Published : 14 Sep 2017 09:51 AM
Last Updated : 14 Sep 2017 09:51 AM
பா
ரத மகாயுத்தம் முடிந்தவுடன் கண்ணன் அவசரமாக - யாரையோ பார்க்க அவசரப்படுவது போல, துவாரகைக்குப் புறப்பட்டுப் போனான். வாயுவேகம் மானோ வேகமாய்.
கண்ணன் வருவது தெரிந்து துவாரகை அரண்மனைப் பெண்கள் ஆரத்தி கரைத்து வைத்துக் கொண்டு தயாராகக் காத்திருக்கிறார்கள்.
வந்த கண்ணன் என்ன செய்தான்?
அரண்மனைக்குள் போகவில்லை. நேராக அரண்மனைக்குப் பின்னால் கட்டிக் கிடக்கும் பசுக்களைப் பார்க்க ஓடினானாம்.
கண்ணனின் வாசம் - மணம் - தூரத்தில் அவன் வரும்போதே பசுக் களுக்குத் தெரிந்து, அவை ‘ ‘கண்ணா.கண்ணா’’ என்று கூப்பிட்டதாம்.
எல்லாப் பசுக்களையும் தடவிப் பார்த்தானாம் கண்ணன். அவற்றின் மேலே படர்ந்திருந்த உன்னிகளை எடுத்தானாம்.
பாடிக் கொண்டே போனாள் பாட்டி. ‘ ‘உங்களை மறந்தேனே பசுக்களே...’’ என்று கண்ணீர் விட்டானாம் கண்ணன்.
பாட்டியின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
‘ ‘அநாதை ஆனோமே கண்ணா...’’ என்று பசுக்கள் கண்ணீர் விட்டனவாம்.
மிஞ்சிப் போன வயதுகளினால் பாட்டிகளும் அப்படி ஆகிவிட்டதாகக் கண்ணீர்விடுகிறார்கள்.
****
‘தென்கிழக்கு மூலைக்கே
ஏன் போனாய் பொழுதே?’
‘சமுத்திரத்தில் நீராடப் போனேன்
பிள்ளைகளே!’
‘சமுத்திரத்தில் நீராட
ஏன் போனாய் பொழுதே?’
‘ஆண்டுக்கு ஒருமுறைதான்
குளிக்கிறேன் பிள்ளைகளே!’
‘இப்போதாவது வந்தாயே
பொழுதே...
வா வா... பொழுதே... வா வா!’
****
தை மாத முதல் நாள். பொழுதுக்குப் பொங்கல். மறாநாள் பொங்கல் மாடுகளுக்கு.
மனிதர் பேணி வளர்க்கும் எந்தப் பிராணிகளுக்கும் இந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டா?
நாய்களையும் பூனைகளையும் மடியில் போட்டுக் கொண்டு கொஞ்சலாம்; தலை மாட்டில் வைத்துப் போற்றலாம்; ஆனால் மாடுகளைப் போல் வாழ்நாள் முழுதும் உடல் உழைப்பை யும் மற்றவற்றையும் அவற்றால் தர முடியுமா?
பொங்கல் வைத்து மரியாதை செய்வதும், கோயில்களில் சிலை வைத்து வணங்குவதும் எந்த உயிர்ப் பிராணிக் கும் நடக்காத ஒன்று.
அழகும் சர்வ லட்சணங்களுடன் மாட்டுத் தொழுவத்தில் ஒரு காளைக் கன்று பிறந்துவிட்டால், உடனே அதை கோயிலுக்கு ‘நேர்ந்து’ விட்டுவிடுவார்கள். செழும்பர பால் குடித்து வேகமாக வளரும். நன்றாக வளர்ந்ததும் ஒரு நல்ல நாள் குறித்து, ஊரை அழைத்து கோயிலுக்குப் பொங்கல் வைத்து, வாலுக்கு மேலாகவும் முதுகின் இறக்கத்திலும் உள்ள ‘தட்டில்’ சூட்டுக் கோலால் அடையாளச் சூடு போட்டு கோயிலிலேயே விட்டுவிடுவார்கள்.
வீட்டைப் பார்த்து வந்தாலும் அதுக்கு தீவனம், புல் அரைத்த பருத்திக் கொட்டை என்று வயிற்றை நிரப்பி வெளியில் தள்ளி கதவடைத்துவிடுவார்கள். பிறகு அதுவும் கிடையாது.
அது தெரிந்துகொள்ளும். நினைத்த இடத்தில் மேய்வது, நீரைக் கண்டால் குடிப்பது, கோயிலுக்கு முன்னால் வந்து படுத்துக் கொள்வது. (இப்போ தும் கோயில்களுக்கு முன்னால் சிலையாகப் படுத்துக் கொண்டிருப்பது அதுதான்)
வயதுக்கு வந்து பசுக்களை நோக்கும் பருவம் வந்தவுடன் அதுவாகவே மாட்டுக் கிடைகளைப் பார்த்து நகர்ந்துவிடும்.
எங்கே கண்ணுக்குப் பச்சை தெரி கிறதோ அங்கே போய் மேயும்; நாற்றங்காலாக இருந்தாலும் சரி.
“அய்யோ... அய்யோ....” என்று சம்சாரி பதைபதைப்பான். கோயில் காளையைத் தொட முடியாதே! தூரத்தில் நின்று கொண்டு குரல் கொடுத்துப் பார்ப்பான். இது நகராது. கல்லால் வீசி விரட்டுவான். நகராது. கல்லால் அடிப்பான்.
நாளாக நாளாகச் சரியாக இப்படி ஆகி, ஆகி மாட்டுக்கும் மனுசனுக்கும் பகை ஆகிவிடுகிறது.
மூன்று வயது ஆகியதும் அந்தக் கோயில் காளை மனிதர்களை முட்ட ஆரம்பித்துவிடும்.
‘அங்கே ஒருத்தனை முட்டிவிட்டது; இங்கே ஒருத்தனை முட்டிவிட்டது...’ என்று ஊருக்குள் தகவல் வரும்.
ஆரம்பத்தில் பெரியவர்கள் மவுனமாகவே இருப்பார்கள்.
‘இன்றைக்கு ஒரு கர்ப்பிணிப் பெண்ணை முட்டிவிட்டது’ என்று ஒரு தகவல் வரும்.
ஊர்க் கூட்டம் கூடி, ‘யப்பா இனி முடியாதப்பா. இந்த காளையைப் பிடித்து, மூக்கணாங் கயிறு பூட்டி, காய் அடித்துவிட வேண்டியதுதாம்’ என்று தீர்மானித்துவிடுவார்கள்.
யார் பிடிக்கிறது? அந்த பாய்ச்சங் காளையை? இப்படித்தான் பிறந்தது, மாடு பிடித் திருவிழாவுக்கு முன்னுரை.
மாட்டுக்கும் மனுசனுக்கும் ‘நீயா... நானா?’ என்ற பாடு அப்போதுதான் தொடங்கியது.
‘எருது கட்டு’வில் மாட்டுக்கும் மனுசனுக்கும் சண்டை கிடையாது; விளையாட்டுதான்.
- கதை பேசும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT