Published : 02 Sep 2017 09:52 AM
Last Updated : 02 Sep 2017 09:52 AM
வ
ருடத்தில் 293 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும் ஊரான மதுரையில், மேலும் ஒரு 12 நாள் திருவிழா நேற்று தொடங்கியிருக்கிறது. ‘தமிழ் மதுரை’ என்று இலக்கியங்கள் போற்றும் நகரில், இப்போது நடைபெறுவது ஆன்மிக விழா அல்ல, அறிவுத் திருவிழா. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் விழா இது.
மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்கள் அனைவரும் பயனடையும் வகையில், 2006-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தப் புத்தகக் காட்சி, இப்போது 12-வது ஆண்டை எட்டியிருக்கிறது. தொடக்க விழா மாலைதான் என்றாலும், இந்த வாய்ப்புக்காக ஓராண்டாகக் காத்துக் கிடந்த வாசகர்கள் காலை 10 மணிக்கெல்லாம் தமுக்கம் வரத்தொடங்கிவிட்டனர். நேரம் செல்லச் செல்ல வாசகர்கள் கூட்டமும் குவியத்தொடங்கியது.
தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை புத்தக விற்பனை நடைபெற உள்ளது. புத்தகக் காட்சியைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் இல்லை. 2 லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புக்ஸ் ஃபார் சில்ட்ரன், சர்வோதய இலக்கியப் பண்ணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருத்துப் பட்டறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சரசுவதி மகால் நூலகம், சிக்ஸ்த் சென்ஸ், எதிர், அடையாளம், விடியல், காலச்சுவடு, தமிழினி, புலம், நேஷனல் புக் டிரஸ்ட், தோழமை, சாகித்திய அகாடமி, கண்ணதாசன் பதிப்பகம், வானதி பதிப்பகம், கண்ணன் பதிப்பகம், ஓவியா பதிப்பகம், அகத்தியர் பதிப்பகம் உள்ளிட்ட 250 அரங்குகள் காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுத் தேர்வுக்கான புத்தகங்கள், ஐஏஎஸ் தேர்வுப் புத்தகங்கள், நீட் நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள், நீட் தேர்வுக்கு எதிரான புத்தகங்கள், பொது அறிவு, சமையல் கலை, யோகா, ஆன்மிகம், தமிழைப் பிழையின்றி பேச எழுத வழிகாட்டி நூல், குழந்தை வளர்ப்பு, இயற்கை விவசாயம், மருத்துவம், விளையாட்டு, மனையியல் போன்ற துறைகளில் வழங்கப்படும் வார்த்தைகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு போன்ற ஏராளமான நூல்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மொழி நூல்களுக்கென புத்தக அரங்குகள் இருப்பதுபோலவே ஆங்கில நூல்கள் மட்டுமே விற்பனை செய்வதற்கான அரங்குகளும் உண்டு. இந்தி புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்குகளிலும் மின்விசிறி வசதி உண்டு. வாசகர்கள் பயனடையும் வகையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் காடுபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 30 பேர் நேற்று காலையே புத்தகக் காட்சியைக் காண வந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். பொது அறிவு, வீரமங்கை ஜான்சிராணி, விவேகானந்தர் போன்ற புத்தகங்களை அப்பள்ளி மாணவர்கள் வாங்கிச் சென்றனர்.
புத்தகத் திருவிழா செப்டம்பர் 1 முதல் 12-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. “வாசகர்களைக் கவர்வதற்காக இம்முறை முன்கூட்டியே திட்டமிட்டு விளம்பரம் செய்துள்ளதோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டப் பள்ளிகளுக்கும் தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பியுள்ளோம். குழந்தைகளைப் பள்ளி நிர்வாகமே அழைத்துச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கெனக் குறிப்பிட்ட தேதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, எங்களது இலக்கான 5 லட்சம் வாசகர்கள் என்பது, 6 லட்சத்தைக்கூடத் தொடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கின்றனர் புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT