Published : 28 Oct 2017 11:28 AM
Last Updated : 28 Oct 2017 11:28 AM
நா
ன் எழுதுன முதல் குறுநாவலின் தலைப்பு, ‘ஊற்றில் மலர்ந்தது’. 1972-ல் தாமரை இதழில் அது வெளிவந்துச்சு. இன்னிக்கு இருக்குற மாதிரி பெரிய எழுச்சி வராத நேரத்துலயே தலித் பெண்களோட துயரத்தைப் பேசுபொருளா அது பேசும். என்னோட முதல் நாவல் ‘கரிசல்’, கரிசல் வட்டாரத்தில் வேலை செஞ்சப்ப எழுதுன நாவல். அதை ரசிச்சு, ரசிச்சு உருவாக்குனதால அது 1500 பக்கங்கள் ஆகிருச்சு. அதை என்.சி.பி.எச். பதிப்பகத்துல சுருக்கிக் கேட்டாங்க. பேராசிரியர் வானமாமலைதான் 400 பக்கங்களா சுருக்குனாரு. அந்த நாவல் 1976-ல் வெளியாச்சு.
என்னோட இரண்டாவது நாவல் ‘புதிய தரிசனங்கள்’தான் எனக்கு 1994-ல் சாகித்ய அகாடமி விருதை வாங்கிக் கொடுத்துச்சு. இந்திரா காந்தி இருபது அம்சத் திட்டத்தை அறிமுகப்படுத்துன காலத்துல, அதை நம்பிக் களம் இறங்குனோம். அதுல எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களோட தொகுப்புதான் கதைக் களம். இந்த நாவலை எழுதுறதுக்கு 14 வருசம் ஆச்சு. அதை ஏழு தடவை திருத்தி எழுதினேன். கிராமத்துல இருக்குற பலவிதமான மனித மனோபாவங்களையும் உள்வாங்கித்தான் அந்த நாவலை உருவாக்குனேன். அந்த நாவலுக்கு 4 பதிப்புகள் வெளியாச்சு. இன்னும் எனக்கான அடையாளமாகவும் அந்த நாவல் நிக்குது.
என்னோட மூணாவது நாவல் ‘மறுபக்கம்’. இது தெரிஞ்ச வரலாற்றுல இருக்குற தெரியாத பக்கங்களைப் பேசும். குமரி மாவட்டத்தில் நடந்த மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைச்சு எழுதுன இந்த நாவல் எனக்கு ரொம்பவும் புகழ் ஈட்டித் தந்துச்சு. தினத்தந்தியின் ஆதித்தனார் பரிசு உட்பட பல பரிசுகளும் அதுக்காகக் கிடைச்சுது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இந்த நாவலுக்குப் பாராட்டு விழா நடந்துனாங்க.
நான் படைத்த படைப்புகள்ல ‘உறவுகள்’ என்னும் சிறுகதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனித உறவுகளிலேயே ரொம்ப சிக்கலானது ஆண்-பெண் உறவுதான். அந்த உறவுல எப்போ உன்னதம்ன்னு சொல்றதுதான் அந்தச் சிறுகதையின் கதைக் களம். இந்தச் சிறுகதை, சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தை ரொம்பக் கவர்ந்துருக்கு, இதை ‘பூட்டாத பூட்டுக்கள்’ன்னு மகேந்திரனோட இயக்கத்துல திரைப்படமா எடுத்தாரு. ஆனால், அது திரைமொழியில் அதோட மைய உயிரை எங்கேயோ தவறவிட்டுருச்சு. நான் எழுதுன சிறுகதைகளில் நான் மிகவும் ரசிச்சதும் மனதை வாட்டுன சம்பவங்கள் நிறைஞ்சதும் ‘ஈரம்’ங்குற கதைதான்.
இரு மனசுகளின் ஈரம்
அது ஒரு உண்மை சம்பவம். ஒரு நாள் ராத்திரி 9 மணி இருக்கும். நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்ல நல்ல மழையில மாட்டிக்கிட்டேன். பஸ் ஸ்டாண்ட்ல ஓடியாடி திரிஞ்ச பாலியல் தொழிலாளி ஒருத்தி பிள்ளை பெத்த கதைதான் ஈரம். அந்தப் பெண், பிள்ளை பெத்து, அந்தக் குளிருல குழந்தையை அவளோட, உடல் சூடு மூலமா அணைச்சுகிட்டு இருந்தா. என் கையில் என் மனைவிக்குத் தலையணை, போர்வை வாங்கி வைச்சுருந்தேன். கையில் இருந்த தலையணையையும் போர்வையையும் அந்தப் பொண்ணுக்குக் கொடுத்துட்டேன். குளிரில் வாடியவளுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுக்க நினைச்சு சுற்றும் முற்றும் பார்த்தேன்.
காடாவிளக்கு வைச்ச டீக்கடை ஒன்னு இருந்துச்சு. கடைக்காரர்ட்ட அந்தப் பொண்ணுக்கு டீ கேட்டேன். கடைக்காரர் உடனே, “அவளுக்கும் உனக்கும் எத்தனை வருசம் தொடர்பு?”ன்னு கேட்டாரு. நானும், டீ தரணுமேன்னு பல வருசம் தொடர்புன்னு சொல்லிட்டுவந்தேன். அந்த குழந்தையோட தொப்புள் கொடியை அறுக்கறதுக்குக் கத்தியையும்கூட அந்தக் கடையில்தான் கேட்டு வாங்குனேன். அதையெல்லாம் மையமாக வைச்சே ‘ஈரம்’ எழுதுனேன். அது மழை இரவின் ஈரமா? இரு மனசுகளின் ஈரமா? என்னும் குரலில் ஒலிக்கும்.
கிருஷ்ணன் நம்பியிலிருந்து மலர்வதி வரை
நான் எழுத வந்த காலகட்டதுல எனக்குப் பிடிச்ச படைப்பாளர்கள் கிருஷ்ணன் நம்பியும் சுந்தர ராமசாமியும். கிருஷ்ணன் நம்பியோட சிறுகதைகள் அபூர்வமானவை. அதுல என்னை ரொம்ப பாதிச்சது அவரோட ‘காலை முதல்’ தொகுப்பு. இதே மாதிரி சுந்தர ராமசாமியின் ‘கோவில் காளையும் உழவு மாடும்’ சிறுகதை, கதை சொல்லும் உத்தியால் என்னை ரொம்ப கவர்ந்துச்சு.
என்னை கவர்ந்த படைப்பாளிகளில் தற்போதைய எழுத்துலகில் ஜெயமோகனுக்கும் இடம் உண்டு. நானும், ஜெயமோகனும் கருத்து நிலைப்பாட்டில் எதிரெதிர் துருவங்களில் நிற்பவர்கள். ஆனால், அவரது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவல் எடுத்துக்கிட்ட கள விசாலத்தினால் என்னைக் கவர்ந்துச்சு. தோப்பில் முகமது மீரானின் ‘கடலோர கிராமத்தின் கதை’ என்னை மிகவும் கவர்ந்துச்சு. ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகளும் நிறைய வாசிச்சுருக்கேன். மலர்வதி எழுதுன ‘தூப்புக்காரி’ நாவலின் பூவரசி கதாபாத்திரம் என்னை சில நாள்கள் தூங்க விடாமல் செஞ்சுச்சு.
இன்னும் என்னைக் கவர்ந்த பாத்திரங்களைத் தொகுத்துத்தான் என் அடுத்த படைப்பான, ‘என்னைச் செதுக்கியவர்கள்’ எழுதிட்டு இருக்கேன். இதுல சின்ன வயசுல எனக்குப் பாடம் எடுத்த தாணுமாலயப் பெருமாள் பிள்ளை ஆசிரியர்ல ஆரம்பிச்சு, என்னை உருவாக்குன, எனக்குள்ள பிரமிப்பை உருவாக்குனவங்களையெல்லாம் பத்தி எழுதிட்டு இருக்கேன்.
அதில் என் பெரியப்பா நீலப்பெருமாளும் அடக்கம். அவரு தான தர்மங்களில் எல்லா செல்வங்களையும் இழந்து, மனநிலை பிறழ்ந்து போயிட்டாரு, கடைசி நாளில் தன் துயரமான அரை மனநிலையிலும், என்னைக் கூப்பிட்டு ‘அப்பா சபாபதி, எழுதுப்பா’ன்னு என் கைகளுக்குக் காகிதத்தையும் பேனாவையும் தந்தாரு.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்நாவல்கள் சில போக்குகள்…சில பதிவுகள்’ன்னு மூணு மணி நேரம் பேசுனேன். அந்த பேச்சு, பேராசிரியர்களைக் கவர்ந்ததுச்சு. அதையும் புத்தகமாக்குகிறேன். அது அச்சுக்கு போயிருக்கு.
- பொன்னீலன், மூத்த எழுத்தாளர்,
‘புதிய தரிசனங்கள்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ponneelan1940@gmail.com
கேட்டு எழுதியவர்: என்.சுவாமிநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT