Last Updated : 25 Jul, 2023 06:19 AM

 

Published : 25 Jul 2023 06:19 AM
Last Updated : 25 Jul 2023 06:19 AM

கறுப்பு ஜூலை: ஈழ நெஞ்சங்களின் ஆறா வடு

ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்த்த 80களின் ஆரம்பத்தில், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்திவந்தன. 1983 ஜூலை 23 அன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில், இலங்கை ராணுவத்துக்கு எதிரான சமர் ஒன்று நடைபெற்றது. விடுதலைப் புலிகளைத் தாக்கும் நோக்கில் வந்த ராணுவ அணியொன்றை இடைமறித்துப் புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இந்தச் சமரில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம் அடைந்தார்.

தமிழர்கள் மீது தாக்குதல்: புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. ‘தமிழர் களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்’ என்று திட்டமிட்டுக் கதை பரப்பப்பட்டது. கொழும்புவில் இருந்த தமிழர்களைக் கொன்று அழிக்க வேண்டுமென இனவெறி பரப்பப்பட்டது.

சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களைத் தாக்கத் தொடங்கினர். தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்பட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு போடப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள், அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள்.

ஜூலை 23 அன்று தொடங்கிய வன்முறை, ஐந்து நாள்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை ராணுவமும் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்தது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில், புலிகள் என்ற பெயரில் தமிழ் மக்கள் 51 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரசால் நிகழ்த்தப்பட்டது: இலங்கைத் தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் நிர்வாணத்தாலும் நனைந்தது. கொழும்பு வீதிகளிலிருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது. தமிழர்களைப் பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள்.

மிக மிகக் கோரமான முறையில் மனித குலத்துக்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு, மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவாலோ ஒரு தரப்பாலோ இப்படிப் பரவலாகவும் நீண்ட நாள்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.

கறுப்பு ஜூலை, இலங்கையின் முதல் படுகொலை அல்ல. அதற்கு முன்னர் 1958இலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன; 70-களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடத்தவும் இல்லை.

1956இல் தனிச் சிங்களச் சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்கா கொண்டுவந்த வேளையில், அன்று நாடாளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்துசெல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள்.

இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறைச் செயல்பாடுகளாலும் உரிமை மறுப்புகளாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர். அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது.

தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் முன்னெ டுத்த வேளையில்தான், 1958இல் 300 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு, அறிவின் மீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்பட்டது.

ஆக, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களைப் படுகொலை செய்து அழிக்கவும் திசைதிருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடத்தப்பட்டது.

வெளிப்படையான வெறுப்பு: ஜூலைப் படுகொலை நடப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பு, லண்டன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை.

அவர்களின் வாழ்க்கை பற்றியோ, எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ எங்களுக்கு அக்கறை இல்லை. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்குச் சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார்.

இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனா. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தைக் கண்டும், வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார். கறுப்பு ஜூலைப் படுகொலையானது ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரசத் தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின.

குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால், அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணரலாம். ஏற்கெனவே, இனவழிப்புகள் நடந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு 1983 ஜூலை இனப்படுகொலையை நடத்தியுள்ளார்கள். குறுகிய குழு வன்முறையாக இல்லாமல் சிங்கள மக்களின் பங்கேற்புடன் வன்முறையை நடத்த சிறில் மத்யூ போன்றவர்கள் நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளைக் கேட்கக் கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுத்தார்கள்.

கொழும்புவில் இருந்து ஈழ மக்கள் வடகிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தமிழ் மக்கள்கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். வடகிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்று தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த நிர்வாணங்களும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்ப்பந்தித்தன. கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது.

வன்முறையின் வடு: 40 ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச்செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல. இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகிவருகின்றன. ஆனால், சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்குத் தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர்.

தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி (கூட்டாட்சி) தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கேட்கும் சமயத்தில், சரத் வீரசேகர என்ற முன்னாள் கடற்படை அதிகாரி - இன்றைய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், ‘உறங்கும் தெற்கின் இளைஞர்களைத் தட்டி எழுப்பாதீர்கள்’ என்று சொல்கிறார். இலங்கையை இரண்டாக்கிய ஜூலைப் படுகொலை நடந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இப்படிப் பேசுகின்ற அரசியல்வாதி ஒருவரும் இருக்கிறார் என்பதே இலங்கையின் ஆபத்தும் கசப்பும்.

- தொடர்புக்கு: deebachelvan@gmail.com

To Read in English: Black July: Festering wounds of Eelam Tamils’ hearts

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x