Published : 23 Sep 2017 10:13 AM
Last Updated : 23 Sep 2017 10:13 AM
ஆ
ங்கிலேயருக்கு எதிராக 1857-ம் ஆண்டு கிளர்ச்சிக்கு முன்பே தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய மூன்று போர்களிலொன்றுக்கு உரிமை கொண்டாடக்கூடிய வேலூர் நகரம், அறிவுத்தளப் போராளிகளையும் உருவாக்கியிருக்கிறது. அவர்களிலொருவர்தான் ‘மெயில் ராம்’ என்றழைக்கப்பட்ட மோகன் ராம். 1933, நவம்பர் 13-ல் முனுசாமி-ஹம்சம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் மோகன் ராம். அவரது தந்தை மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றியதன் காரணமாக அன்றைய சென்னை மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பள்ளிக் கல்வி கற்றார். வேலூர் ஊரீஸ் கல்லூரியில் இண்டர்மீடியட்டும் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டப் படிப்பும் முடித்த பின், புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் சிறிதுகாலம் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கல்லூரி நாள்களின்போதே, வேலூரில் மாணவ நண்பர்களுடன் சேர்ந்து ‘ரெனய்ஸான்ஸ் நூலகம்’ என்னும் படிப்பு வட்டத்தை உருவாக்கி மார்க்ஸிய விவாதங்களை நடத்திவந்தார்.
1960-ல் சென்னைக்கு வந்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் பத்திரிகைப் பணிகளைத் தொடங்கினார். எனினும் அவர் நீண்டகாலம் பணியாற்றித் தமது முத்திரையைப் பதித்தது ‘மெயில்’ நாளேட்டில்தான். அதன் பிறகு டெல்லியில் பிடிஐ-யில் பணியாற்றிய காலம்தொட்டு, ‘ஃபார் ஈஸ்டர்ன் எகனாமிக் ரெவ்யூ’ போன்ற வெளிநாட்டு இதழ்களுக்கும் கொல்கத்தாவில் இடதுசாரிக் கவிஞர் ஸோமர் ஸென் நடத்திய ‘ நவ்’, ‘ஃப்ரன்டியர்’ஆகியவற்றுக்கும் செய்திக் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவந்தார். 1980-களின் இறுதியில் ‘இந்தியா போஸ்ட்’டின் வெளிநாட்டு நிருபராகப் பணியாற்றிய அவர், கடைசியாக டெல்லியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பயனீர்’ நாளேட்டில் எழுதிவந்தார். ஜனதா அரசாங்கம் இருந்த காலத்தில், ஹரியாணா மாநில தலித் மக்கள் பற்றிய ஆவணப் படத்தை பிபிசி-க்காகத் தயாரிக்க அவரும் மூத்த பத்திரிகையாளர் சுமந்தோ பானர்ஜியும் மேற்கொண்ட முயற்சி முழுமை பெறவில்லை.
எனினும் சன்மானம் ஏதும் பெறாமல் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள்தான் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஏராளமான ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. பெரிதும் மதிக்கப்படும் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’யில் 1990-களின் தொடக்கம் வரை எழுதினார். இந்திய அரசின் புவிசார் அரசியல், பொருளாதாரக் கொள்கை, நாகாலாந்து பிரச்சினை, இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, சிலி நாட்டின் நிலச்சீர்திருத்தம், கியூபாவின் உயர் கல்விக் கொள்கை, நெருக்கடிநிலை, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல், இந்தியாவில் அமெரிக்க உளவு நிறுவனங்கள், இந்திய –சோவியத் ஆயுத ஒப்பந்தம், ஒடுக்குமுறைச் சட்டங்கள், மத்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை, யூரோ-கம்யூனிசத்தின் தோல்வி எனப் பரந்த வீச்சுக்குட்பட்டிருந்த அக்கறைகளும் ஆய்வுகளும் அவரது கட்டுரைகளாக வெளிவந்தன.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பெரும் தலைவர்களை நன்கு அறிந்திருந்தவர் என்றாலும் நாகி ரெட்டி குழுவினருடனேயே நெருக்கமாக இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள், பிளவுக்குள் பிளவுகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்துள்ளார். விருப்பு வெறுப்பின்றியும், வலுவான சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்ட அவரது நூல்கள் தெற்காசிய விவகாரங்களைப் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கான அறிவுச் சுரங்கங்கள். ‘இந்தி எகெய்ன்ஸ்ட் இந்தியா- த மீனிங் ஆஃப் டி.எம்.கே.’, ‘இந்தியன் கம்யூனிஸம்: ஸ்பிளிட் விதின் ஸ்பிளிட்’, ‘மாவோயிஸம் இன் இந்தியா’ உள்ளிட்ட முக்கியமான சில ஆங்கில நூல்களை மோகன் ராம் எழுதியிருக்கிறார். இந்திய கம்யூனிஸம் பற்றிய அவரது நூல் இத்தாலியில் மொழிபெயர்க்கப்பட்டது.
அறிவுத் தளத்தில் மட்டுமின்றி மனித உரிமைக் களத்திலும் செயல்பட்டவர் மோகன் ராம். அரசியல் கைதிகளுக்கு மட்டுமன்றி சாதாரணக் கைதிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். 1980-களில் தமிழகத்தில் நடந்த ‘என்கவுன்டர்’ கொலைகளையும் சட்டவிரோதக் கைதுகளையும் பற்றிய உண்மைகளை அறிய வந்த பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் குழுவின் உறுப்பினராக 1981-ல் திருப்பத்தூர் சென்று, சீருடை அணியாத காவலர்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு வீங்கிய முகத்தோடும், கிழிந்த உதடுகளோடும் சென்னை திரும்பினார் மோகன் ராம். (பத்திரிகையாளர்கள்மீது ஏவப்பட்ட அந்த வன்முறையைக் கண்டனம் செய்து அன்றைய முதல்வருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதினார் ‘சோ’ ராமசாமி.)
இலங்கையில் இனப் பிரச்சினை தீவிரமடைந்ததற்கான காரணங்களை விருப்புவெறுப்பின்றி ஆராய்ந்த மோகன் ராம், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்குவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் பிற இனங்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்று வாதாடினார். இந்தியாவைப் போலவே இலங்கையிலும் தேச அரசை வலுப்படுத்துதல் என்னும் ஆட்சியாளர்களின் குறிக்கோளுக்கும் பன்மைத்துவ தேசத்தை உருவாக்க வேண்டிய நியாயத்துக்குமிடையே முரண்பாடு நிலவுவதை மோகன் ராம் சுட்டிக் காட்டினார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’யில் திராவிட இயக்கத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்கள் இரு ‘ராம்கள்’ (‘தி ஹிந்து’ ராம், ‘மெயில்’ராம்). வட இந்திய-இந்தி மைய–பசுப் பாதுகாப்புக் கலாச்சார ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றதன் காரணமாக வளர்ச்சியடைந்த திராவிட இயக்கத்தை விமர்சனரீதியாகவும், அதன் எழுச்சிக்கான வரலாற்றுக் காரணங்களை எடுத்துக்கூறும் வகையிலும் மோகன் ராம் எழுதிய நூல்தான் ‘இந்தி எகெய்ன்ஸ்ட் இந்தியா-த மீனிங் ஆஃப் டி.எம்.கே’ (Hindi Against India: The Meaning of DMK).
1993 நவம்பர் 3-ல் காலமான அவரது ஆக்கங்களை ஒன்றுதிரட்டி, வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் தொகை நூல்களாகக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்காவிலுள்ள அவரது குடும்ப நண்பர் பேராசிரியர் எம். சுந்தரமூர்த்தியும் சென்னையில் உள்ள உறவினர்களும் இறங்கியுள்ளனர். ஆனால், சென்னையிலுள்ள பதிப்பகமொன்று, நூலாசிரியருக்கோ வரலாற்றுக்கோ நியாயம் வழங்காத வகையில் அந்த நூலின் மூலத் தலைப்பான ‘இந்தி எகெய்ன்ஸ்ட் இந்தியா-த மீனிங் ஆஃப் டி.எம்.கே’ என்பதை வெட்டிக் குறுக்கி ‘இந்தி எகெய்ன்ஸ்ட் இந்தியா’ என்று வெளியிட்டிருப்பது அறிவு நாணயமற்ற செயல். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை பற்றிய நூலாசிரியரின் மதிப்பீடுகளை எவரும் விவாதத்துக்குட்படுத்தலாம்.
ஆனால், அவரது நூலின் உட்சாரத்தையும் உள்ளடக்கத்தையும் பிரதிபலிக்கும் தலைப்பைச் சிதைப்பது நியாயமன்று. போதாதற்கு, வாக்கியப் பிழைகளும் அச்சுப் பிழைகளும் மண்டிக் கிடக்கும் ‘அணிந்துரை’யொன்றும் இந்தப் ‘புதிய பதிப்பி’ல் சேர்க்கப்பட்டுள்ளது!
“வடநாடு தென்னாட்டை ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. ஆனால், தென்னாடு கேட்பது ஆதிக்கமல்ல; சமத்துவம்” என்று 1968-ல் வெளிவந்த அந்த நூலில் எழுதிய மோகன் ராம், சமத்துவத்துக்கான வாய்ப்பு பற்றிய சந்தேகத்தை எழுப்பியிருந்ததுடன், இந்தியாவில் பாசிச ஆட்சிக்கான சாத்தியப்பாடு பற்றிய சிந்தனையையும் வெளிப்படுத்தியிருந்தார். அது இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
- எஸ்.வி. ராஜதுரை,
மார்க்ஸிய-பெரியாரியச் சிந்தனையாளர்,
தொடர்புக்கு: sagumano@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT