவு மட்டுமே பெற்று, அதையும் பெருமளவு மறந்து, நடைமுறை எழுத்தறிவே பெறாத ஒரு பெரும் மக்கள்திரள் தமிழ்நாட்டில் உள்ளது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புற உழைக்கும் மக்களிடையிலும் இவர்கள் அதிகம்; பெரும் பகுதியினர் பெண்கள்.
குழந்தைப் பருவத்தில் ஓரிரண்டு வகுப்புகள் மட்டுமே பள்ளிக்குச் சென்று, பின் அவ்வப்போது நடக்கும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் சிறிது காலம் பயின்றவர்கள். லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் இந்தப் பெண்கள், நம் முதல் இலக்காக வேண்டும்.
இவர்கள் கற்றல் திறன் மட்டுமல்ல; தங்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க - சாதிய சக்திகளைக் கேள்வி கேட்கும் திறன், சிந்திக்கும் திறன் அனைத்தும் பெற வேண்டும். அத்தகைய கல்வி அவர்களுக்கென வடிவமைக்கப்பட வேண்டும். கல்வியின் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பரிமாணம் இது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் மாற்றுக் கல்வி இயக்கமாக, புத்துயிரும், புது நம்பிக்கையும் அளித்த வலிமைமிக்க அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக இது வடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுதும் பரவ வேண்டும்.
கற்போரின் ஆர்வம்: இத்தகைய பெண்கள் இயக்கத்துக்குக் களம் காத்திருக்கிறது என்பதற்கான பல அறிகுறிகள் இன்றைக்குத் தென்படுகின்றன. நான் இணைந்திருக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில், அத்தகைய அனுபவங்கள் நாள்தோறும் கிடைக்கின்றன. அந்த இயக்கத்தின் ஒரு திட்டமாக, ‘ஊர் கூடும் மையம்’ என்ற ஓர் அமைப்பைச் சில பகுதிகளில் உருவாக்கியிருக்கிறோம்.
எங்கள் இயக்கத்தின் சில ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசின் ‘இல்லம் தேடிக் கல்வி’யின் தன்னார்வலர்களும் இணைந்து இதை நடத்துகிறார்கள். சில கிராமங்களில் வாரம்தோறும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் பெண்கள் வந்து குவிகின்றனர். இளம்பெண்களில் இருந்து, வயது முதிர்ந்தவர் வரை ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.
கூட்டங்களில் விநியோகிக்கப்படும் சிறிய, எளிய புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர். வாசிக்கவே இயலாதவரும் புத்தகங்களைக் கையிலெடுத்துப் புரட்டிப் பார்த்து, படங்களைப் பார்த்து மகிழ்கின்றனர்; உரையாடுகின்றனர். உடனே வீடு திரும்ப மனமில்லாமல் திரும்பிச்செல்கின்றனர்.
இதேபோல், ‘வாசிப்பு இயக்கம்’ என்ற ஒன்று, தமிழ்நாடு அரசின் திட்டமாக, பள்ளி மாணவருக்கு என்று நடைபெற்றுவருகிறது. அதை ஒட்டி, எங்கள் இயக்கத்தில் பள்ளிக்கு வெளியிலும் நடத்த முயற்சிக்கிறோம். அங்கும் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கின்றனர். இவை எல்லாம் புதிய நம்பிக்கை அளிக்கின்றன. அவை அளித்த ஒளியில் இந்தக் கருத்துருவை வைக்கிறேன்.
திட்ட வடிவம்: தமிழ்நாடு அரசு ஒவ்வொரு கிராமக் குடியிருப்பிலும், நகர வார்டிலும் பெண்கள் வாசிப்பு மையம் அமைக்க வேண்டும். அதை நடத்தும் பொறுப்பு உள்ளாட்சியிடம், உள்ளாட்சியின் பெண் உறுப்பினர்களிடம் அளிக்கப்பட வேண்டும். நடத்துபவர்கள் அனைவரும் பெண்களாக இருக்க வேண்டும். ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ இரண்டு லட்சம் பெண்களைக் கண்டறிந்து, ஒரு பிரம்மாண்ட சக்தியைத் தமிழ்நாட்டுக்குக் கொடையாக அளித்திருக்கிறது.
இதன் சிறப்பு, அவர்கள் அனைவரும் அந்தந்தக் குடியிருப்புகளில் வாழ்பவர்கள். இந்தத் தன்னார்வலர்களே இம்மையங்களை நடத்துவார்கள். இவர்களுடன் உள்ளூர் பெண்கள், ஓரளவேனும் கல்வி கற்றவர்கள், பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வர். முக்கியப் பொறுப்பை ஏற்கும் தன்னார்வலருக்கு சிறு தொகை மதிப்பூதியமாகத் தர வேண்டும். இது உள்ளாட்சியின் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.
மையம் நடப்பதற்கு ஒரு சிறு இடம் ஒதுக்க வேண்டும். அது நகர்ப்புறங்களில் சமுதாயக் கூடங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம். கிராமப்புறங்களில் உள்ளாட்சிகள் ஓரிடத்தை ஒதுக்க வேண்டும். நூலகங்கள் கிராமங்களில் இருந்தால், அவற்றையே மையங்களாக மாற்றலாம். அநேகமாக நூலகங்கள் பூட்டித்தான் கிடக்கின்றன; நூலகர் இல்லை. இ-சேவை மையம் அனைத்துக் கிராம, நகர்ப்புறங்களிலும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம் அல்லது உள்ளூராட்சிகள் ஒரு சிறு கட்டிடம் கட்டிக்கொள்ளலாம்.
புதிய உலகம் உருவாக... மையங்களில் புத்தகங்களுக்காக ஒன்றிரண்டு அலமாரிகள் வைக்கப்பட வேண்டும். புதிய கற்போருக்கு ஏற்ற எளிய புத்தகங்கள் அவற்றில் வைக்கப்பட வேண்டும். உள்ளூர் நூலகங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் தகுந்த புத்தகங்கள் மையத்துக்கு மாற்றப்பட வேண்டும். அதேபோல், அருகில் இருக்கும் பள்ளி நூலகங்களில், தொடுவார் அற்று, தூசு படிந்து கிடக்கும் புத்தகங்களும் புதுமனை புகவேண்டும். ஒன்றிரண்டு செய்தித்தாள்கள் வாங்கிவைக்கப்பட வேண்டும்.
அத்துடன், இன்று தமிழ்நாடு அரசின் ‘வாசிப்பு இயக்க’த்தில் 1-12 வகுப்புக்கான 53 அருமையான புத்தகங்கள் எழுதப்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதே போன்று அனைத்துக் கிராம / நகர மையங்களுக்கும் அப்புத்தகங்களை அரசு விநியோகிக்கலாம். அது அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால், இவை எல்லாம் போதாது. தொடக்கத் துக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம். ஆரம்பக் கல்வி கற்றிராத – புதிதாகக் கற்கத் தொடங்கியிருக்கும் பெண்களுக்காகப் புதிய புத்தகங்கள் ஏராளமாக எழுதப்பட வேண்டும். வாசிப்புப் புரட்சிபோல, படைப்புப் புரட்சியும் எழ வேண்டும். வாசிக்கத் தொடங்கும் பெண்களிலிருந்தே படைப்பாளிகள் தோன்றலாம். அவர்களால் எழுத இயலாமல் இருக்கலாம். ஆனால், கதை சொல்லும் திறமையும் ஆர்வமும் இருக்கும்.
இதுவும் அறிவொளி இயக்கம் கண்ட அனுபவம். மையங்களில் வாசிக்கக் கூடுகின்ற பெண்கள் சொல்லும் கதைகளை எழுதும் பணியை, ஊரின் கல்வி கற்ற பெண்கள் ஏற்கலாம். பாட்டிகள் கதை சொல்ல, பேத்திகள் எழுத, தலைமுறை இடைவெளிகளைத் தகர்த்த புதிய உலகம் பிறக்கலாம்.
மையம் வாசிப்புக்காக மட்டுமல்ல. ஊர்ப் பெண்கள் கூடுவதற்கான ஒரு பொது இடம் இது ஒன்றுதான். டீக்கடையில் கூடி அரட்டை அடிக்கும் சுகம், நம் பெண்களுக்கு ஏது? அது ஆண்களுக்கே உரிய இடம். சாமானியப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றால், இது போன்ற ஒரு பொது இடம் தேவை.
ஆண்களுக்கும் ஓரிடம்: இது ஏதோ ஆண் வாடை படக்கூடாத அல்லி ராஜ்யம் அல்ல. ஆதிக்க மனோபாவத்தைத் துறந்துவிட்டு ஆண்களும் வரலாம். மையத்தில் சிறந்த பணி செய்யலாம். குறிப்பாக, பணிநிறைவு பெற்ற பலர் ஊரில் சோம்பிக் கிடக்கின்றனர். அறுபது வயதில் பணிநிறைவு பெற்று அடுத்த இருபது ஆண்டுகளேனும் வாழும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. பணிநிறைவு பெற்ற பெண்களாவது பேரக் குழந்தைகளின் பொறுப்பு, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு நேரம் கழிப்பார்கள். ஆண்கள் இந்த மையங்களில் பெண்களுக்கு வாசிக்கக் கற்றுத் தரலாம். அடுத்த இருபது ஆண்டுகள் அர்த்தமுள்ளவையாகும். பணிநிறைவு பெற்றவர்களுக்குப் புது வாழ்வு கிட்டும்.
இன்று தமிழ்நாடு அரசு பெண்கள் உரிமையும், திறமையும் பெறும் திட்டங்களை நிறைவேற்றிவருகிறது. பெண்கள் உரிமைத் தொகை பெறும் திட்டத்தின் தொடர்ச்சியாக, பெண் கல்வி மையத்தைத் தொடங்க வேண்டும். பெண்கள் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் அதே நாளில், சில இடங்களில் பெண் கல்வி மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.
- தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
To Read in English: Let us launch women education centres to usher in a new world
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT