Published : 14 Jan 2023 06:45 AM
Last Updated : 14 Jan 2023 06:45 AM
தமிழின் உச்ச எழுத்தாளர்கள் சுமோ, நிசா, கனுஷ் என மூவரும் மேடையில்… அவர்கள் கையில் இருப்பது… ஏதோ மங்கலாகத் தெரிகிறதே… ஆ! அது நான் எழுதிய புத்தகம் அல்லவா. ஆஹா! என் வாழ்நாள் கனவு நினைவாகும் தருண…
கட்!
சை! இப்படி அநியாயமாகக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டும் நேரத்தில்… என்ன இது? தமிழின் முந்தைய உச்சங்களான சாலனும் தச்சனும் நிற்கிறார்கள். யாருக்கோ கேடயம் போன்ற ஒன்றை அவர்கள் கொடுத்துக்கொண்டிருப்பது போலிருக்கிறதே. ஆமாம். பவிஷ்ய அகாதமி வழங்கும் சிஷ்ய புரஸ்கார்… யாருக்கு? என்னைப் போல் ஒருவன்… அட, சாட்சாத் நானேதான். எனக்கா வழங்குகிறார்கள். நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லையே.
ஆரம்பிக்காவிட்டால் என்ன? காளிதாசர் நாக்கில் காளி தேவியும், பேசவே முடியாத வித்யாபதிக்கு சரஸ்வதி தேவியும் கவித்திறத்தை அருளினார்கள் என்றால் சிலாகிக்கிறீர்கள். நானெல்லாம் எழுத்தாளர் ஆகக் கூடாதா? இதெல்லாம் ரஜினி படப் பாட்டிலும், விக்கிரமன் படக் கதையிலும்தான் நடக்கும் என்று கிண்டலாகப் பார்க்காதீர்கள். சுருக்கா ஒரு ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திருவோமா.
நிறைய பேரைப் போல் நானும் கேக்கரான் மேக்கரான் கம்பெனியில் கோடிங்தான் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கும் என் பள்ளித் தோழி நந்தினிக்கும் சின்ன வயசிலிருந்தே எப்போதுமே போட்டி இருக்கும். போட்டித் தேர்வு எழுதி அரசு எழுத்தராகிவிட்ட அவள், அங்கவை என்கிற புனைபெயரில் கவிதை, கதைகளும் எழுதிப் புகழ்பெற ஆரம்பித்துவிட்டாள். ஒரு எழுத்தரே எழுத்தாளர் ஆகும்போது அமெரிக்க கம்பெனியையே ஆட்டிப்படைக்கும் கோடிங் எழுதும் நான் எழுத்தாளராகக் கூடாதா?
அதிகாலை, அந்திமாலை, மந்தகாச வேளை, அர்த்தஜாமம் என நானும் நாலு கவிதை எழுதி முகநூலில் தூக்கிப் போட்டேன். நண்பர்கள் படித்துவிட்டுச் சும்மா இருந்தால்தானே. கியூட்டான நாய்க்குட்டியைக் கொஞ்சுவதுபோல் பாராட்டித் தள்ளிவிட்டார்கள். இன்ஸ்டாவில் எழுதிய ஸ்டோரீஸுக்கோ, உலக மூலைகளில் இருந்தெல்லாம் வாழ்த்து பனிக்கட்டியாய்ப் பொழிந்து குளிர்வித்தது. இது போதாதா?
அப்போதுதான் என் ஃபிரெண்ட் நட்டுவாக்காலி நரேஷும், வீரக்குமாரனும் ‘ப்ரோ, இதை ஏன் ‘மாவி’க்கு அனுப்பக் கூடாது?’ எனக் கேட்டு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். ‘டேய், மாவி எல்லாம் எவ்ளோ பெரிய பத்திரிகை. எங்க அப்பா கதை கதையா எழுதி ஸ்டாம்பு ஒட்டி போடச் சொல்லி என்கிட்டதான் கொடுத்தனுப்புவார். ஆனா, கடைசிவரை மாவியில் அவர் கதை வரலை. என் கதையெல்லாம் எப்டிறா வரும். அதெல்லாம் பேராசை’ என விரக்தியாகப் பேசினேன்.
‘அது அந்தக் காலம் மச்சி. மாவிக்கு அனுப்பிட்டு நாமே ஏன் காத்துக் கெடக்கணும். மாவியை நாம காக்க வைப்போம்’ என வீரக்குமாரன்தான் எனக்குப் புதிய கதவைத் தெறந்து வெச்சான். ‘இதோ பாரு ரீடிங் ரூம், மகிழினி, தணல். இந்த இணையதளங்கள்ல எழுதலாமே’ என்றான். ‘அதெல்லாம் ரொம்ப சீரியஸா இருக்கு மச்சான்’.
‘சரி, இந்த இருக்கு பாரு ‘கிஞ்ச்’. இதுல எழுது’.
‘கிஞ்சா?’
‘இது ஒரு ரீடிங் ஆப். நம்ம கோடிங் ஆசாமிங்க தான் இங்க ரீடர், ரைட்டர், புரூப் ரீடர் எல்லாமே’.
கட்!
கிஞ்ச் தொடர் இன்ஸ்டன்ட் ஹிட். அப்போதுதான் நங்கூரம் பதிப்பகத்திலிருந்து கூப்பிட்டார்கள். ‘சார்! கிஞ்ச்ல எழுதுறீங்க இல்ல, அதை நாங்க புஸ்தகமா போடுறோம்’. ‘இல்லீங்க, அதைப் புத்தகமாக்க காஷன் பிரெஸ் ஸோட ஏற்கெனவே அக்ரிமென்ட் போட்டுட்டேன்’.
‘ஃபேஸ்புக்குல நீங்க எழுதறதெல்லாம் ஃபாலோ பண்ணிட்டுதான் வர்றோம். நீங்க ‘வாத்தியாரோட’ மறுபிறவி சார். அதையெல்லாம் தொகுத்துத் தர முடியுமா?’
‘எதுக்கு?’.
‘புத்தகம் போடத்தான்’.
கட்!
‘சார், நங்கூரத்திலேர்ந்து கூப்பிடுறேன். உங்க ‘சாலை ஆனாலும் காலை’ முதல் எடிஷன் சென்னை புக் ஃபேர்ல வித்துத் தீர்ந்திடுச்சு சார். இப்போ நீங்களும் ஒரு சக்சஸ்ஃபுல் ரைட்டர் ஆகிட்டீங்க’.
‘நானே அம்பது காப்பி வாங்கி என் ஃபிரெண்ட்ஸ், எதிர்த்த வீட்டுக்காரரு, ஒண்ணு விட்ட சொந்தம் எல்லாருக்கும் கொடுத்தேன்’.
‘அப்படியா சூப்பர். உங்களோட ஒவ்வொரு புக்கும் ஒரு முத்து, அது எங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்குது சொத்து’.
‘அப்புறம்… இந்த ராயல்டி…’
‘ஆமா, வித்தது நூறு. உங்க ராயல்டி டென் பெர்சன்ட். ரெண்டாயிரம் ரூபா ஜிபே பண்ணிர்றோம்’.
‘என்னது.. நூறு புத்தகம்தானா? நானே அம்பது வாங்கியிருக்கேன். நீங்க என்ன ஏமாத்துறீங்க’.
‘சார், அக்மார்க் உண்மை சார். முதல் எடிஷன் நூறுதான் போட்டோம்.
‘நீங்க என்ன ஏமாத்துறீங்க. போதும், இதோட நம்ம சகவாசத்த முடிச்சுக்கலாம்’.
கட்!
அடுத்த நாள் பி.ஓ.டி. பகவான் கம்பெனிக்குப் போனேன். ‘கவிராஜன் எழுதின பாவியச் சிறுகதைகள்’ இருந்த பென் டிரைவை நீட்டினேன். ‘நீங்கதான் கவிராஜனா?’ ‘இல்ல. நான் வந்தியதேவன். கவிராஜன் புக்கெல்லாம்தான் நாட்டுடைமை ஆக்கிட்டாங்களே’.
‘ஆமா, நாங்களே இதை பதினைந்து கம்பெனிக்கு பிரின்ட் பண்ணிக் கொடுத்திருக்கோம். இப்போ, பதினாறாவது ஆளா நீங்களும் அதையே கொண்டுவந்திருக்கீங்க’.
‘கீழே பாருங்க, தொகுப்பாசிரியர்னு என் பேரு போட்டிருக்கு. நான்தான் இதைத் தொகுத்தேன். பத்து காப்பி போட்டுக் கொடுத்திடுங்க. வேடந்தாங்கல் புக் ஃபேர் வேற வருது’.‘சரி சார், அடுத்த தெருவுல எங்களோட டிஃபன் கடை இருக்கு. அங்க டீயும் வடையும் சாப்பிட்டுட்டு வாங்க, ரெடி பண்ணி வைக்கிறோம்’.
சுலைமானி டீயைக் குடித்துக்கொண்டிருந்த போது, என் மனம் எங்கோ பறந்தது. நான் பாட்டுக்குக் கோடிங் எழுதிக்கொண்டிருந்தேன். இப்படி என்னை நிற்க வைத்துவிட்டாளே அந்த அங்கவை. இல்ல, நந்தினி: ‘நான் எத்தனை தலையணை புத்தகம் போட்டிருக்கிறேன், பார்த்தாயா. என்னைப் போல் முன்நவீனத்துவ தமிழ்க் காவியம் படைக்க உன்னால் முடியுமா என சவால் விட்டாளே’. வேக வேகமாக சுலைமானியை உறிஞ்சிவி்ட்டு, வடை பேப்பரைக் கசக்கி எறிந்துவிட்டுப் புறப்பட்டேன்.
பி.ஓ.டி. பகவான் கடைக்காரர், ‘கவிராஜன் சிறுகதை பாவிய’த்தை நீட்டினார். வாங்கிக்கொண்டு வெளியே வந்து சொல்லிக்கொண்டேன். யேய்! எல்லாரும் பாத்துக்கங்க. நானும் வெற்றிகரமான எழுத்தாளர்தான்! நானும் வெற்றிகரமான எழுத்தாளர்தான்!’ இதே வீராப்புடன் வேடந்தாங்கல் புக் ஃபேருக்குப் புறப்பட வேண்டும். அங்கே புத்தக வெளியீட்டு விழா நடத்திவிட வேண்டும்.
(முதல் பாகம் முடிந்தது. புத்தக வெளியீட்டுப் படலம், விருதுக் காதை எல்லாம் அடுத்தடுத்த பாகங்களில்…)
- சித்திரகுப்தன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT