Published : 02 Sep 2017 09:53 AM
Last Updated : 02 Sep 2017 09:53 AM
ம
துரை என்ற பழங்குவளையில் தமிழ் என்ற ஆதிச்சொல்லை நீங்கள் நிரப்புவீர்களெனில், அக்குவளை தொன்மையும் பெருமிதமும் கொண்ட சில ஆயிரம் வருட மொழி வரலாற்றின் நினைவுகளால் நுரைத்துப் பொங்குவதைத் தடுக்க இயலாது. பரிபாடலில், பட்டினப்பாலையில், மதுரைக்காஞ்சியில், சிலம்பில் உலவிக்கொண்டிருக்கும் பெண்களின் ஆபரணங்களையும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களையும் தமது மடியில் கட்டி வைத்திருப்பதாகக் கீழடியின் அகழ்வைக் கவனப்படுத்துகிறார்கள்.
நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற சொல்லின் மூலம் மூன்று சங்கங்களின் இருப்பை வலியுறுத்தி, பாண்டித்துரைதேவர் சிலையாக நிற்கிறார். மதுரை தமது குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித்தரப் பள்ளிக்கு ஒரு மகாகவியை வருவிக்கிறது. பற்றியெரிந்த மொழிப் போரின் முதல் பொறி பறந்த தமுக்கத்தில் எழுந்தருளி தமிழன்னை அருள்பாலிக்கிறாள். மதுரையின் வரலாறு ஒரு மொழியின் வரலாறுதான். அது அறுபடாமல் இன்றும் உயிர்த் திருக்கிறது.
மதுரையின் எழுத்து அல்லது மதுரையின் எழுத்தாளர்கள் என்ற வரையறை சிக்கலானது. அதன் எல்லைகளை நிர்வாக மொழியில் சொல்ல இயலாது. மதுரையின் பேச்சுமொழி திரிகிற இடங்களை அதன் எல்லையாக ஒரு வசதிக்காக வைத்துக்கொள்ளலாம். எல்லையென்று ஒன்று இருந்தால், எல்லைப் பிரச்சினையும் வரும்தானே.
மதுரை எழுத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை சிற்றிலக்கிய காலமும் பராமரித்தது. வீரமாமுனிவர் எனும் ஆளுமையை உருவாக்கியவரும் தமிழின் முதல் ‘சல்லாப’ எழுத்து என அறியப்படும் ‘கூளப்ப நாயக்கன் காதல்’ தந்தவருமான சுப்ரதீபக் கவிராயர் நினைவுகூரப்பட வேண்டியவர்.
‘கமலாம்பாள் சரித்திரம்’ தந்த ராஜமய்யரும் சிறுபத்திரிகை மரபைச் சிலுவையெனச் சுமந்து திரிந்த சி.சு.செல்லப்பாவும் வத்தலக்குண்டிலிருந்து வந்த மதுரையின் பெருமிதங்கள். தீவிர இலக்கியத்தின் சிறுதெய்வங்களாகிவிட்ட ப.சிங்காரமும் ஜி.நாகராஜனும் மதுரையின் கொடைகளே. யோ.கர்ணனைத் தவிர்க்க வியலாது.
பக்தி இலக்கியத்தின் அறுபடாத கண்ணியாக மீனாட்சியம்மையின் தோளில் வெண்கலக் கிளியாகி அமர்ந்திருக்கிறார் கவிஞர் ந.ஜயபாஸ்கரன். கவிஞர் சமயவேல், யுவன் சந்திரசேகர், இடதுசாரிகளின் வாழ்நாள் வழக்கறிஞர் யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஷன், தேவேந்திர பூபதி, மா.காளிதாஸ், ஹவி, ஸ்ரீஷங்கர், சாம்ராஜ், செந்தி எனத் தொடங்கி நேசமித்திரன், தமிழ்ப்பித்தன் என நீளும் நவீனக் கவிதைத் தொடர்ச்சி நம்பிக்கைக்குரியது. சக்தி ஜோதி, உமா மகேஸ்வரி, மு.சத்யா. அ.ரோஸ்லின் முதலான பெண் படைப்பாளிகளின் அணிவகுப்பு பெருமிதம் கொண்டது.
சுரேஷ்குமார் இந்திரஜித் தமிழின் தனித்துவமிக்க சிறுகதைக்காரர். பா.வெங்கடேசனின் மதுரை அடையாளம் பலருக்கும் தெரியாதது. சு.வேணுகோபால், ப.திருச்செந்தாழை, எஸ்.செந்தில்குமார், ஷாஜஹான், அர்ஷியா, லக்ஷ்மி சரவணக்குமார், கார்த்திகைப் பாண்டியன் போன்ற படைப்பாளிகள் மதுரையை அலங்கரிப்பவர்கள்.
பரவலாக அறியப்பட்ட விமர்சகர்களுள் ந.முருகேசபாண்டியனும் ஒருவர். சுந்தர்காளி மதுரையின் ஆளுமை. பல்கலைக்கழகங்களுடன் நவீன இலக்கியத்தை இணைக்கும் பாலமாக இயங்கும் முத்துமோகன், தி.சு.நடராஜன், முத்தையா, இரா.பிரபாகரன், ஆனந்த குமார், பூமிச்செல்வம், ந.பெரியசாமி, ரத்னகுமார் உள்ளிட்டோர் நம்பிக்கையூட்டுபவர்கள். சமகால தலித் அரசியலில் கூர்மையான இடையீடு செய்யும் எழுத்தாளர்களாக டி.தருமராஜன், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெகநாதன் ஆகியோரைச் சொல்ல வேண்டும்.
இடதுசாரி இயக்கங்களிலிருந்து வந்த மதுரையின் படைப்பாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கோ.கேசவன் மார்க்ஸிய அரசியலின் கொடை. எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர் என விளிக்கப்படும் எஸ்.ஏ.பெருமாள், பேராசிரியர் அருணன், நன்மாறன், தேனி சீருடையான், டி.செல்வராஜ், சு.வெங்கடேசன், பாலபாரதி. காமுத்துரை, பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீரசா, அ.முத்துகிருஷ்ணன் என நீள்கிறது இப்பங்களிப்பு.
பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகளில் விதந்தோதப்படும் மதுரையில் காத்திரமான நாடகங்களைத் தந்தவர் மு.ராமசாமி. மொழிபெயர்ப்பைப் பொறுத்தமட்டில் தருமி, சுசீலா, வடகரை ரவிச்சந்திரன், ப.ரத்தினம், இரா.நாகராஜன் என பெரும் படை உள்ளது. சுப.குணராஜன் மதுரையின் வார்ப்பு.
மதுரைக்கார எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவதற்குப் பெயர்களைச் சேகரித்தபோது அது மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலோ என்ற தோற்ற மயக்கம் ஏற்பட்டது. ஆதலால், இது விடுபடல்களைக் கொண்ட மதுரையின் நிறைவுறாத சித்திரம். போதாமை மிக்க இந்தச் சித்திரத்தை விடுபடல்களின் வண்ணம் கொண்டு அவரவர் பூர்த்திசெய்யலாம்தான்.
மதுரை எழுத்தை ஜனநாயகப்படுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. வாதவூரான் மாணிக்கவாசகனைக் கொண்டாடும் மதுரையில்தான் கொன்னவாயன் சாலையும் உள்ளது. காலத்தின் முன்பு படைப்புகளை யாரும் வைத்துவிட்டுப் போகலாம். காலம் கறாரான சங்கப்பலகை என்பதை மட்டும் மறக்கலாகாது.
-லிபி ஆரண்யா,
‘உபரி வடைகளின் நகரம்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்,
தொடர்புக்கு:
libiaranya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT