Published : 05 Jul 2014 01:28 PM
Last Updated : 05 Jul 2014 01:28 PM

கனவுகள் சுமந்து வனம் திரிபவன்

தனிமனித வாழ்வு இயற்கையின் ஒவ்வோர் அங்கத்தோடும் தான் கொள்ளும் இயைபை அல்லது இயற்கை தனக்குள் கிளர்த்தும் நெருக்கத்தை மொழிவழி வெளிப்படுத்துகின்றன.

குடிப்பெயர்ச்சியால் ஊரமைத்து வாழ்கிறான் மனிதன். அவன் வருகைக்கு முன்பே, பின் உருக்கொள்ளும் ஊருக் கும் அடையாளமாய் இருப்பவை மலைகள். அவ்வகையில் தன் ஊருக்கு அடையாளமாய் நிற்கும் கோழி குத்து மலையைப் பற்றிய இருவேறு கவிதைகள் முக்கியமானவை.

ஒரு குடியின் பல தலைமுறைகளின் மனதில் நிலைகொண்டிருக்கும் ஒரு மலையின் பேரிருப்பைச் சொல்லவரும் கவி, தன்பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு தன் தகப்பன், தான் என்று வழிவழியாகத் தமக்கு, தன் கொண்டையின் மேல் நிலவை அமர்த்தி அழகு காட்டும் இம்மலை, தன் குழந்தையின் குழந்தைகளுக்கும் அப்படி அழகு காட்டும் என்கிறார் (கோழி குத்தும் மலை). நடப்பு காலத்து மலைவிழுங்கிகளின் மனதை அம்மலை உறுத்தாதவரை சாத்தியமே இது.

சிரமப்பட்டு எட்டிய அம்மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்குகையில் அது “பள்ளங்களைப் போல் உயரங் களும் ஆபத்தானவை” என்று சொல்லித் தருவதாய்ச் சொல்வது வேறு தளங்களுக்கு நகர்த்துகிறது (உயரங்களும்).

பருவத்திற்குப் பிறகு வெட்டிக் கொள்ளலாம் எனத் தான் சொல்லியும் கனிதொங்கும் கோணக்காய் மரத்தை வெட்டிவிடுகிறாள் அம்மா. “கனிகொறிக்க வரும் குருவிகளுக்கு / என்ன சமாதானம் சொல்லி அனுப்புவேன்?” எனத் தவிக்கும் உளநிலை ரகசியனுடையது (குருவிக்குச் சமாதானமில்லை). இதே உளநிலை மண்விட்டுப் பிரிய மறுக்கும் வேர்களைச் சொல்லும் கவிதையிலும் வெளிப்படுகிறது (மரம்).

இயற்கையோடு கலந்துணரும் காலத்தில் பல தனிமனிதத் துயர்களை உள்வாங்கி இலகுவாக்குகிறது இயற்கை. வாழ்வு தன்மையமாயச் சுருங்குகையில் தனக்கே தான் சுமையாகிறது. இதை ரகசியனுக்கு மாநகரம் கதறக் கதறக் கற்றுத் தருகிறது.

தனிமனித மற்றும் சமூகவாழ்வு சார்ந்த துன்பங்கள் பல இருப்பினும், இயற்கையோடும் உறவுகளோடும் இயைந்த தன் கிராம வாழ்வின் மன நெருக்கத்தை வாஞ்சையோடு உள் வைத்த கவிமனம், பணிநிமித்தம் வந்து சேர்கிற மாநகரத்தில் துய்க்க நேரும் ஒட்டுறவற்ற தன்மையும் அந்நிய மாதலும் பற்றி இவரது பல கவிதைகள் பேசுகின்றன.

‘ஒரு சமுதாயம் வாழ்கிறதா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. என்ன நிலையில் வாழ்கிறது என்பதே முக்கியம்’ என்பார் டாக்டர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் சமூக நெருக்கடி, அதன் விடுதலைக் குரலில் ஒலிக்கும் சமத்துவ நோக்கு இவற்றை உள்ளார்ந்த வீச்சுடன் பதிவு செய்கின்றன ரகசியனின் கவிதைகள்.

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு:
ரகசியன், வெளியீடு: பொன்னி,
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை.91
தொலைபேசி: 9445182142, விலை: ரூ.60/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x