Published : 11 Dec 2016 12:24 PM
Last Updated : 11 Dec 2016 12:24 PM
பாரதியார் பிறந்தநாள் டிசம்பர் 11: |
‘சுதேசமித்திரன்’ இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதியின் இறுதிக் காலம். அவரோடு உதவி ஆசிரியராக உடன் பணியாற்றியவர் உலகநாத நாயகர் என்பவர். பாரதி மறைந்த 19-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ‘லோகோபகாரி’ பாரதி மலரில் பழைய நினைவுகளை அவர் எழுதியிருந்தார்.
சென்னையில் பாரதியாரின் சொற்பொழிவுக் கூட்டம் ஒன்றைத் தாம் ஏற்பாடு செய்திருந்ததாகவும், நிகழ்ச்சிக்கு முன் தமது இல்லத்துக்குப் பாரதி வருகைதந்து குடும்பத்தாரோடு அளவளாவி மகிழ்ந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியை இப்படி விவரித்திருந்தார்:
“வன்னியத் தேனாம்பேட்டையில் அப்போதிருந்த திலகர் தமிழ் வாசக சாலையின் ஆதரவிலே அன்று பொதுக்கூட்டம் நடந்தது. பாரதியார் சாகாமலிருக்கும் வழியைப் பற்றிப் பேசப்போவதாகக் கேள்வியுற்றுப் பொது மக்கள் அக்கூட்டத்துக்கு ஏராளமாக வந்திருந்தனர். சாகாமலிருக்கப் பாரதியார் வழி சொல்லுவதைக் கேட்கப் பலர் வந்து கூடுவதில் ஆச்சரியமில்லை. சரியாக மணி ஐந்துக்குப் பாரதியார் பேச ஆரம்பித்தார். அவர் தமது பேச்சை “காலா! என் அருகே வாடா! உதைக்கிறேன்” என்ற பாட்டுடன் ஆரம்பித்தார். பேச்சுக்கேற்ற பாட்டு! பாரதியார் பாட்டு மட்டும் பாடவில்லை. பாவம் பிடித்து அபிநயமும் செய்து காட்டினார். அன்று காலன் மட்டும் பாரதியார் கண்முன் தோன்றியிருந்தால் அவன் படாதபாடு பட்டிருப்பான். உண்மையில் அவரது காலால் உதைபட்டிருப்பான்! இதில் சந்தேகமேயில்லை.”
வரலாற்றாசிரியர்களின் சந்தேகம்
பாரதியைச் சொற்பொழிவாற்ற வைத்த உலகநாத நாயகரின் இந்தக் கட்டுரையை ரா.அ. பத்மநாபன் பிற்காலத்தில் ‘பாரதியைப் பற்றி நண்பர்கள்’ என்னும் நூலில் தொகுத்தளித்திருந்தார். எனினும் முதன்மையான பாரதி வரலாற்றாசிரியர்கள் சிலர் இதை நம்பகமானதாகக் கொள்ளவில்லை.
சொற்பொழிவு நடந்த ஆண்டு, மாதம், நாள் ஆகிய கால விவரங்களை உலகநாத நாயகர் குறிப்பிட வில்லை. சொற்பொழிவின் சாரத்தையும் எடுத்துரைக்க வில்லை. “சாகாமலிருக்க அன்று அவர் சொன்ன வழியை இன்று உங்களுக்கு நான் சொல்ல விரும்பவில்லை. சொன்னாலும் ருசிக்காது” எனச் சுட்டிச் சொற் பொழிவின் கருத்தையும் எடுத்துரைக்காமல் சென்று விட்டார். இவையெல்லாம் இந்த நிகழ்வு குறித்த நம்பகத் தன்மையைக் கேள்விக் குள்ளாக்குவதால் இதைப் பாரதி வரலாற்றாசிரியர் சிலர் பொருட்படுத்தத் தயங்கி வந்தனர். இதுவரை இந்த நிகழ்ச்சி தொடர்பான வேறு எந்த ஆவணமும் பதிவும் கிடைக்காமல் இருந்துவந்தது. சொற்பொழிவின் சாரமும் புலப்படாமல் இருந்தது.
இந்த நிகழ்ச்சி நடந்தது உண்மை என்பதற்கான சமகால ஆவணங்களும், நிகழ்ச்சி நடந்த காலம், இடம், நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றவர் பெயர் முதலிய விவரங்களும், சொற்பொழிவின் சாரமும் இப்போது கிடைத்துள்ளன. நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னும் நடந்த பின்னுமாக இருமுறை ‘சுதேசமித்திரன்’ இதழில் (22-04-1921, 28-04-1921) இடம்பெற்ற பதிவுகளின் வாயிலாக அண்மையில் இவற்றைக் கண்டுபிடிக்கும் பேறு பெற்றேன்.
பாரதி மறைவதற்குச் சரியாக நான்கு மாதங்கள் பதினேழு நாள்களுக்கு முன் இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 1921 ஏப்ரல் 24-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்தக் கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. வன்னிய குல க்ஷத்திரிய மஹா சங்கத் தலைவர் மான் ராஜரத்தின நாயகர் என்பவர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். வன்னியத் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள ஏழைப் பள்ளிக்கூடச் சங்க இராப்பாடசாலைக் கட்டிடத்தில் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
சுதேசமித்திரன் செய்தி
சொற்பொழிவின் சாரத்தை, “ஸ்ரீமான் பாரதியார் ‘சுண்ணாம்பிலிருக்கின்றது சூக்ஷ்மம்’ என்றபடி நரம்புத் தளர்ச்சியால்தான் மரணம் நேரிடுகின்றதென்றும் பயத்தால் நரம்புத் தளர்ச்சி உண்டாகின்றதென்றும் அஞ்சாமலிருக்க வேண்டுமானால் உலகத்தில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாப் பொருள்களையும் ஒரே விதமாகக் கருத வேண்டுமென்றும் கூறி சபையினரைக் களிக்கச் செய்தார்” என ஒரு நிருபர் எழுதியதாக ‘சுதேசமித்திரன்’ இதழ், சொற்பொழிவு நடந்த பின் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அரிய பதிவின் வாயிலாக பாரதியார் வன்னியத் தேனாம்பேட்டையில் பேசிய பேச்சின் கருத்தை முதன்முறையாக அறிகிறோம். இந்தச் சொற்பொழிவின் கருத்து, பாரதி இறுதிக் காலத்தில் கொண்டிருந்த, தொடர்ந்து பல கூட்டங்களிலும் எடுத்துரைத்த கருத்துநிலையை நமக்கு உறுதிப்படுத்துகிறது. இறுதிச் சொற்பொழிவுகளுள் ஒன்றாக ஈரோட்டில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்னும் தலைப்பில் இதையொட்டியே பாரதி பேசியிருக்கிறார்.
இந்தச் சொற்பொழிவின் கருத்தானது, பாரதி அறுபத்தாறில் இடம்பெற்றுள்ள,
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்:
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்)
“நாடியிலே யதிர்ச்சியினால் மரண” மென்றான்.
கோபத்தால் நாடியிலே யதிர்ச்சி யுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தா மதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலா மவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாந் தழலாய் வேகும்
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.
(பாரதி அறுபத்தாறு)
என்னும் ஜகதீச சந்திர போஸின் கருத்துகளின் எதிரொலியாகவும் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ளது மனங்கொள்ளத்தக்கது.
மேலும் இந்தச் சொற்பொழிவைப் பாரதி நிகழ்த்துவதற்கு ஒருவாரம் முன் ‘சுதேசமித்திரன்’ இதழில் ஜகதீச சந்திர போஸ் தொடர்பாக வெளிவந்த ஒரு செய்தியும் பாரதியை இவ்வகையில் சிந்திக்கவும் பேசவும் தூண்டியிருக்கின்றது என்று கூறலாம். அந்தச் செய்தி:
மிஸ்டர் ஜகதீச சந்த்ர வஸு கண்டுபிடித்திருக்கும் புதிய புதுமை
“இந்தியாவில் பழமையினும் பழையதாகியதோர் உண்மையொன்றை இப்போது மான் வஸுவின் “ஸயன்ஸ்” முறைகளிலே நிரூபணம் செய்திருக்கின்றார். இதனால், ஏற்கெனவே இவருக்குப் பல்வகைகளில் கடப்பாடுற்றிருக்கும் மனித உலகத்தை இன்னும் அதிகமாகக் கடன்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே, சில வருஷங்களின் முன்பு ஜீவஜந்துக்களின் மரணமும், அதற்கு ஹேதுவாகிய நோயும் நாடிகளின் அதிர்ச்சியாலே விளைகின்றன என்று இவர் நிரூபித்திருப்பது நேயர்களுக்கு நினைப்பிருக்குமென நம்புகிறோம். இப்போது மேற்படி நாடி யதிர்ச்சியை மனோபலத்தால் தடுத்து விடலாமென்று கண்டுபிடித்திருக்கிறார்.” (சுதேசமித்திரன், 16 ஏப்ரல் 1921, ப. 4)
பாரதியின் இறுதிக்காலச் சிந்தனைகளில் ஜகதீச சந்திர போஸின் இந்தக் கருத்து முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது.
கூட்டத்தை ஏற்பாடு செய்து, பத்தொன்பது ஆண்டு களுக்குப் பின் நிகழ்வை நினைவுகூர்ந்த உலக நாத நாயகர் ஒன்றை மட்டும் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டார். ‘கூட்டம் நடந்த நாள் கோகுலாஷ்டமி’என்று. ராம நவமிதான் அந்த மாதத்தில் வருகிறது. பாரதிய அனுபவத்தில் நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். அவரோடு பழகிய சமகாலத்தவர்கள் இல்லாத ஒன்றைச் சொல்வதில்லை. ஆனால், நெடுங்காலம் சென்று நினைவுகூர்வதால், ஈடுபாட்டால், உணர்ச்சி வசத்தால் சற்றே மிகையிருக்கும்; காலம் முதலிய விவரப் பிழைகள் இருக்கும். ஆனால், அடிப்படை உண்மை தவறுவதில்லை.
பாரதியார் ‘சாகாமலிருக்கும் வழி’ என்ற விஷய மாய்ப் பேசப்போகின்றார் என்பதைக் கேள்விப்பட்டு, “சாகாமலிருக்கும் வழியைத் தெரிந்துகொண்டு நெடுங் காலம் சுகமாய் இருக்கலாம் எனப் பலர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்” எனச் சுதேசமித்திரன் நிருபர் கூட்ட நிகழ்வை 28-04-1921 அன்று பதிவு செய்திருந்தார். ஆனால் என்ன செய்ய? கேட்டவர்களில் பலர் நெடுங் காலம் சுகமாக வாழ்ந்திருக்கின்றனர். உபதேசித்த பாரதியைத்தான் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் நாம் இழந்துவிட்டோம்!
ய.மணிகண்டன்,
தமிழ்ப் பேராசிரியர், பாரதி ஆய்வாளர்,
தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT