Published : 17 Aug 2023 06:20 AM
Last Updated : 17 Aug 2023 06:20 AM

திரை வன்முறை தீவிரமடையும் பேராபத்து

ஆகஸ்ட் 10 அன்று வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் வணிகரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. நெல்சன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வன்முறை அளவுகடந்ததாகவும் அப்பட்டமாகத் திரையில் காண்பிக்கப்படுவதாகவும் இருப்பது இந்தப் படத்தையும் இதற்குக் கிடைத்துவரும் வரவேற்பையும் மிகுந்த பிரச்சினைக்குரியதாக மாற்றுகிறது.

ரத்தம் தெறிக்கும் காட்சிகள்: படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலரான முத்துவேல் பாண்டியன் (ரஜினி), வில்லனின் அடியாள்களில் ஒருவரின் தலையைத் துண்டிக்கிறார். தலை துண்டிக்கப்படுவதும் துண்டிக்கப்பட்ட தலை கீழே விழுவதும் திரையில் காட்டப்படுகின்றன.

இன்னொரு காட்சியில் ஜெயிலராக வரும் முத்துவேல் பாண்டியன், தன்னை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய ஒரு கைதியின் காதை அறுக்கிறார். அறுபட்ட காது கீழே விழுவதும் காண்பிக்கப்படுகிறது. படத்தில் உள்ள எண்ணற்ற வன்முறைக் காட்சிகளில் உச்சக்கட்ட உதாரணங்கள் மட்டுமே இங்கே கூறப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில், குறிப்பாக முன்னணி நட்சத்திரக் கதாநாயகர்களின் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளும் பல வடிவங்களில் வன்முறையை அப்பட்டமாகச் சித்தரிப்பதும் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘விக்ரம்’, விஜய் நடித்திருந்த ‘பீஸ்ட்’, இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ ஆகிய திரைப்படங்களில் அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் போக்கில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது ‘ஜெயிலர்’.

குழந்தைகளும் வன்முறையும்: பொதுவாகக் குழந்தைகளைக் கவரும் நடிகர்களே உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பிடிப்பார்கள். இதற்கு ரஜினியைவிட மிகச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. 1980களில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘ராஜா சின்ன ரோஜா’ எனக் குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். தலைமுறைகள் தாண்டி இன்றுவரை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராகத் திகழ்ந்துவருகிறார்.

‘ஜெயிலர்’ படத்துக்குப் பலர் கைக்குழந்தைகளையும் பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளையும் அழைத்துவருகிறார்கள். அதேபோல, குழந்தைகளைக் கவர்ந்த நடிகர்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் இருக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தையும் பலர் குழந்தைகளுடன் சென்று பார்த்தனர்.

கமல், அஜித் என முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்தையும் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் திரையரங்குக்குச் சென்று பார்க்கின்றனர். இந்நிலையில், குழந்தைகளும் பார்க்கத் தகுந்தவையாக விளம்பரப்படுத்தப்படும் திரைப்படங்களில் இவ்வளவு வன்முறை இருப்பதும் இவ்வளவு வன்முறை இருக்கும் திரைப்படங்களுக்கு அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதும் மிகத் தீவிரமான சமூக அவலம்.

நட்சத்திரங்களின் பொறுப்பு: இன்றைய சூழலில், அனைத்து முன்னணி நடிகர்களுமே தங்களது வெற்றியை உறுதிசெய்ய வன்முறையை நாடத் தொடங்கிவிட்டனர். அதுவும் 70 வயதைக் கடந்துவிட்ட ரஜினியும் 70ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் கமலும் சரிவிலிருந்து மீண்டு அவர்களின் நட்சத்திர அந்தஸ்தை உறுதிசெய்துகொள்ள உதவிய ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ திரைப்படங்கள் வன்முறை நிறைந்தவையாக இருப்பது சாதாரணமாகக் கடந்துவிடக்கூடிய விஷயம் அல்ல.

சமூகப் பொறுப்புமிக்க கலைஞராக அறியப்படும் கமலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக அறியப்படும் ரஜினியும் தங்கள் திரைப்படங்களில் இவ்வளவு அப்பட்டமான வன்முறைக் காட்சிகளுக்கு இடமளிப்பது அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் மக்களிடையே அவர்கள் பெற்றிருக்கும் நன்மதிப்புக்கும் அழகு சேர்க்கிறதா என்பது குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். பெரும் ரசிகர் படையைப் பெற்றிருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கும் இது பொருந்தும்.

இயக்குநர்களின் தாக்கம்: நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்களே முதல்நிலை நட்சத்திரங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அதிகமாகப் பெறுகிறார்கள். இவர்கள் வன்முறையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த எந்தக் கவலையும் அற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வெற்றியைப் பார்த்து பிற இயக்குநர்களும் இவர்களின் பாதையில் பயணித்து தமது திரைப்படங்களில் வன்முறை உள்ளடக்கத்தை அதிகரிக்கிறார்கள்.

‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் வெற்றி, மதுரை வட்டாரத்தை ரத்தவெறி பிடித்த பூமியாகக் காட்டும் பல வன்முறைத் திரைப்படங்களுக்கு வித்திட்டதுபோல் இப்போது இவர்கள் இருவரின் படங்கள் தாதாக்கள், ரவுடிகள் தொடர்பான வன்முறையை மையப்படுத்திய திரைப்படங்களுக்கு வித்திட்டிருக்கின்றன.

தவறும் தணிக்கை வாரியம்: முதல் நிலை நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மிகப் பெரிய பொருள்செலவில் தயாரிக்கப்படுகின்றன. படத்துக்கான செலவின் பெரும்பகுதி இந்த நடிகர்களின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. பெரிய முதலீட்டைத் திரும்பப்பெற அனைத்து வயதினரையும் திரையரங்குக்கு வரவழைப்பது கட்டாயமாகிவிடுகிறது. எனவே, இந்தப் படங்களுக்கு அனைத்து வயதினருக்கும் பார்க்கத் தகுந்தவை என்பதற்கான தணிக்கைச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட திரைப்படக் குழுவினர் எப்படியாவது பெற்றுவிடுகிறார்கள்.

கெட்ட வார்த்தைகள், அரசியல்ரீதியான சர்ச்சைக்குரிய வசனங்கள் ஆகியவற்றை நீக்குவதில் கறாராகச் செயல்படும் தணிக்கை வாரியம், வன்முறைக் காட்சிகளுக்கு அத்தகைய கறார்த்தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை. பெரியவர்களின் துணையுடன் குழந்தைகள் பார்க்கலாம் என்பதற்கான ‘U/A’ சான்றிதழைப் பெற்ற ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும்போது, வன்முறைக் காட்சிகளைத் தடுப்பதில் தணிக்கைத் துறைக்கு முன்பு இருந்த குறைந்தபட்ச அக்கறைகூட இப்போது இல்லை என்று தோன்றுகிறது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்தவை என்பதற்கான ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இவ்வளவு அப்பட்டமான வன்முறை இருந்ததில்லை. விளிம்புநிலையைச் சேர்ந்த ஓர் இளைஞன் அரசியல் கட்சி ஒன்றில் செல்வாக்கு மிக்க தாதாவாக உயரும் கதைக்களத்தைக் கொண்ட ‘புதுப்பேட்டை’ (2006) திரைப்படத்தில்கூட இவ்வளவு அப்பட்டமான வன்முறை இல்லை.

வன்முறையின் இயல்பாக்கம்: அளவு கடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பழகுவது, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குள்ளும் வன்முறை எதிர்ப்பு மனநிலையை நீர்த்துப்போக வைக்கிறது. அதுவும் நல்லவர்களாகச் சித்தரிக்கப்படும் நாயகர்கள் சர்வசாதாரணமாக மனிதர்களைக் கொல்வது வன்முறையை இயல்பாக்குகிறது; ஒரு மனிதர் உயிரிழப்பதால் ஏற்படக்கூடிய பதற்றத்தையும் பரிவையும் நீர்த்துப்போக வைக்கிறது.

முன்பெல்லாம் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்குக் கண்களை மூடிக்கொண்ட ரசிகர்கள் இப்போது தலை வெட்டப்பட்டு கீழே விழும் காட்சிக்குக் கைதட்டிச் சிரிக்கிறார்கள். பெரும்பாலான திரைப்பட விமர்சகர்களும் ‘ஜெயிலர்’ படத்தில் தலை துண்டிக்கப்படும் காட்சியையோ ‘விக்ரம்’ படத்தில் தலையற்ற உடல் காட்டப்பட்டதையோ பிரச்சினைக்குரியதாக அடையாளப்படுத்தவில்லை. வன்முறையை நாம் எவ்வளவு சாதாரணமாகக் கருதத் தொடங்கிவிட்டோம் என்பதற்கான சான்றுகள் இவை.

வன்முறை சார்ந்த கதைகளை முற்றிலும் தவிர்க்க முடியாதுதான். ஆனால், வன்முறையைப் பூடகமாகவும் வரம்புமீறாமலும் வெளிப்படுத்த பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் படைப்பாளிகள் கற்றுக்கொள்ள வேண்டும். தணிக்கைத் துறையும் விமர்சகர்களும் வன்முறையைத் தடுப்பதிலும் கண்டிப்பதிலும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கதைக்குப் பொருத்தமில்லாமலும் அதிர்ச்சி மதிப்பைக் கூட்டுவதற்காகவும் திரைப்படங்களில் திணிக்கப்படும் வன்முறையை வயதுவந்த பார்வையாளர்களும் எதிர்க்க வேண்டும்.

அத்தகைய படங்களுக்கு குழந்தைகளை எந்தக் காரணத்துக்காகவும் அழைத்துச் செல்லக் கூடாது. குழந்தைகள் ஆபாசக் காட்சிகளைப் பார்த்துவிடக் கூடாது என்பதில் செலுத்தப்படும் அக்கறை, வன்முறைக் காட்சிகள் அவர்களின் பார்வைக்குச் செல்வதிலிருந்து தடுப்பதிலும் வெளிப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் தம் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கான தொடக்கமாக அமையும்.

- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

To Read in English:
Violence on screen: an intensifying danger

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x