Published : 12 Jul 2014 09:15 AM
Last Updated : 12 Jul 2014 09:15 AM
வால்டர் பெஞ்சமின் ஜெர்மானியத்தத்துவ ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் வானொலிக் கலைஞர். அவரது ஈடுபாடுகள் அனந்தமாயினும் அவர் காலத்தில் வெளிவந்த படைப்புகள் சிலவே.
இதனால்தான் குறிப்புதவி நூல்களில் வால்ட்டர் பெஞ்சமின் ஓர் அடிக்குறிப்பாக மட்டுமே இருக்கிறார். ஆனால் அவர் ஒரு வரலாற்றின் கன பரிமாணம் கொண்டவர்.
பெஞ்சமின் (1892 - 1940) ஜெர்மானிய யூதராக இருந்தமையால், வரலாற்றுச் சூழலிலிருந்து அரசியல் நெருக்கடி வரையிலான அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
முதலில் அவரது பெற்றோரிடையே சுமுகமான உறவு நிலை இல்லாததால் குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம், மனைவியுடன் நீண்ட காலம் இருக்க முடியாது விவகாரத்து பெற்றுத் தனிமைப்பட்ட நிலை, தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்ற முடியாத முரண் நிலை, யூதரானதால் ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம், சித்திரவதை முகாமில் பலியாகிவிடுவதைத் தவிர்க்க பிரான்சிலிருந்து எல்லைப் புறத்திற்குத் தப்பியோடி, அங்கே தற்கொலை செய்து கொண்டது இதுதான் பெஞ்சமினது வாழ்வின் வரைபடம்.
ஒருமுறை தன் வாழ்க்கையை ஒரு வரைபடமாக வரையுமாறு சொல்லப்பட்டபோது பெஞ்சமின் வரைந்திருந்தது புதிர்வழிப் பாதை. அப்புதிர்வழிப் பாதையிலிருந்து வெளியேற முடியாதவராகவே பெஞ்சமின் வாழ நேர்ந்திருக்கிறது.
பெட்ரோல்ட் பிரெக்ட் என்னும் நாடகாசிரியரின் மார்க்சியம், தியோடர் அடார்னோவின் விமர்சனக் கோட்பாடு மற்றும் ஷோலம் என்னும் யூத நண்பரின் யூத அனுபூதிவாதம் என்பவற்றில் பெஞ்சமின் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார்.
ஒன்றுக்கொன்று முரணான ஈடுபாடுகளின் சங்கமமாயிருந்த பெஞ்சமின், லியான் ட்ராட்ஸ்கியின் அரசியல் தத்துவத்தை அணுகுவார்; பாலஸ்தீனம் போக வேண்டும் என்னும் வேட்கை கொண்டிருப்பார்; பெரியதொரு நூலகம் அளவுக்குப் புத்தகங்களைச் சேகரித்திருந்த அவர் இறுதியில் தற்கொலை செய்துகொண்டபோது கையிலிருந்த சூட்கேஸில் காணப்பட்டவை கையெழுத்துப் படிகள்தான்.
ஒரு கட்டத்தில் லாட்வியாவைச் சேர்ந்த போல்ஷ்விக் தோழியும் நடிகையுமான ஆஸ்ஜா லாசிஸிடம் காதல்வயப்பட்டிருந்த பெஞ்சமின், தன் நாட்குறிப்பில் இப்படிப் பதிவு செய்திருந்தார்:
“மிகப் பெரும் காதல் என்னை ஆட்கொண்ட ஒவ்வொரு முறையும் நான் தீவிரமான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. உண்மையான காதலானது எந்தப் பெண்ணை நான் காதலிக்கிறேனோ, அந்தப் பெண்ணுக்கு இணையானவனாக என்னை மாற்றிவிடுகிறது என்பதுதான் இதற்குக் காரணம்.
ஆஸ்ஜாவுடனான எனது உறவிலும் அவருக்கு இணையான ஒருவனாக மாறுகின்ற போக்குதான் என்னிடம் மேலோங்கியிருந்தது” (வால்ட்டர் பெஞ்சமின்; நிலை மறுக்கும் வாழ்வு / மாம்மே ப்ராடர்சன் / விடியல்.)
காதலாயினும் புத்தகச் சேகரிப்பாயினும் இலக்கிய விமர்சனமாயினும் தத்துவ அணுகுமுறையாயினும் அதன் விளிம்புவரை போய்ப் பார்த்துவிடுவதும், அதனால் உருமாறுவதும்தான் பெஞ்சமினிடம் நாம் காணும் தனித்தன்மை.
மொழிபெயர்ப்பில் பெரும் ஈடுபாடு கொண்டு, சார்லஸ் பாதலேர் கவிதைகள் மற்றும் ப்ரூஸ்த்தின் நாவல்களின் மொழியாக்கப் பணியை மேற்கொண்டிருந்த பெஞ்சமின், மொழியாக்கம் குறித்து நுட்பமான பார்வையை முன்வைக்கிறார்: “அனைத்து இலக்கிய வடிவங்களிலும் மொழிபெயர்ப்பு மட்டுமே மூலமொழி முதிர்ச்சியடையும் போக்கையும், தனது சொந்த மொழியின் பிரசவ வேதனையையும் உற்று நோக்கும் சிறப்புப் பணியை ஏற்றுக்கொண்டதாக இருக்கிறது.”
திரைப்படம் குறித்து எழுதும்போது அதன் உள்ளுறையும் ஆற்றல் எந்த அம்சங்களில் பொதிந்துள்ளது என்று அடையாளங்காட்டுவார். “திரைப்படம் இதுவரை தனது உண்மையான அர்த்தத்தை, முழுமையான சாத்தியங்களை உணர்ந்துகொள்ளவில்லை. மாயத்தன்மை, அற்புதத்தன்மை, இவற்றுக்கு அப்பாற்பட்ட தன்மை ஆகியவற்றைத் தனது இயல்பான வழிமுறைகள் மற்றும் ஒப்பற்ற கவர்ச்சி ஆகியவற்றுடன் வெளிப்படுத்துவதற்கான திரைப்படத்தின் ஆற்றலில்தான் அதன் உண்மையான அர்த்தமும் முழுமையான சாத்தியங்களும் அடங்கியிருக்கின்றன.”
(வரலாறு: காலமும் கலையும்/வால்ட்டர் பெஞ்சமின்/விடியல், 2003.)
பெஞ்சமின் தற்கொலை முயற்சி வெற்றிபெற்றது ஒரு வரலாற்று முரண் என்றால், அவரது சகா ஆர்தர் கோயெஸ்லர் ஐரோப்பாவிலிருந்து தப்பி வந்து, தற்கொலைக்கு முற்பட்டது தோல்வியில் முடிவடைந்தது விதியின் முரண் என்றுதான் கூற வேண்டும்.
அப்படித் தப்பாமல் இருந்த பெஞ்சமின் தம்பி ஜார்ஜ் சித்திரவதை முகாமில் 1942-ல் கொல்லப்பட்டதை வரலாற்று உண்மை என்பதா, வரலாற்று அநீதி என்பதா? கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் நாயகன், தன் வாழ்வில் இடம் பெறும் சவால்கள், எதிர்ப்புகள், சோதனைகள் என்பவற்றுடன் விதியுடன் சேர்ந்து தெய்வங்கள் போடும் தடைகளையும் அவன் எதிர்கொள்ள வேண்டும்.
எனவேதான் அவனது துயரமும் வீழ்ச்சியும் அவ்வளவு கன பரிமாணங்களைக் கொண்டுள்ளன. பெஞ்சமினின் வாழ்வும், ஓயாத அலைதலுக்கும் திரிதலுக்கும் தானே முற்றுப்புள்ளி வைத்துக்கொள்வதான புதிரைக் கொண்ட துன்பியல் நாடகமாகி இருக்கிறது.
ப்ரூஸ்த்தின் இலக்கியத்தை மதிப்பிடுகையில் அவர் சமூக விமர்சனத்துடன் இணைத்துப் பதிவு செய்கிறார்: “பூர்ஷீவா வர்க்கம் தன் முனைப்பான அம்சங்களை இறுதிப் போராட்டத்தில் வெளிப்பாடுத்தும்வரை, ப்ரூஸ்த்தின் பெருமையின் பெரும்பகுதியும் நெருங்க முடியாததாக /கண்டறியப்படாததாக இருக்கும்.” (டெர்ரி ஈகிள்டன்.)
கட்சி சாராத இடதுசாரி அறிவுஜீவியாக விளங்கிய பெஞ்சமின், ஹிட்லர் காலத்து வரலாற்று அநீதியால் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால், அரும்பெரும் ஆய்வுப் பணிகளைச் செய்துவிட்டுச் சென்றிருப்பார்.
அவர்விட்டுச் சென்றவை சொற்பமே எனினும், பளிச்சிடும் பொறிகள் அவை. தன் மீது படியும் மனங்களை எல்லாம் பற்றச் செய்துவிடும் ரசவாதம் கொண்டவை. படைப்பூக்கம் கொண்ட சிந்தனை என்றால் வால்ட்டர் பெஞ்சமின் என்று பொருள் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT