Last Updated : 28 Sep, 2017 10:51 AM

 

Published : 28 Sep 2017 10:51 AM
Last Updated : 28 Sep 2017 10:51 AM

பெண் கதை எனும் பெருங்கதை - 13

டிச்சிப் போட்டதுபோல தூங்கினாள் ஒரு பேதை; கற்பு பறிபோனது கூட தெரியாமல் - என்று கதைகள் உண்டு.‘மெனா’ வாக (உசாராக) இருக்கிற பெண்களும் ஆண்களும் உண்டுதான்; ஆனா, அது அபூர்வம்!

(ரிஷிபத்தினியும் தேவேந்திரனும் கதை தெரியும்தானே!) கள்ளச் சாவிகள் இந்த உலகத்தில் அதிகம்.காட்டு வேலைகளுக்கும் கொஞ்ச நாள் போக வேண்டாம் என்று கூனம்மாவின் புருசனை நிறுத்தி வைத்துவிட்டார்கள். இவை எல்லாம் அவனுக்கு ரொம்பக் கடின மாக இருந்தது .

வீட்டுக்குள் இருக்க முடியாமல், வீட்டுக்குள் இருந்த மாட்டுத் தொழுவத்துக்கு வந்தான். அங்கே தொழுவத்தை சுத்தப்படுத்திய இடத்தில் ஊர்ப்பட்ட பழைய கிழிந்த துணிகளைக் குவித்து வைத்துக் கொண்டு, அந்தக் காலத்தில் (தையல் இயந்திரங்கள் வருவதற்கு முன்பு) பழைய துணிகள் தைப்பதற்கு என்றே செம்மரியர் என்கிற தொழில் செய்பவர்கள் உண்டு. செம்மரியர்கள் அந்தத் துணிகளைத் தையல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டின் சின்ன முதலாளி யைக் கண்டவுடன் ஒரு மரியாதை புன்னகை செய்து கொண்டார்கள்.

இவனும் அவர்களைப் பார்த்தும் பாராதது போல அவர்களைக் கடந்து போனான். தெருவில் கால் வைத்ததும் எந்தப் பக்கம் போறது என்று தயங்கி, குளக் கரையைப் பார்த்துப் போனான். எங்கே யும் யாரும் தட்டுப்படவில்லை.

துறையில் சலவைத் தொழிலாளர் துணி துவைக்கும் சத்தமும் அதோடு அவர்கள் விடும் ஒரு அதட்டலோடு கூடிய துணை ஓசையும் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

கொஞ்சம் எட்டி நடை போட்டான். மந்தையை ஒட்டி கொல்லாசாரிப் பட்டறை. பெரிய்ய அகலமான உடை மரத்து நிழலில் சுறுசுறுப்பாக சுத்தியல் அடியும் சம்மட்டி அடியும் மாறி மாறி ஒழுங்காக, காய்ந்த இரும்பின் மேல் லயம் தப்பாமல் விழுந்து கொண்டேயிருந்தது.

ஆசாரியார் சுத்தியலால் அடித்துக் கொண்டும் அடி தாங்கும் இரும்பை பத்துக் கொரடால் பிடித்து திருப்பித் திருப்பிக் காட்டிக் கொண்டிருந்தார். அவனுடைய மனைவி சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அறை தந்து கொண்டிருந்தாள்.

இவனுக்கு இதைக் கொஞ்சம் நின்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. அவர்கள் இவனைக் கவனிக்கவே இல்லை. ‘அவர்கள் உண்டு அவர்களது பாடு உண்டு’ என்று வேலையில் கவனமாக இருந்தார்கள்.

பேச்சுக் கொடுத்தால் ‘உழுகிறவனுக்கு நரி காண்பித்தது போல’ ஆகிவிடும். நகர்ந்து போவதே சரி என்று புறப்பட்டான்.

அப்படியே நடந்து இறவைத் தோட்டத்தை எட்டிப்பார்த்து வந்துவிடலாமா என்று யோசித்தான்.

மலை இறைத்துக் கொண்டிருந்த போது மயக்கம் வந்து அப்படியே உட்கார்ந்துவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. அன்றைக்கு கூனம்மாதான் மண்வெட்டி பிடித்து நீர் பாய்ச்சிக் கொண் டிருந்தாள்.

ஒழுங்காகவும் அட்டியில்லாமலும் வந்து கொண்டிருந்த தண்ணீர் குறைந்ததும் என்னவென்று கமலையைப் பார்த்தாள். புருசனைக் காணவில்லை. கமலை மாடுகள் கமலைக் குழியில் விளிம்போரம் நின்று கொண்டிருந்தன. அவன் கமலைக் கல்லில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உட்கார்ந்த ‘இருப்பு’ சரியில்லாததுபோல் தெரிந்தது. வேகமாய் போனாள். ‘உடம்புக்கு என்ன செய்யுது?’ என்று கேட்டு, அவனை பூவரசு மரத்தின் நிழலில் உட்கார வைத்தாள். கலயத்தில் கொண்டு வந்திருந்த நீத்துப் பாகத்தைக் கொடுத்தாள்.

கொஞ்சம் தெளிச்சியானதும், இவளே கமலையை இயக்கத் தொடங்கினாள். இது அவளுடைய நீண்ட நாள் ஆசை!

இவள் போய் வால் கயிற்றைப் பிடித்து தலைக்கு மேலாக உயர்த்தியதும் கிணற்றுக்கு உள்ளே மிதந்து கொண்டிருந்த ‘கூனை’ கவிழ்த்து வேண்டிய அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டதும் கயிற்றை விட்டுவிட்டு, கமலை வடத்தின் மேலே ஒரு தவ்வுத் தவ்வி ஏறி உட்கார்ந்ததும் மாடுகள் முன்னோக்கிப் போக ஆரம்பித்ததும் இரண்டு கைகளையும் விரித்து மாடுகளின் மேல் பட்டதோ படலையோ என்று மாடுகளைப் பத்திய விதம் பார்த்தவர்கள் வியக்கும்படி இருந்தது. மாடுகள் முன் விளிம்புக்குப் போனதும் கூனையிலிருந்து தண்ணீர் கொட்டும் ஓசையைக் கேட்டதும் புருசன் தலையைத் தூக்கிப் பார்த்தான். வாய்க்குள் ஒரு வசவு சொல்லி பாராட்டிக் கொண்டான்.

அந்த வழியாக நடந்து போன ரெண்டு பெரியவர்களில் ஒருவர் “பார்ரா பார்ரா ஒரு பொம்பளை கமலை ஏறி அடிக்கிறதெ!” என்று வியப்போடு சொன்னார்.

‘கலி’ வரும்னுதாம் சொன்னாங்க; வந்துருச்சி போலிருக்கே!” என்றார்.

மற்றவர்: “கமலை அடிக்கலாம்; கலப்பைதான் தொடப்படாது” என்றார்.

அதோட விவரம் சொல்லுங்க என்று கேட்டதும், “எல்லாம் பெரியவங்க வகுத்து வெச்சதுதான். கலப்பைங்கிறது பலராமரோட ஆயுதம். அதெ பொம்பளைங்க தொடலாமா?’’ என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

நல்லவேளையாக கூனம்மாவின் காதில் அது விழவில்லை. தலையாரியை ஒரே அடியில் சாய்த்தது இவர் களுக்கும் தெரியும்.

‘‘ஆண்களில் விஷ்ணுவுக்கு சக்கராயுதம், அனுமனுக்கு கதாயுதம், முருகருக்கு வேலாயுதம்’’ என்று சொல்லியிருக்கு என்று ஒருவர் சொன்னதும் மற்றவர், ‘‘பூர்வீக முதல் தேவதையான ஆதிபராசக்திக்கு சூலாயுதம் - முப்பிரிவோடு கூடியது - என்று இருக்கே...’’ என்றார்.

இருவரும் சிரித்துக் கொண்டனர்.

- கதை வரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x