Published : 03 Aug 2023 06:19 AM
Last Updated : 03 Aug 2023 06:19 AM
சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் 16 ஆண்டு களுக்குப் பிறகு, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடங்குகிறது. சர்வதேசத் தரத்தில் 1995இல் அமைக்கப்பட்ட மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், முதல் 12 ஆண்டுகளில் ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பைத் தொடர்கள் (1996, 2005), ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை (2007) போன்ற பெரிய தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதன் பிறகு, இந்த மைதானத்தில் சர்வதேச ஹாக்கி தொடர் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.
நம்பிக்கையூட்டும் நகர்வுகள்: 2022இல் இதே காலகட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஆடவர் சாம்பியன் ஷிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உலக சர்ஃபிங் லீக் (அலைச்சறுக்கு) நடைபெற உள்ளது. இதுபோல இளம் வீரர்களின் திறமைகளைக் கண்டறிய உதவும் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளதும் சரியான நகர்வு.
இதன்மூலம் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து கவனம் பெற முடியும். இத்துடன் முடித்துவிடாமல், வருங்காலத்திலும் இதுபோன்ற சர்வதேசத் தொடர்கள் தொடர்ச்சியாக நடைபெறவும் வேண்டும். இது சென்னையில் மட்டு மல்லாமல், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெற வேண்டும். அதற்கேற்ப விளையாட்டுத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாப் பகுதிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
ஒடிஷாவில் ஹாக்கி: இந்தியாவில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கிரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் அளவு கடந்த முக்கியத்துவத்தால் ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டுகள் பின்தங்கியிருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், விளையாட்டுத் துறையை வளர்க்கும் நோக்கில் சர்வதேச அளவிலான வசதிகளை அரசுகள் செய்து தருவதன் மூலம் விளையாட்டுகளைத் தழைக்கவைக்க முடியும். அதற்கு ஹாக்கி விளையாட்டில் ஒடிஷா காட்டும் அக்கறை ஓர் உதாரணம்.
இன்று இந்திய ஹாக்கி ஆடவர், மகளிர் அணிகள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான மொத்தச் செலவையும் (ஸ்பான்சர்ஷிப்) ஒடிஷா அரசு ஏற்றுக்கொள்கிறது. ஒடிஷாவில் மூன்று சர்வதேச ஹாக்கி மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வ தேசத் தரத்தில் ஹாக்கி வீரர் / வீராங்கனைகளை உருவாக்குவதிலும் மிகுந்த கவனத்தை அம்மாநில அரசு செலுத்திவருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இரண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர்கள் உள்பட ஆறு சர்வதேசத் தொடர்கள் ஒடிஷாவில் நடை பெற்றுள்ளன. சராசரியாக 3 - 4 ஒடிஷா வீரர்கள் இந்திய ஹாக்கி அணியிலும் இடம்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய ஹாக்கிக்கு அச்சாணியாக ஒடிஷா அரசு விளங்கிவருகிறது.
ஹரியாணாவில் மல்யுத்தம்: ஒடிஷா ஹாக்கியில் ஈடுபாடு காட்டிவருவதைப் போல் மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஹரியாணா பெரும் கவனம் செலுத்திவருகிறது. இந்தியா இதுவரை வென்ற ஏழு மல்யுத்த ஒலிம்பிக் பதக்கங்களில் ஐந்து பதக்கங்கள் ஹரியாணாவிலிருந்து வந்தவை.
ஹரியாணா கிராமப்புறப் பகுதிகளின் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாக மல்யுத்தம் எப்போதும் இருந்துவருகிறது. ரொக்கப் பணம் அல்லது நெய்ப் பானையைப் பரிசாக வெல்ல கிராமப்புறங்களில் இளைஞர்கள் மல்யுத்தம் செய்வது அங்கே வாடிக்கை. இப்படி விளையாடத் தொடங்கியவர்களைக் கண்டறிந்து பயிற்சியளிப்பதன் மூலம், இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீரர்கள் அங்கு வளர்த்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒலிம்பிக் உள்பட எந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றவர்களையும், ஓய்வுக்குப் பிறகு ஹரியாணா அரசு கைவிட்டுவிடுவதில்லை; இளம் தலைமுறையினருக்குப் பயிற்சி அளிக்க அவர்களை அழைத்துவந்துவிடுகிறது. பல்வேறு காலகட்டங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டவர்கள் இன்று ஹரியாணாவில் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வில்வித்தை, கோ-கோ, குத்துச்சண்டை, கபடி, மல்யுத்தம், ஜூடோ எனப் பல விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.
ஹரியாணாவில் 34 பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மையங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 46 பயிற்சி மையங்கள், கிராமங்களில் 232 மினி மைதானங்கள் என விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளுக்குப் பஞ்சமில்லை. இதன் காரணமாக ஹரியாணாவின் சோனிபட், ரோஹ்தக் ஆகிய பகுதிகள் மல்யுத்த விளையாட்டின் சொர்க்கபுரியாகவும் பிவானி நகரம் குத்துச்சண்டையின் மையமாகவும் திகழ்கின்றன.
இந்தியாவின் மக்கள்தொகையில் ஹரியாணாவின் பங்கு 2.2%தான். ஆனால், ஒலிம்பிக் பங்கேற்பில் 24.4% என்பது சாதாரண விஷயமல்ல!
வடகிழக்கில் கால்பந்து: பின்தங்கிய மாநிலங்களாகக் கருதப்படும் வடகிழக்கு மாநிலங்களும் விளையாட்டுத் துறையில் ஜொலிக்கின்றன. கலாச்சாரமும் விளையாட்டும் இந்த மாநிலங்களின் அடையாளங்கள். குறிப்பாக, இந்தியக் கால்பந்தின் ஆன்மா வடகிழக்கில்தான் உள்ளது. குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளிலும் இங்கு தீவிர கவனம் செலுத்தப் படுகிறது. சர்வதேச அளவில் சிறந்த வீரர்களாகப் பைசுங் பூட்டியா, சுனில் சேத்ரி ஆகியோரை சிக்கிம் உருவாக்கியது.
கால்பந்து வீராங்கனை ஒயினம் பெம்பெம் தேவி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரை மணிப்பூரும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரை திரிபுராவும் உருவாக்கின. மணிப்பூர், மேகாலயம், சிக்கிம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் புதிய கால்பந்து சக்தியாக மாறிவருகின்றன. இவை வளர்ந்த மாநிலங்கள் அல்ல. ஆனாலும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையங்கள் உதவியுடன் விளையாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விளையாட்டுகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
விளையாட்டில் ஒருவர் சுயம்புவாக உருவாகிவிட முடியாது. ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிந்து, சர்வதேசத் தரத்தில் முறையான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். ஒடிஷா, ஹரியாணா, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் அப்படித்தான் வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட விளையாட்டில் ஒருவர் திறமையானவர் என்பது இந்த மாநிலங்களில் தெரியவந்தால், அவரை மாநில அரசே தத்தெடுத்து சிறந்த வீரர்/வீராங்கனையாக உருவாக்குகிறது. விளையாட்டில் ஜொலித்தால் வெகுமதி, பரிசு, பாதுகாப்பான அரசு வேலை என அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றுகிறார்கள்.
தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்? - டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தமிழ்நாட்டிலிருந்து 12 பேர் பங்கேற்றனர். இதில் தடகளத்தில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 5 பேர் பின்தங்கிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருடைய கதையும் வலி மிகுந்தது. காலணி வாங்கக்கூட கஷ்டப்பட்டவர்களும் அவர்களில் இருந்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவியது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமே இங்கு எல்லாப் பணிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் குறிப்பிடத்தக்க விளையாட்டுக் கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், அவை பெரும்பாலும் சென்னையிலேயே குவிந்துகிடக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். விளையாட்டு வசதிகளைப் பரவலாக்கும்போதுதான் அனைத்துத் தரப்பினரும் விளையாட்டுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள்தான், ஒலிம்பிக் போன்ற உலக விளையாட்டுத் தொடர்களில் நாட்டைத் தலைநிமிர வைக்கிறார்கள். இனி, திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிய தமிழ்நாடும் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்ட நான்கு ஒலிம்பிக் மண்டலங்களை ஏற்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
‘தொகுதிக்கு ஒரு சிறிய விளையாட்டு அரங்கு’ என்னும் அறிவிப்புக்கும் விரைவில் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இவை திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவும். அதற்கு முன்பாக விளையாட்டுத் துறையில் முன்னணியில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு வெற்றிக் கதைகளைத் தமிழ்நாடு உள்வாங்கிக்கொள்வதும் அவசியம்.
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT