Published : 03 Oct 2017 09:44 AM
Last Updated : 03 Oct 2017 09:44 AM
க
டற்கரையில் ஒருவர் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.
``நாலு அடி அடிச்சிருந்தாக் கூட மறந்து போயிருப்பேன். ஆனா, அவன் பேசின பேச்சை மறக்கவே முடியலை. ஒவ்வொரு சொல்லும் மனசைச் சுடுது’’ என்றார்.
அவர் சொல்வது உண்மை. இது, ஒருவரின் புலம்பல் இல்லை. பலரும் சுடுசொல்லை மறக்க முடியாதவர்களே. ஏதோ ஒரு தருணத்தில், யாரோ நம்மை நோக்கிச் சொல்லும் சுடுசொல் அப்படியே முனை முறிந்த முள்ளைப் போல மனதில் தங்கிவிடுகிறது. அந்தச் சொல்லை மனதில் இருந்து அப்புறப்படுத்த முடிவதே இல்லை. புரையோடிப் போய் என்றைக்கும் வலி தந்தபடியே இருக்கிறது.
மனிதர்கள் உடற்காயங்களை, வலியைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள். ஆனால், மனதைத் தாக்கும் சொற்களின் வலியை தாங்க முடியாதவர்கள். சொல் ஓர்ஆயுதம்! எவ்வளவு பெரிய மனிதரையும் ஒரு சொல் வீழ்த்திவிடும். கோபத்தில் சொன்ன வசைச் சொற்கள் காரணமாக தொடரும் தலைமுறைப் பகையை நான் அறிவேன்.
ஒரு வசைச் சொல்லை தாங்க முடியாமல் உடைந்து போய் அழும் மனிதர்களைக் காணும்போது, சொல்லின் இயல்பு அதிர்ச்சியளிக்கிறது. வசையோ, சுடுசொல்லோ கேட்டவுடன் ஏன் ரத்தம் சூடாகிறது? ஏன் கோபம் தலைக்கு ஏறுகிறது? கைகளும் முகமும் ஏன் இறுக்கமடைகின்றன? பலவீனமானவன் எனக் கருதப்படுபவன் கூட தன் கைவசம் பல நூறு சுடுசொற்களை வைத்திருக்கிறான். அவற்றால் தாக்குகிறான். குழந்தைகள், பெண்கள், வயசாளிகள் சுடுசொற்களைத் தாங்க முடியாமல் அதிகம் வேதனை கொள்கிறார்கள். நினைத்து நினைத்து அழுகிறார்கள்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சொல்லின் வலி பழகிப் போய்விடுகிறது. எத்தனையோ ஆயிரம் வசைகள். கோபப் பேச்சுகள். அவதூறு வீசும் சொற்கள் அவர்களை தாக்கியபோதும் அவர்கள் நிலை குலைவதில்லை. சொல் தாங் கும் மனதை பெற்றவர்களாகிவிடுகிறார்கள்.
சொற்களின் வெளிச்சம்
சில சமயம் கோபத்தில் வெளிப்பட்ட சுடுசொல் சிலரது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. புளோரிடாவில் வசித்து வந்த ஜாக் என்ற கடை ஊழியரை அவரது முதலாளி கோபத்தில் மிக மோசமாக திட்டிவிட்டார். ஜாக்கிற்கு அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வேலையை விட்டு நின்றுகொண்டார். ஆனாலும் மனதில் அந்த வலி மறையவே இல்லை. தான் ஓர் உதவாக்கரை. திறமையற்றவன். முட்டாள் என முதலாளி திட்டிய சொற்கள் மனதில் மோதிக் கொண்டே இருந்தன. அந்தச் சொற்கள் உண்மைதானோ என, தன் மீதே அவர் சந்தேகம் கொள்ளவும் தொடங்கினார். இதனால் அவர் புதிய வேலையைத் தேடிக் கொள்ள முடியாமல் முடங்கிக் கிடந்தார். திடீரென ஓர் இரவு சொற்கள் வெளிச்சத்தில் உருவம் போல அவருக்கு முன் தோன்றின. அந்தச் சொற்களை வெறித்து பார்த்துக் கொண்டேயிருந்தார். அவை தனக்காக உருவாக்கபட்ட சொற்களில்லை; அதே சொற்களைக் கொண்டு தானே பலரை திட்டியிருக்கிறோம். ஆனால், இன்று அந்தச் சொற்கள் நம்மீது பாயும்போது மனது உடையக் காரணம், நமது பலவீனம்தான். இந்த பல வீனத்தைக் கடந்து போயாக வேண்டும்.
அச்சொல் உண்மையில்லை என நிரூபணம் செய்தாக வேண்டும். அந்தச் சொல்லுக்கு மாற்றாக இன்னொரு சொல் தன்முன்னே தோன்ற வேண்டும் என உறுதி கொண்டார். உடனே, தனது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ளத் தொடங்கினார். உடலை வலுவாக்குவதே மனதை ஒருமுகப்படுத்துவதற்கான முதல் வழி என நினைத்தார்.
அதற்காக நடைப்பயிற்சி. நீச்சல், டென்னிஸ் என தீவிரமாக நேரத்தை செலவிட்டார். கூடவே, தன்னு டைய பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டார். ஒரே ஊரிலேயே பல ஆண்டுகள் தங்கிவிட்டோம் என நினைத்து வேறு மாநிலத்துக்கு இடம் மாறினார். புதிய வேலை கிடைத்தது. வாழ்க்கையில் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. அவரை பலரும் புகழத் தொடங்கினார்கள். திறமைசாலி என பாராட்டினார்கள்.
பின்பு ஒருநாள் அவர் தனது பழைய முதலாளியைத் தற்செயலாக ஒரு விடுதியில் சந்திக்க நேர்ந்தது. அப்போது ஜாக் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, தன்னை அவர் திட்டிப் பேசியதை நினைவுகூர்ந்தார். ஆனால் அந்த முதலாளிக்கு ஒரு சொல் கூட நினைவில் இல்லை. இவ்வளவு பெரிய திறமைசாலியா நம்மிடம் வேலைக்கு இருந்தார் என வியந்து ஜாக்கை பாராட்டினார். ஜாக்கின் மனதில் இப்போது திறமைசாலி, நல்லமனிதன் என்ற சொற்கள் வெளிச்சத்தில் உருவம் போல தோன்றி மறைந்தது. ஜாக் இந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டி ருக்கிறார்
ஜாக்கிற்கு நடந்தது போல நம்மில் பலரை எத்தனையோ முறை வசைச் சொற்களும், சுடுசொல்லும் தாக்கியிருக்கின்றன. அவற்றை மனதில் ஊறவைத்தபடியே இருக்கிறோமே அன்றி, அதில் இருந்து விடுபட்டு புதுவாழ்வு வாழ முயற்சிக்கவில்லை. சொற்களைக் கையாள நமக்குத் தெரியவேண்டும். சொற்களைக் கவனமாக வெளிப்படுத்த வேண்டும். ’இன்சொல் பேசுங்கள்’ என்பது, எங்கேயோ கேட்ட பழைய விஷயமாக தோன்றினாலும் அது எக்காலத்துக்குமான உண்மை!
கிளிக்கு சொந்தமில்லா மொழி
ஒரு காலத்தில் வணிகன் ஒருவன் ஒரு கிளியை வளர்த்து வந்தான். அந்தக் கிளி அவன் பேசும் எல்லா வசைச் சொற் களையும் தானும் பழகியிருந்தது. ஆகவே, கடைக்கு வரு பவர்களை அது தன் கொச்சைக் குரலில் திட்டிப் பேசியது. இதைக் கேட்டு வாடிக்கையாளர்கள் பலரும் கோபம் கொண்டார்கள். ஆனால், வணிகன் அதை ரசித்தான். தன்னை விடவும் தனது கிளி மிக மோசமாக திட்டுகிறது என சந்தோஷம் அடைந்தான்.
அந்தக் கிளிக்கு புதிது புதிதாக வசைச் சொற்களை கற்றுக் கொடுத்தபடியே இருந்தான் அந்த வணிகன். ஒரு நாள் அவனது கடைக்கு துறவி ஒருவர் வருகை தந்தார். வணிகன் அவரை வணங்கி ஆசி வாங்கிக் கொண்டிருக்கும்போது, அந்தக் கிளி துறவியைப் பார்த்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியது. அதைக் கேட்ட வணிகன் ’’கிளியே...வாயை மூடு!’’ என திட்டினான். அனால், கிளி இன்னும் மிக மோசமான வசைச் சொற்களைக் கொண்டு துறவியைத் திட்டியது.
இதைக் கண்ட துறவி ’’இந்தக் கிளி மிக அபாயகரமானது. இதைக் கொன்றுவிடு!’’ என்றார். ஆனால் அந்த வணிகனுக்கு அந்தக் கிளியைக் கொல்ல மனமில்லை. ஆகவே கூண்டை விட்டு வெளியே பறக்கவிட்டான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வணிகன் காசிக்குச் சென்றான். அங்கே அந்தக் கிளி ஒரு பண்டிதரின் முன்னால் அமர்ந்து வேதம் சொல்லிக் கொண்டிருந்தது. அது தனது கிளிதான் என்பதை அறிந்து, அதனருகே சந்தோஷத்துடன் சென்று ’’எப்படி இவ்வளவு இனிமையாக வேதம் ஓது கிறாய்?’’ எனக் கேட்டான் வணிகன்.
அதற்கு அந்தப் பண்டிதர் பதில் சொன்னார்: பழக்கம்தான் காரணம். யாரோ அதற்கு வசைச் சொற்களைப் பழக்கிக் கொடுத்திருந்தார்கள். நான் அதை மாற்றி வேதம் கற்றுத் தந்தேன். தவறு கிளியுடையது இல்லை. அதை வளர்க்கும் மனிதர்களுடையதே என்றார்.
வணிகனுக்கு அப்போதுதான் தனது தவறு புரிந்தது என முடிகிறது அந்த காஷ்மீரத்து கதை.
இந்தக் கதையில் வரும் கிளியைப் போலதான் நாமும் வசைச் சொற்களை நம்மை அறியாமலே கற்று வைத்திருக்கிறோம். எங்கே பிரயோகம் செய்கிறோம் என அறியாமல் பிரயோகிக்கவும் செய்கிறோம். சொல்லை அறிந்து சரியாக பயன்படுத்தினால் அதுவே நம் வாழ்வை மாற்றும் பெரும் சக்தியாகும் என்பதே நிஜம்!
- கதை பேசும்...
எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
இணைய வாசல்: காஷ்மீரத்து கதைகளை வாசிக்க -
http://koausa.org/folktales/index.html
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT