Published : 22 Oct 2017 12:26 PM
Last Updated : 22 Oct 2017 12:26 PM
ப
ள்ளி ஆசிரியர் கூடுகை ஒன்றுக் காக சமீபத்தில் தஞ்சாவூர் போயிருந்தபோது பெரிய கோயிலுக்குச் சென்றேன். அந்த ஆலயத்தை நன்கறிந்திருந்த ஒரு ஆசிரியர் எனக் குத் துணையாக வந்தார். கண்ணப்ப நாயனார் கதையைச் சொல்லும் சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்றபோது நேராக அங்கு கூட்டிச்சென்றார். முதல் கோபுரமான கேரளாந்தகன் வாயிலின் வெளிப்புறத்திலேயே வடக்குப் பகுதி யில் இந்த சிறிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
இச்சிற்பங்கள் மூலம் கண்ணப்பரின் வரலாறு காமிக்ஸ் கதை பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது. இம்மாதிரி நிகழ்வுகளைச் சித்தரிக்கும் குறுஞ் சிற்பங்கள் 9-ம், 10-ம் நூற்றாண்டு கோயில்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் வைகுந்தபெருமாள் கோயிலில் பல்லவ வரலாற்றுக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலில் பகீரதனின் தவம் பற்றிய தொன்மக் கதை புடைப்புச் சிற்பங்கள் மூலம் சொல்லப்படுகிறது.
முன்னொரு காலத்தில் இன்றைய நெல்லூருக்கு அருகே பொத்தப்பி நாடு என்ற இடத்தில் வாழ்ந்த வேடன் திண்ணன், ஒரு நாள் காட்டில் ஒரு லிங்கத்தைக் கண்டார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான அவருக்கு லிங்கத்தைக் கண்ணால் காண்பதே அரிது. ஆகவே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி உற்சாகத்துடன் வழிபட ஆரம்பித்தார். வறுத்த பன்றிக் கறியை, அதிலும் சரியாக வெந்திருக்கிறதா என்பதைச் சிறிது மென்று பார்த்து உறுதி செய்துகொண்ட பின் சிவனுக்குப் படைத்தார். தனது தலைமுடியில் சொருகிக் கொண்டுவந்த மலர்களை வைத்து வழிபட்டார். ஒரு கையில் இறைச்சியும் மற்றதில் வில்லும் இருந்ததால், நீரை வாயில் நிரப்பிக்கொண்டு லிங்கத்தைத் திருநீராட்டு செய்தார். எந்த ஆலயத்திலும் இவை மாசு பட்டவை என்று நிராகரிக்கப்பட்டிருக்கும். ஆனால், திண்ணனின் பக்தியைப் பாராட்டி சிவன் அவற்றை மனமார ஏற்றுக்கொண்டார் என்கிறது பெரியபுராணம்.
அத்துடன் நிற்கவில்லை இறைவன். திண்ணனின் மன உறுதியைச் சோதனை செய்ய முடிவுசெய்தார். ஒரு நாள் லிங்கத்தை வழிபடச் சென்ற திண்ணன், அதன் வலது கண்ணிலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டார். மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் செய்து பார்த்தார். ரத்த ஒழுக்கு நிற்கவில்லை. அம்பை எடுத்துத் தனது வலது கண்ணை தோண்டி எடுத்து, லிங்கத்தின் கண்ணில் பொருத்தினார். ரத்தம் ஒழுகுவது நின்றது. ஆனால், அடுத்த கண்ணிலிருந்து சொட்டத் தொடங்கியது ரத்தம். திண்ணன் தன் இடது கண்ணையும் தோண்டிக் கொடுக்கத் தயாரானார். அப்போது சிவன் இடைமறித்து, அவரது கண்ணைச் சீராக்கினார். வானோர் பூமாரி பொழிய திண்ணனுக்குத் தன்னருகே இடம் கொடுத்து, கண் கொடுத்ததால், கண்ணப்பர் என்ற பெயரையும் சூட்டினார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் இடம் பெற்றார்.
இந்தக் கதை நான்கு புடைப்புச் சிற்பங்களாகப் பெரிய கோயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திண்ணன் வில்லுடன் காட்டில் செல்வது, உடும்பு ஒன்றை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் கண்ணைத் தோண்ட முயல்கிறார். வேட்டை என்றாலே நாய்கள் வந்துவிடுமே. கீழே நான்கு வேட்டை நாய்கள் வரிசையாக இருக்கின்றன. இன்னொரு சிற்பம், கண்ணப்பன் மண்டியிட்டு அடுத்த கண்ணையும் தோண்டத் தயாராகும் தருணத்தைச் சித்தரிக்கிறது. லிங்கத்திலிருந்து ஒரு கை தோன்றித் தடுக்கிறது. இந்த சிற்பத்துக்குக் கீழும் நான்கு நாய்கள் உள்ளன. இந்தக் கதையை விவரிக் கும் பெரிய புராணம் கண்ணப்பரின் நாய்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
யானை, குதிரை போன்ற விலங்குகள் போலல்லாமல், நாய்கள் அரிதாகவே சிற்ப வடிவில் ஆலயங்களில் காட்டப்படுகின்றன. பைரவரின் நாயை நாம் அறிவோம். தஞ்சை ஆலயத்துக்குள் உள்ள பிரசித்தி பெற்ற சுவரோவியங்களில் ஒரு வெள்ளை நிற நாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு புடைப் புச் சிற்பங்களாய் இருக்கும் நாய்களும் அந்த ஓவிய நாய் போன்றே உடலமைப்பைக் கொண்டுள்ளன. வால் சுருண்டு, உயர்ந்து நிற்கிறது. கால்கள் நீளமாக இல்லை.
முகம் கூராக இல்லாமல் சதுரமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கலப்பில்லாத ஒரு நாயினம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வீரனொருவன் கயிற்றால் பிணைக்கப்பட்ட, கழுத்துப் பட்டை ஒன்றுடன் கூடிய நாயைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற குறுஞ்சிற்பம் உண்டு. அந்த நாயின் உருவமைப்பும் கண்ணப்பரின் நாய்களைப் போலவே உள்ளது.
சோழர் கால ஆலயங்களில் கண்ணப்ப நாயனாரின் கற்சிற்பங்களைக் காணலாம். ஆனால், திருவெண்காட்டிலுள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கண்ணப்பர் ஒரு அரிய செப்புத் திருமேனியாகப் படைக்கப்பட்டிருந்தார். சிற்ப உருவ நியதி நூல்கள் வேட்டுவர் கள் எப்படி சித்தரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏதும் கூறவில்லையாதலால், கண்ணப்பரின் இந்த சிலை அன்று இருந்த வேடர்களைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது என்று நாம் அனுமானிக்கலாம். சற்றே திரும்பிய தலை, முன் நீட்டப்பட்டிருக்கும் கைகள் ஒன்றின் உள்ளங்கையில் தோண்டியெடுத்த கண் இருக்கிறது. 62 செ.மீ. உயரம் கொண்ட அந்த எழிலார்ந்த ஊர்வலப் படிமம் இன்று தஞ்சாவூர் கலைக்கூடத்தில் பரிதாப மாக ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் இருக் கிறது. சீரிய கலைப் படைப்பு. இங்கு வேட்டுவர் கண்ணப்பர் தனியாகத்தான் நிற்கின்றார். கூட நாய் ஏதும் இல்லை.
- சு. தியடோர் பாஸ்கரன், கலை, சூழலியல் ஆர்வலர், ‘கல் மேல் நடந்த காலம்’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT