Published : 19 Jul 2023 06:21 AM
Last Updated : 19 Jul 2023 06:21 AM
சமீபத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடத்தில் விவசாயி ஒருவர் மனு ஒன்றைக் கொடுத்தார். தனது விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும், ஆட்சியர் அலுவலகத்தில் உபரியாக உள்ள ஊழியர்களை விவசாய வேலைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார்.
நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் மீதான வெளிப்படையான விமர்சனம் அது. மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் அந்தச் செய்தியை வெளியிட்டன. மறுபுறம், நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்கள் ஓய்வெடுப்பது, ஓய்வு நேரத்தில் விளையாடுவது போன்ற காட்சிப் பதிவுகளும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
இவற்றின் மூலம் இத்திட்டத்துக்கு எதிரான கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, விவசாயம் அழிந்துபோவதற்கு நூறு நாள் வேலைத் திட்டம்தான் காரணம்; விவசாயத் தொழிலாளர்களை இத்திட்டம் சோம்பேறிகள் ஆக்கிவிட்டது என்றும் பேசப்படுகிறது. உண்மை நிலைதான் என்ன?
வேலை உத்தரவாதம்: கிராமங்களில் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலை வழங்கப்படும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005இல் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தில் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் பணி செய்கிறார்கள் (2022-23இல் பெண் தொழிலாளர்கள் 56%). தமிழ்நாட்டில் உள்ள மொத்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,31,48,575.
இதில் இத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ளவர்கள் மொத்தம் 91,42,246. இவர்களில் பட்டியல் சாதியினர் 38,46,788; பட்டியல் பழங்குடியினர் 2,33,923. கிராமப்புறங்களில் பாசனம், சாலை அமைத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட 29 விதமான பணிகள் செய்யப்பட்டுவந்தன. தற்போது, அரசின் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த வேலைத் திட்டத்தின் காரணமாக வேலை தேடி இடம்பெயர்தல் குறைந்திருக்கிறது.
கள நிலவரம்: ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்பது சட்டம். ஆனால், இது முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. 2021-22இல் 49 நாட்களும், 2022-23இல் 42 நாட்களும் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் ஆண்டுதோறும் குறைக்கப்பட்டுவருகிறது. 2021-22இல் ரூ.98,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23இல் அது ரூ.73,000 கோடி, 2023-24இல் ரூ.60,000 கோடி எனக் குறைந்துவருகிறது. இதனால் வேலை அட்டை வைத்துள்ள அனைவரும் வேலை பெற முடிவதில்லை.
இத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும் பணம் கிராமப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சிறு-குறு விவசாயக் குடும்பத்துப் பெண்களும் இவ்வேலையின் மூலம் வருமானம் பெறுகிறார்கள். கிராமப்புறக் கூலித் தொழிலாளர்கள் சுயசார்புடன் வாழ்வதற்கு உதவும் ஆக்கபூர்வமான திட்டம் இது.
வேலை என்பதை உரிமையாக்கி 100 நாள் கட்டாயம் அரசு வேலை தந்தாக வேண்டும். வேலை தரமுடியாதபட்சத்தில் வேலையின்மைக்கான நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். 75 ஆண்டு காலச் சுதந்திர இந்தியாவில், வேலை என்பதை உரிமையாக்கிய முதல் சட்டம் இதுதான். பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து கிராமப்புற மக்களை ஓரளவு விடுவித்திருப்பது இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
நியாயமற்ற வாதம்: இந்தப் பின்னணியில், விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததற்கு நூறு நாள் வேலைத் திட்டம்தான் காரணம் என முன்வைக்கப்படும் வாதம் சரியா? ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இத்திட்டத்தில் கடந்த ஆண்டு சராசரியாக 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளன.
அப்படி என்றால் ஒரு நபருக்கு 21 நாட்கள், 365 நாட்களில் 21 நாட்கள் போக மீதமுள்ள 344 நாட்கள் அவர்கள் எந்த வேலைக்குச் செல்கிறார்கள்? நிச்சயமாக விவசாயத்தில் கிடைக்கும் வேலையை மட்டும் நம்பி எந்த ஒரு விவசாயத் தொழிலாளியும் பிழைக்க முடியாது.
ஏனென்றால், விவசாயப் பணிகளில் ஆண்டுக்கு 50 நாட்கள் வேலை கிடைப்பதே அரிது. மற்ற வேலைகளைவிட விவசாயப் பணிகளில் கூலி குறைவு. தவிர, விவசாயம் வேகமாக இயந்திரமயமாகிவருகிறது. நெல் சாகுபடி, கரும்பு வெட்டுவது, மரம் வெட்டுவது எனப் பெரும்பாலானவற்றுக்கு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, விவசாயத் தொழிலாளர்களின் தேவை குறைந்துவருகிறது. நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் எனும் வாதம் நியாயமற்றது.
கட்டுமானப் பணி, சுமைப் பணி, கடைகளில் வேலைக்குச் செல்வது, வாகனம் ஓட்டுவது, வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வது, கல்குவாரிகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் எனக் கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்து கடினமான உடல் உழைப்பை அன்றாடம் அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
மேலும், இன்றைய இளைஞர்கள் நிலஉடைமையாளர்களிடம் போய் விவசாய வேலை செய்ய விரும்புவதில்லை. அவர்களிடம் உள்ள நிலப்பிரபுத்துவ மனநிலையை இன்றைய இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் வேறு வேலைகளைத் தேடிச் செல்கிறார்கள். முன்பைவிடக் கூடுதலாகவும் கடுமையாகவும் உழைக்கிறார்கள்.
எளிய இலக்குகள்: அதேவேளையில், நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களிடம் குறையே இல்லை என்பது நமது வாதமல்ல. வேலைக் கலாச்சாரச் சீரழிவு எல்லாத் துறைகளிலும் உள்ளது போலவே இவர்களிடமும் இருக்கிறது. இதே தொழிலாளர்கள் தனியாரிடத்தில் வேலைக்குச் செல்லும்போது ஓய்வின்றியும் கடுமையாகவும் உழைக்கத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் அங்கெல்லாம் அருகில் இருந்து வேலையை மேற்பார்வையிடுவதற்கு ஆட்கள் உண்டு. ஆனால், நூறு நாள் வேலை நடக்கும் இடத்தில் கேட்பாரும் இல்லை, மேய்ப்பாரும் இல்லை.
அரசுத் துறைகளில் மக்கள் மனநிறைவடையும் வகையில் செயல்படும் துறை என்று எதையாவது சொல்ல முடியுமா? அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தயங்குபவர்கள்கூட நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இத்திட்டத்தில் பெரும்பாலானோர் பெண்கள், அதிலும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர். எனவே எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; அவமானப்படுத்தும் விதத்தில் குறை சொல்லலாம். ஏனென்றால், இவர்கள் எளிய இலக்குகள். எதிர்க்கேள்வி கேட்க வழியில்லாதவர்கள்.
விவசாயம் லாபகரமாக இல்லாதது, இடுபொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் உத்தரவாதம் இல்லாதது, வேளாண் விளைபொருள்களுக்கு அரசு லாபகரமான விலை நிர்ணயிக்காதது, உரிய காலத்தில் கடன் கிடைக்காதது, வேளாண் விளைபொருள்களை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லாதது போன்றவைதான் விவசாயத்தில் ஏற்படும் சரிவுகளுக்கு முக்கியக் காரணம். அவற்றை எல்லாம் மறைத்துவிட்டு மொத்தப் பழியையும் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள்மீது போடுவது ஏற்கத்தக்கதல்ல.
விவசாயிகளும்-விவசாயத் தொழிலாளர்களும் விவசாயத்துக்கு இரண்டு கண்களைப் போன்றவர்கள். இருவரையும் எதிரெதிராக நிறுத்துவது இத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயல்பவர்களுக்கே உதவும். இத்திட்டத்தை மேலும் சிறப்பாக கிராமப்புற முன்னேற்றத்துக்கு எப்படிப் பயன்படுத்தலாம், என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்று ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கினால் ஊருக்கும் உழைக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லது.
தொடர்புக்கு: pstribal@gmail.com
To Read in English: Does 100-Day MNREGA work cause decline in agriculture?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT